PUBLISHED ON : ஜன 01, 2017

ஜன., 8 - வைகுண்ட ஏகாதசி
சொர்க்கம் என்பது வேறு எங்கும் இல்லை; அது, நம் மனதில் தான் இருக்கிறது. அதை, வாழும் காலத்திலேயே அனுபவிக்கலாம் என்பது தான், சொர்க்க வாசல் திறப்பின் தத்துவம்.
ஆழ்வார்களால் பாடல் பெற்ற, 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது, திருச்சி அருகில் உள்ள ஸ்ரீரங்கம். இங்கு பள்ளி கொண்ட கோலத்தில் மகாவிஷ்ணு காட்சியளிப்பதால், இவ்வூரை, முன்பு, 'ஸ்ரீரங்கநாதன் பள்ளி' என்றே அழைத்தனர்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள இவ்விக்ரகத்தை, பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னன் இக் ஷ்வாகு, பிரம்மாவிடம் இருந்து பரிசாகப் பெற்றான்.
இக் ஷ்வாகுவின் வம்சா வழியில் வந்தவரே, ராமபிரான். அவர், அச்சிலையை, ராவணனின் சகோதரனான, விபீஷணருக்கு, தன் பட்டாபிஷேக பரிசாகக் கொடுத்தார்.
விபீஷணர், அதை பிராண வாக்ருதி எனும் விமானத்தில் வைத்து, ஆகாய மார்க்கமாக எடுத்துச் சென்ற போது, காவிரி நதிக்கரையில் கோவில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு, உடல் சோர்வை ஏற்படுத்தினார். அதனால், அரங்கம் எனும் மேட்டுப்பகுதியில், பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணரால், மீண்டும் அவ்விடத்தில் இருந்து விக்ரகத்தை எடுக்க முடியவில்லை.
பின், சோழமன்னன் தர்மவர்மன் அவ்விடத்தில் கோவில் கட்டினான்; அக்கோவில் சிதிலமடைந்து, காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில் வந்த கிள்ளிவளவன், ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றவன் மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி, மன்னனிடம், 'மன்னா... பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு, இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டுள்ளார்; ஸ்ரீரங்கம் எனும் திருத்தலம் இது...' என்று ரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது, பெருமாள் தோன்றி, தன் இருப்பிடத்தை, கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார். மெய்சிலிர்த்த மன்னன், அங்கே அழகிய கோவிலை எழுப்பினான்.
இக்கோவிலில், மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி திதியன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும்; இதை, 'பரமபதம்' என்பர். வாழ்க்கை என்பது, ஏற்ற - இறக்கங்கள் கொண்டது. பரமபத விளையாட்டில் ஏணிகளும், பாம்புகளும் இருக்கும். ஏணி இருக்கும் இடத்துக்கு, காய் நகர்ந்தால், உச்சத்துக்குப் போகும்; பாம்பு இருக்கும் கட்டத்துக்குப் போனால், அதனிடம் கடிபட்டு, கீழே இறங்கி விடும். வாழ்க்கையிலும் இதேமாதிரி தான் சில சமயங்களில், சறுக்கல் பெரிதாகவும், உயர்ச்சி அதிகமாகவும் இருக்கும். எப்படி இருந்தாலும், மனிதன் கலங்கவோ, கர்வம் கொள்ளவோ கூடாது.
ஆனால், பரமபத வாசல் வழியாக வரும் பெருமாள் நிலையானவர். அவரது திருவடி தரிசனம், நமக்கு நிலையான வாழ்வைத் தரும். அவரது திருவடியைப் பற்றினாலோ, இன்பமும், துன்பமும் ஒன்றாகவே தெரியும்; சொர்க்கம் நம் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வு தோன்றும். இதுவே, பரமபத வாசல் திறப்பு தத்துவம்.
வைகுண்ட ஏகாதசி விரதத்தை, எட்டு முதல், 80 வயது வரை உள்ளவர்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. விரதம் இருப்பவர்கள், முதல் நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ண வேண்டும்; ஏகாதசி நாளில் உண்ணுவதையும், உறங்குவதையும் தவிர்ப்பது நல்லது; அன்று, துளசி இலை பறிக்கக் கூடாது. பூஜைக்கு வேண்டிய துளசியை, முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
மறுநாளான துவாதசியன்று, சூரியோதயத்திற்குள் நீராடி, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பலவகை காய்கறிகள் மற்றும் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம் பெற வேண்டும்.
அகத்திக்கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். காலையில் உணவை முடித்து, பகல் முழுவதும் உறங்காமல், நாராயண நாமத்தை ஜெபிக்க வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து, வாழும் காலத்திலும், வாழ்க்கைக்குப் பிறகும், சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியம் பெறுவோம்!
தி.செல்லப்பா
