PUBLISHED ON : ஜன 01, 2017

அன்புள்ள அம்மாவிற்கு —
நான், 23 வயது ஆண்; என் வீட்டிற்கு அருகில், என் உறவுக்கார அண்ணன் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி, ஆறு மாதங்கள் ஆகின்றன. அவர் மனைவியின் வயது, 23; திருமணமான இரண்டு மாதங்களிலேயே அப்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்ய ஆரம்பித்தார், அண்ணன். அதனால், அவளுக்கு, தன் கணவரை பிடிக்காமல் போய் விட்டது. நான், அண்ணி எனும் முறையில் அன்பாக பழகியதால், என் மீது, காதல் வயப்பட்டாள்.
இதை உணர்ந்து, விலக ஆரம்பித்தேன். ஆனாலும் ஒருநாள், என்னிடம், 'நான் உன்னை காதலிக்கிறேன்; உன் அண்ணனை எனக்கு பிடிக்கவில்லை...' என்றாள். 'இது தவறு; நீங்கள் என் அண்ணன் மனைவி; உங்களை அண்ணியாகத் தான் நினைக்கிறேன்...' என்று, அவளுக்கு புத்திமதி கூறினேன். உடனே அவள், 'நாம், நட்பாக பழகுவோம்...' என்றாள். பின், அவளுடன் உண்டான நட்பு, காதலாக மாறியது. 'நானும், உங்களை காதலிக்கிறேன்; ஆனால், இப்போது, திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை. குறைந்தது, ஐந்து ஆண்டுகளாவது ஆகும்...' என்றேன்.
ஒருநாள், அண்ணனுக்கும், அவளுக்கும் சண்டை வந்து, அவள், தன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள். 'எனக்கு, அவருடன் வாழப் பிடிக்கவில்லை; உனக்கு பிடித்தால், என்னை திருமணம் செய்து கொள்; நான், உன் அண்ணனை விவாகரத்து செய்யப் போறேன்...' என்றாள். 'என்னை மறந்தால், நீ அண்ணனுடன், சுமூகமாக வாழ்வாய்...' என்றேன்.
இப்போது, அவள், தன் அம்மா வீட்டிற்கு சென்று, இரண்டு மாதங்கள் ஆகின்றன. எனக்காக, அவள் காத்திருக்கவும் தயாராக இருக்கிறாள். ஆனால், என்னால் தான் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. குடும்ப ஒற்றுமைக்காக விலக நேரிட்டால், அவளை இழக்க நேரிடும்; அவளை திருமணம் செய்தாலோ, இச்சமூகம், என்னை அவதூறாக பேசும்.
நான், என்ன முடிவு எடுப்பதென்று தயவு செய்து, என் எதிர்காலத்தை மனதில் வைத்து, நல்ல பதிலை சொல்லுங்கள். உங்களை, தாயாக நினைத்து, இதை கேட்கிறேன்.
— இப்படிக்கு
உங்கள் அன்பு மகன்
அன்பு மகனுக்கு —
அண்ணி உறவுமுறை, தாய்க்கு சமமானது. பல கூட்டு குடும்பங்களில், வாழ வரும் அண்ணிமார்கள், தங்கள் சிறு வயது கொழுந்தன்மார்களை, மகன்களாகவே பாவித்து, தாய் பாசத்தை காட்டுவர். அண்ணிக்கும், உனக்கும் ஒரே வயது என்பதற்காக அவளை மனைவியாக்க, நினைக்கலாமா?
புதிதாக திருமணமான தம்பதியருக்கு இடையே கொழுந்தன் உறவு கொண்டாடி உள்ளே புகுந்து, உன் அண்ணியின் மனதை, மெது மெதுவாக கலைத்துள்ளாய். அண்ணன், வரதட்சணை கொடுமை செய்கிறார் என்பது பொய். அண்ணி, உன்னை நெருங்கி வரும் போது, அறிவுரை கூறி விலகுவது போல, பாவ்லா காட்டியுள்ளாய். அதன் மூலம், உன் மீதான ஈர்ப்பை அதிகரிக்க செய்து, ஈர்ப்பின் உச்சத்தில், உன் காதலை அறிவித்துள்ளாய். மொத்தத்தில், ஒரு மானை, வலை விரித்து பிடித்து, இப்போது, அறிவுரை கேட்கிறாய்.
உன் அண்ணனை விவாகரத்து செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், உன் அண்ணி, உன்னை மணந்து கொள்கிறாள் என, வைத்துக் கொள்வோம். உன்னுடனான திருமணம், திருப்தி அளிக்கவில்லை என்றால், உன்னையும் விவாகரத்து செய்வாளா அல்லது மாஜி கணவனையும், உன்னையும் ஒப்பிட்டு பேசுகிறாள் என்பதற்காக, அவளை, நீ விவாகரத்து செய்வாயா?
பொறுமை இல்லாத, அவசர புத்திகாரியான உன் அண்ணி, உன்னுடன், அமைதியாக குடும்பம் நடத்துவாள் என்பதற்கு, என்ன உத்தரவாதம்?
உறவுகளின் மாண்பை சீர்குலைத்து, நீ உன் அண்ணியை மணந்தால், உன் தங்கைகளின் திருமணம் தடைபடும்; உன் அண்ணனுடன், தீரா பகை ஏற்படும்; உறவுகள், உன்னை கை கழுவும்; நண்பர்கள் கூட, தங்கள் மனைவியரை உன்னிடம் அறிமுகப்படுத்த பயப்படுவர்.
'நல்லதோ, கெட்டதோ அண்ணனுடன் சேர்ந்து வாழ்...' என கூறி, அண்ணியை விட்டு, வெகு தூரத்துக்கு பணி மாற்றம் வாங்கி, விலகிப் போய் விடு. உன் நிரந்தர பிரிவு, அண்ணிக்கு நல்ல புத்தியை தரும். போகுமிடத்திலும், திருமணமான பெண்களின் மனதை கலைக்கும் லீலைகளில் ஈடுபடாதே! வாழ்க்கையில், திருமணம் ஒருமுறை தான்; 'செகன்ட் ஹாண்ட்'கள் மீது சபலப்பட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை, சீர்குலைத்து விடாதே!
பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை மணந்து கொள்; அதுவே உனக்கும், உன் குடும்பத்துக்கும் நல்லது!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
