தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அல்லல் நீங்க...

அல்லல் நீங்க...

அல்லல் நீங்க...


PUBLISHED ON : ஏப் 05, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாதையெல்லாம் மாறி வரும், பயணம் முடிந்து விடும்; மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்துவிடும்...' என்று பாடியுள்ளார், கவியரசர் கண்ணதாசன்.

அவ்வாறு, மாறுவதை புரிந்து கொண்ட இருவர் கதை இது...

துங்கபத்திரா நதிக்கரையில், தர்மாதித்தபுரம் எனும் ஊரில், எல்லயாஜி என்பவர் இருந்தார். செல்வவான்; தர்மவான்; சிவ பக்தியில் தலை சிறந்தவர். யாராவது துயரப்பட்டால், அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து, துயர் துடைப்பதில் ஆர்வம் உள்ளவர்.

மனதாலும் பிறருக்கு கெடுதல் நினைக்காத அந்த உத்தமரின் மனைவி, விசாலாட்சி. பெயருக்கு ஏற்றாற்போல், கருணை நோக்கம் உள்ளவர். அவர்களுக்கு குழந்தையில்லை. மழலை செல்வம் இல்லாத அத்தம்பதியர், அதற்காக மனம் வருந்தாமல், தங்கள் நற்செயல்களை இடைவிடாமல் செய்து வந்தனர்.

காலங்கள் கடந்தன. மனைவியின் அனுமதியோடு, காடு சென்று, தவத்தில் ஈடுபட்டு, சிவபெருமானின் திருவடிகளை அடைந்தார், எல்லயாஜி. அவர் மனைவியோ, கணவரின் உத்தரவுப்படி, செல்வத்தையெல்லாம், தெய்வ திருப்பணி, தர்ம கைங்கரியங்கள், கதாகாலட்சேபம் என, செலவு செய்தார்.

ஒருநாள், கதாகாலட்சேபம் செய்பவர், குந்தவனம் எனும் திருத்தலப் பெருமையை கூறினார். அதை கேட்ட விசாலாட்சி, அங்கு சென்று தங்கி, தான, தர்மங்கள் செய்ய துவங்கினார்.

அப்போது, உடம்பெல்லாம் தொழுநோயுடன் மஞ்சரி என்ற பெண், விசாலாட்சியிடம் வந்து புலம்பினாள். அவளை மிகுந்த கருணையோடு உபசரித்தாள், விசாலாட்சி.

தான் செய்த பாவங்களையெல்லாம் பட்டியலிட்டு, 'அம்மா... இவ்வளவு பாவங்களும் தான், என் உடம்பில் நோயாக வெளிப்பட்டு, அழ வைக்கிறது...' என்று சொல்லி புலம்பினாள், மஞ்சரி.

அவளை கருணையோடு பார்த்த, விசாலாட்சி, அங்கிருந்த குருந்த மர அடியில் இருந்து மண்ணை எடுத்து, மஞ்சரியின் கையில் கொடுத்து, 'இதை பூசிக்கொண்டு, ஆன்மநாதரை தரிசனம் செய்...' என்றார்.

அழுதபடியே மஞ்சரி, 'அம்மா... கடும் ரோகத்தின் காரணமாக, என் பலம் பெருமளவில் குறைந்து விட்டது. நீங்கள் சொன்னபடி, ஆன்மநாதரை போய் தரிசிக்க இயலாது. எனக்கு நற்கதி கிடைக்க, உபதேசம் செய்...' என, வேண்டினாள்.

'ஆன்மநாதா... தீர்த்தநாதா... சிவ க்ஷேத்திர நாதா...' எனும் ஆன்மேசரின் நாமத்திரங்களை உபதேசித்தார், விசாலாட்சி.

உபதேசம் பெற்ற மஞ்சரி, அதன்படியே அம்மூன்று நாமங்களையும் ஜபம் செய்து, நற்கதி அடைந்தாள்.

குருந்த மரத்தடியில் குரு வடிவாக இருந்து, மாணிக்கவாசகருக்கு, சிவபெருமான் உபதேசித்த தலமான திருப்பெருந்துறையில் நடந்த இந்நிகழ்வை, 'திருப்பெருந்துறை மான்மியம்' விரிவாகக் கூறுகிறது.

துங்கபத்திரா நதிக்கரையில், தர்ம மயமாகவே வாழ்வை நடத்தி வந்த, விசாலாட்சி, திருப்பெருந்துறையை பற்றி கேள்விப்பட்டு, அங்கு வந்து, ரோகத்தால் துடித்த ஒரு ஜீவனுக்கு, நற்கதி அளித்தாள். இவ்வரலாறு, துவக்கமும் தெரியாமல், முடிவும் தெரியாமல், இது தான் பாதை, இது தான் பயணம் என்பதும் தெரியாமலிருக்கும் மனித குலத்திற்கு, ஒரு பாடம்.

அனைத்தையும் மறந்து, ஒரு சில விநாடிகளாவது தெய்வத்தை நினைப்போம்; அல்லல்கள் நீங்கும்.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us