sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விடியலுக்கு இல்லை தூரம்!

/

விடியலுக்கு இல்லை தூரம்!

விடியலுக்கு இல்லை தூரம்!

விடியலுக்கு இல்லை தூரம்!


PUBLISHED ON : நவ 13, 2022

Google News

PUBLISHED ON : நவ 13, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு ஆண்டுகளாக, வேலை கிடைக்காததால், மன உளைச்சலில் தவித்த, சந்திரன், அம்மா கொடுத்த காபியை குடித்தபடி, ''இன்னிக்கு கலந்துக்கற, 'இன்டர்வியூ'வில் தேர்ச்சி பெற்று, வேலையில் சேரணும்ன்னு நினைக்கிறேம்மா,'' என்றான்.

''நிச்சயம் நீ நினைக்கிறது நடக்கும்.''

''கடவுள்கிட்ட வேண்டிக்கோம்மா,'' என்றான்.

''நான் வேண்டாத தெய்வம் இல்லைடா; ஆனாலும், கடவுள் இன்னும் கண்ணை திறக்கலையே, சந்திரா.''

''அம்மா, எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். நம் நிலைமை, இப்படி ஆனதுக்கு காரணம், சித்தாப்பாவுக்கு, அப்பா செஞ்ச கொடுமையாக கூட இருக்கலாம் இல்லையா... படிப்பறிவு இல்லாத சித்தப்பாவின் சொத்தை, ஏமாற்றி, பிடுங்கிக்கிட்டது ஒரு காரணம்.

''அவர் வயித்தெரிச்சல், அந்த குடும்ப சாபமோ என்னவோ, மலருக்கு இன்னும் கல்யாணம் தகையலை. ஜெர்மனியில், நல்ல வேலையில் இருந்தேன். ஒரே நேரத்தில் உங்க இரண்டு பேருக்கும் விபத்து ஏற்பட்டதால, இந்தியா திரும்பும்படி ஆயிடுச்சு,'' என்றான்.

''எனக்கும் மனசை அரிச்சுக்கிட்டு தான் இருக்கு. ஒரே பொண்ணு, பிழைப்புக்கு சொற்ப நிலத்தில் விவசாயம். மேல் வருமானத்துக்கு டீ கடை நடத்தினார், உன் சித்தப்பா.

''நீ சொல்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். கிராமத்தில் விசாரிச்சப்போ, அவங்க, வெளியூர் போய் விட்டதா சொன்னாங்க. இப்போ எங்கே, எப்படி இருக்காங்களோ?

''பேரு தான் தர்மலிங்கம். தர்ம சிந்தனை துளி கூட கிடையாது, உங்க அப்பாவுக்கு. ஒரு தனியார் கம்பெனியில வேலை. தம்பியை அநியாயமா ஏமாத்தி வாங்கின சொத்து, பாழா போன சூதாட்டம் மூலம், வந்த வழியே போச்சு.

''ஓய்வுக்கு பின், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்'பில் கவனமே தவிர, வேறு சிந்தனை இல்லாத ஜென்மம். என்றைக்காவது, ஒரு நாள், சித்தப்பா, சித்தி, அவங்க பெண்ணை பார்த்து மன்னிப்பு கேக்கணும்டா,'' என, சிவகாமி வருத்தத்துடன் சொல்ல, நெகிழ்ச்சியானான், சந்திரன்.

இவர்கள் படும் வேதனை பற்றியோ, மலருக்கு கல்யாணம் நடக்காதது பற்றியோ, சந்திரனுக்கு நல்ல வேலை கிடைக்காதது பற்றியோ, கவலை இல்லை. அன்றும் வழக்கம் போல், 'வாட்ஸ் ஆப்' பார்த்து கொண்டிருந்தார், தர்மலிங்கம்.

குளித்து தயாராகி, வண்டியை கிளம்பிய சந்திரனிடம், ''டிபன் சாப்பிட்டு போடா,'' என்றாள், சிவகாமி.

''வேண்டாம்மா, எனக்கு பசிக்கல; போயிட்டு வரேன்.''

காலம் இப்படியே போய் விடுமோ என்ற அச்சம், சந்திரனுக்கு மட்டுமல்ல, சிவகாமிக்கும், மனதில் அரிக்க ஆரம்பித்தது.

சந்திரன் போடாத விண்ணப்பமும், போகாத, 'இன்டர்வியூ'வும் கிடையாது. நடுவில், 'கொரோனா'வால் எங்கும் போக முடியவில்லை.

எங்கே, 'இன்டர்வியூ' போனாலும், 'நீங்க படித்துள்ள படிப்பு, 'ஓவர் குவாலிபிகேஷன்' சார். எங்களுக்கு சரி வராது...' என்றும், சில இடங்களில், 'சொல்லி அனுப்பறோம்...' என்றும், சில கம்பெனிகளில், 'ஷார்ட் லிஸ்டில் வைச்சுருக்கோம். நாங்களே கூப்பிடுகிறோம்...' என்றும் கூறினர்.

இது மாதிரியான வசனங்களை கேட்டு சந்திரனுக்கு அலுத்து போனது.

ஜெர்மனியில் இருந்த நாட்களில், அந்த நாட்டு கலாசாரமும், பழக்க வழக்கங்களும், அவனுக்கு ரொம்ப பிடித்து போனது. எதிலும் நேர்மையும், ஈடுபாட்டையும் பார்த்த சந்திரன், தன்னையும் அவ்வாறே வளர்த்து கொண்டான்.

நிர்வாக அனுபவமும், நன்னடத்தை சான்றிதழ் இருந்தும், ஒரு பிரயோசனமில்லை. அதிகப்படியான தகுதி என்ற வசனம் தான், எங்கு போனாலும்.

'என்ன உலகம் இது, நேர்மைக்கும், திறமைக்கும் மதிப்பில்லை. எங்கு போனாலும் சிபாரிசு தான். சிபாரிசால் மட்டுமே வேலை வாங்கி கொள்ளும் நபர்கள் மத்தியில், நான் ஒரு செல்லாகாசு ஆகி விட்டேனே... உழைக்க தயாராக இருந்தும், வாய்ப்பே கிடைக்காத வாழ்க்கை.

'மலர் கல்யாணம், அப்பா, அம்மா மருத்துவ செலவு, இதற்கெல்லாம் என்ன செய்ய போகிறேன்... சம்பாதித்த பணத்தில் ஒரு வீடு; அதோடு மருத்துவ செலவு. இரண்டு ஆண்டுகளாக சமாளிச்சாச்சு...' என, மனதுக்குள் புலம்பி தவித்தான், சந்திரன்.

பிரமாண்ட கட்டடத்தின், 10வது மாடியில் இருந்த, ஐ.டி., கம்பெனியின் உள்ளே நுழைந்து, வரவேற்பாளியிடம், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அடுத்த பத்தாவது நிமிடம், எச்.ஆர்., அழைப்பு விடுத்தார். எச்.ஆர்., கேட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்த விதம், அவர்களுக்கு பிடித்துள்ளது என்பதை தெரிந்து கொண்டான். இருப்பினும், முடிவு எப்படி இருக்குமோ என்ற கவலை, அவன் முகத்தில் தெரிந்தது.

''ஓ.கே., சந்திரன். உங்க சுயவிபரம் பிடிச்சிருக்கு; இன்னும் ஓரிரு நாளில் சொல்கிறோம்,'' என்றார்.

வழக்கமான வசனம் தானே இது. வெறுப்புடன் வெளியே வந்தவனுக்கு, மனசு மற்றும் உடம்பு இரண்டும், சோர்வை கொடுத்தது. காலையில் சாப்பிடாமல் வந்ததால், தலைவலியும் வந்தது.

காபி சாப்பிட, ஹோட்டல் ஒன்றின் வாசலில் வண்டியை நிறுத்திய போது, உரசி நின்றது, ஒரு கார்.

''சந்திரன் அண்ணே...'' என்றபடி காரிலிருந்து இறங்கினாள், நிலா.

காரை, 'பார்க்' செய்து, காபி சாப்பிட அழைத்தாள், நிலா; தொடர்ந்தான், சந்திரன்.

கூட்டம் இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்தனர்.

''என்ன, எப்படி இருக்கீங்க... அக்கா மலருக்கு கல்யாணம் ஆச்சா... பெரியம்மா, பெரியப்பா எப்படி இருக்காங்க?'' என்றாள், நிலா.

இன்று காலை தான், சித்தப்பா குடும்பம் பற்றி அம்மாவோடு பேசியது ஞாபகத்துக்கு வந்தது. கொஞ்சம் கூட காழ்ப்புணர்ச்சி காட்டாமல், ஒரே மூச்சில், பட படவென நிலா பேசிய விதம், சந்திரனுக்கு பிடித்திருந்தது.

''ஆமாம் நீங்க, ஜெர்மனியில் இருக்கிறீங்கன்னு உங்க நண்பர் மூலம் கேள்விப்பட்டேன்.''

''அது ஒரு பெரிய கதைம்மா...'' என்று, நடந்த விஷயத்தை சுருக்கமாக சொன்னான், சந்திரன்.

''கேட்கவே கஷ்டமா இருக்குண்ணே.''

''ஆமாம், என் கதை கிடக்கட்டும்... எப்படி இருக்கே, கிராமத்தில் இருந்தவள் நீ, ஆளே மாறி போயிட்டியே... சித்தப்பா, சித்தி சவுக்கியமா... கிராமத்தை விட்டு வந்துட்டதா கேள்விப்பட்டேன்,'' என்றான்.

''எல்லாத்தையும் நிதானமா சொல்றேண்ணே... கிராமத்திலிருந்து இங்கு வந்து அஞ்சாறு வருஷம் ஆச்சு. நான் எம்.பி.ஏ., முடிச்சப்ப, அப்பாவுக்கு உடம்பு முடியாம போச்சு. அம்மா, சில வீடுகளில் வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க.

''ஒரு நாள், பேப்பரில், 'பயோ டீசல்' பத்தி படிச்சேன். அதை பத்தி, 'புராஜக்ட்' தயார் பண்ணி, வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தேன். என் வகுப்பு தோழிகள் இருவரும், நானும், 'பயோ டீசல் பிசினஸ்' பண்றோம்.''

''என்ன நிலா, 'பயோ டீசல்'ன்னு என்னென்னமோ சொல்ற... என், ஐ.டி., மூளைக்கு ஒண்ணும் புரியலியே...''

''ஒண்ணுமில்லை, பெரிய ஸ்டார் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை இரண்டாவது முறை பயன்படுத்தாமல் வெளியில் விற்று விடுவர். அதை நாங்க விலைக்கு வாங்கறோம்.''

''அது சரி, ஹோட்டல்களில் பயன்படும் எண்ணெய் வாங்கறது ஓ.கே., வீட்டில் உள்ளவங்க அவ்வளவு லேசில ஏத்துக்க மாட்டாங்களே, அவங்களை எப்படி, 'கன்வின்ஸ்' பண்ணின.''

''அதாவது, உபயோகித்த சமையல் எண்ணெயின் தீமைகள் பற்றி, ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த எண்ணெயை பயன்படுத்தினால் உடம்புக்கு வரும் வியாதிகள் பற்றி சொல்லச் சொல்ல, அவர்கள் புரிந்து கொண்டனர்.

''பெரிய பிளாட்களில் இருக்கிறவங்கிட்ட, லிட்டர், 20 - 25 ரூபாயும், பெரிய ஹோட்டலில், 30 ரூபாய். சிறிய ஹோட்டல்கள், தெரு ஓர தள்ளு வண்டி கடையின், வடை, பஜ்ஜி எண்ணெய் உட்பட, எல்லாவற்றையும் வாங்கி, என் பேக்டரியில் பிரித்து, பின் ராணிபேட்டைக்கு அனுப்புவோம்.

''அங்கு, அது, 'பயோ டீசல்' என்ற எரிபொருள் ஆக மாற்றப்படுகிறது. முதல் ஆறு மாசம் ரொம்ப சவாலாகத் தான் இருந்தது. 'கார்பரேட் ஸ்டைலில்' ஒவ்வொரு குழுவுக்கும் சீருடை, அடையாள அட்டை, முக்கியமா, 'இ - வெகிகிள்' கொடுத்து, ஹோட்டலில், 'கலெக்ட்' பண்ண ஒரு குழு...

''வீடுகள், பிளாட்ஸ்களுக்கு ஒரு குழு; பைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு ஒரு குழு. முக்கியமா, இது ஒரு பகுதி நேர வேலை. நிறைய கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வேலை கொடுக்கிறேன். தங்களின் செலவுக்கு, இந்த வேலையை செஞ்சு சம்பாதிக்கிறாங்க.

''தினமும் காரை எடுத்து போய் ஒவ்வொரு இடமா, 'மானிட்டர்' பண்றேன். அரசாங்கம் மானியம் தருது. 'ருக்கோ' திட்டம் மூலம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், 'பயோ டீசல்' ஆக மாறுகிறது.

''இந்த, 'பயோ டீசல்' எரிபொருள் ஆக பயன்படும்போது, சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது. கட்டுமான வேலை, குவாரி போன்ற இடங்களில், 'பயோ டீசலை' பயன்படுத்திட்டு வர்றாங்க; விலையும் மிக குறைவு; அரசாங்கமும் நல்ல ஆதரவு கொடுக்குது.

''இதில் இரண்டு விஷயத்தை, நாம் கவனிக்கணும். ஒன்று: 'இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை உபயோகப்படுத்த கூடாது...' என்று, உணவு தர கட்டுப்பாடு ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, நமக்கு அந்த எண்ணெய் கிடைக்க வழி செய்கிறது.

''இரண்டாவது: அப்படி வாங்கப்படும் எண்ணெயை, 'பில்டர்' செய்து, 'பயோ டீசல்' உற்பத்தி செய்யும் ஆலைக்கு அனுப்பப்படுகிறது. 'பயோ டீசல்' எரிபொருள் பயன்படுத்தி வரும் புகை, சுற்று சூழலை கட்டுப்படுத்துகிறது. இப்படி நல்ல விஷயங்கள் அடங்கிய பிசினஸ்,'' என, கூறி முடித்தாள்.

''ஆமாம் நிலா, நீ சொல்றது நுாத்துக்கு நுாறு உண்மை.''

''இரண்டே ஆண்டில் நான் ஒரு தொழில் அதிபர் ஆகிட்டேன்.''

''ரொம்ப சந்தோஷமா இருக்கு, நிலா.''

''உங்க குடும்பத்துக்கு, எங்க அப்பா செஞ்ச கொடுமைனால தான், நாங்க இப்படி இருக்கோம்; என்னை மன்னிச்சிடு. அம்மாவும் உங்கள பார்த்து, மன்னிப்பு கேட்கணும்ன்னு இன்னிக்கு காலையில் கூட சொன்னாங்க.''

''என்னண்ணே, மன்னிப்பு அது இதுன்னு... பெரியவங்க சண்டை பத்தி எதுவும் பேச விரும்பல; அன்னிக்கே நாங்க அதை மறந்துட்டோம். நம் குடும்பத்துக்குள்ள, கிட்டத்தட்ட, 15 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுருச்சு.

''இனி, பகைமை வேண்டாம். இளம் தலைமுறை நாம் ஒற்றுமையா இருப்போம். மலர் அக்காவை வரச்சொல்லுங்க, கல்யாணம் ஆகிற வரை, 'ஆபீஸ் அட்மின்' வேலை பார்க்கட்டும்.''

''எப்பேர்பட்ட மனசு நிலா உனக்கு,'' நெகிழ்ந்தான், சந்திரன்.

''அட விடுங்கண்ணே... உங்க திறமை, புத்திசாலித்தனத்தை உங்க நண்பர் மூலம் கேள்விப்பட்டிருக்கேன். என்னை மாதிரி நீங்களும் ஜெயிக்கணும்ன்னு மனப்பூர்வமாக நினைக்கிறேன்.

''இந்த தொழிலை இன்னும் விரிவாக்கம் செய்ய, 'வெப்சைட், ஆப்' உருவாக்கணும். 'ஆன் லைன் பிசினஸ்' பண்ணணும். கம்பெனியை, தமிழ்நாடு முழுவதும் மேலும் விரிவுபடுத்த, ஒரு ஆள் தேவை. உங்க திறமைக்கு தகுந்த சம்பளமும், மேனேஜிங் டைரக்டர் பதவியும் தர, நான் தயாரா இருக்கேன்.

''இரண்டு ஆண்டுகள் முன்பு வரை, 'பயோ டீசல் பிசினஸ்' பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனா, இன்னிக்கு, சென்னையில் புற்றீசல்கள் போல் நிறைய கம்பெனி முளைச்சுருக்கு. அவங்க மத்தியில நாம கட்டாயம் ஜெயிக்கணும், என்ன சொல்றீங்க... உங்க விடியலுக்கு இல்லை துாரம்ன்னு நினைச்சுக்கோங்கண்ணே,'' என்றாள்.

''ஆமாம் நிலா, என்னை விட நீ சின்ன பொண்ணு. ஆனா, எவ்வளவு அனுபவம். வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக அருமையாக புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், எனக்கும் புரிய வைச்சு, என் கண்ணையும் திறந்துட்டே.

''இவ்வளவு நாள் வேலை வேலைன்னு அலையாம, சுய தொழில் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கும். உனக்கு தோள் கொடுக்க நான் மட்டுமல்ல, மலரும் தயார் நிலா,'' என்றான், சந்திரன்.

''என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கண்ணே,'' என்று சொல்லி, சந்திரன் காலில் விழ, அவர்களிடத்தில், மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது.

ஆனந்த சீனிவாசன்






      Dinamalar
      Follow us