தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நேரத்தை சேமிக்க பணம் செலவழியுங்கள்!

நேரத்தை சேமிக்க பணம் செலவழியுங்கள்!

நேரத்தை சேமிக்க பணம் செலவழியுங்கள்!


PUBLISHED ON : ஜன 01, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்மை சுற்றியுள்ள பலரும், 'பணத்தை சேர்க்க நேரம் செலவிடுவதை விட்டு, ஏதோ ஒரு விஷயத்திற்காக நேரத்தை வீணாக செலவழிக்கிறீர்களே...' என்பர்.

நான், இவ்விஷயத்தில் நேர்மாறானவன். 'நேரத்தை மிச்சப்படுத்த, பணத்தை செலவிடுங்கள்...' என்பேன்.

நேரத்திற்கு இணையான மூலப்பொருள், உலகில் எதுவுமில்லை. தங்கத்தை, எப்படி உருட்டி, புரட்டினாலும், அதில் எதைச் சேர்த்தாலும், அது தங்கம் தான். நேரத்தை எதற்கு செலவிடுகிறீர்களோ, அது, அதுவாகவே மாறி விடுகிறது. படிக்க செலவிட்டால், அது கல்வி; தாய், தந்தைக்கு செலவிட்டால், பரிவு; பிள்ளைகளுக்கு செலவிட்டால், பாசம்; பொதுமக்களுக்கு செலவிட்டால், தொண்டு; பயணத்திற்கு செலவிட்டால், அனுபவம்; தொழிலுக்கு செலவிட்டால், அது நன்கு பெருகுகிறது.

இப்படிப்பட்ட அருமையான நேரத்தை, பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் செலவிடுவோரே உலகில் அதிகம்.

'எனக்கு நேரமே போதவில்ல...' என்று, யாரெல்லாம் சொல்கின்றனரோ, அவர்களுக்கு சில ரகசியங்களை சொல்கிறேன்...

நமக்கு, நேரத்தை மிச்சப்படுத்த, நம்மை சுற்றி, ஏராளமானோர் உள்ளனர். 'பர்சை' இறுக்கி பிடிக்காமல், சற்றே திறந்தால் போதும்; நமக்கென சேவகம் செய்ய, ஒரு படையே தயாராகி விடும்.

அரசு அதிகாரி ஒருவர், என்னிடம் அழாத குறையாக, 'என் மனைவிக்கு உலகமே தெரியலீங்க... 'வங்கிக்கு போ, மின் கட்டணம் கட்டு'ன்னு சொன்னால், 'எனக்கு பழக்கமில்ல'ங்கிறா... எனக்கோ அலுவலக வேலை, நெட்டியை முறிக்குது; என்ன செய்ய சொல்றீங்க... இதனால், வீட்ல பிரச்னை, சண்டை...' என்றார்.

'உங்க மனைவியின் உறவினர் வழி பையன் யாரையாவது அழைத்து, இத்தகைய வேலைகளை முடித்து தர சொல்லுங்க; அவனது படிப்பிற்கு, ஏதேனும் உதவுவதாக கூறுங்க...' என்றேன். விஷயம் செம, 'கிளிக்!' உதவிக்கு உதவி; சேவைக்கு சேவை.

வேலையில்லா பட்டதாரிகளை பிடியுங்கள். 'வேலை கிடைக்கும் வரை, பகுதி நேர உதவியாளனாக இரு; வேலை கிடைத்ததும் புறப்படு. அதுவரை, என் நேரத்தை மிச்சப்படுத்தும் வேலைகளை செய்து தா...' என்று சொல்லுங்கள்.

திரையரங்க நீண்ட வரிசைகள், ரயில் மற்றும் பேருந்து நீண்ட வரிசைகளில் நேரம் செலவிடாதீர்கள்; இதற்கு, இணையதளத்தை கூட, அதிகம் சார்ந்திராதீர்கள். இதில் வீணாகிற நேரம், கொஞ்ச நஞ்சமல்ல. இதற்கென உள்ள நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். சில பத்துகள் - நூறுகளில் வேலை முடியும்.

மேற்கூறிய முறைகளில், காசு கொடுத்து, நேரம் வாங்குகிற கலையை பலர் அறியாதிருப்பதால் தான், இவர்கள் மட்டுமே செய்யக் கூடிய பணிகளை, கோட்டை விட்டு, 'நேரமில்ல...' என அங்கலாய்க்கின்றனர்.

இக்கலையை கற்றுக் கொண்டால், 'பையன் நாலு வார்த்தை பேச மாட்டேங்குறான்; வந்து பார்க்க மாட்டேங்குறான்...' என்று, தாய், தந்தை புலம்புவதை நிறுத்துவர். 'பேரண்ட்ஸ் கவுன்சிலிங்குக்கு, நீங்க வர்றதே இல்லன்னு, 'டீச்சர்' திட்றாங்கப்பா...' என்று, வருத்தப்படுகிற பெண்ணின் முகம் மாறும்.

'நீங்க வந்தா தான், டாக்டர் கிட்ட வருவேன்...' என்று, பிடிவாதம் பிடிக்கிற மனைவியின் நிலைமை மாறி, 'எனக்கு, என்னன்னாலும் உடனே வந்து நிற்பாரு...' என்கிற பாராட்டு கிடைக்கும்.

யார் யாரோ செய்யக் கூடிய பணிகளை, நாம் பார்த்து கொண்டிருப்பதால் தான், நாம் மட்டுமே பார்க்க வேண்டிய பணிகளுக்கு, நேரமில்லாமல் போகிறது.

காசு செலவழித்து, அதன் வழியே காரியமாற்றுகிற கலைக்கு மாறாத வரை, நம் மதிப்பு மிக்க நேரம், கசிந்து கொண்டே தான் இருக்கும்.

இன்றைக்கு அவசியம் தேவைப்படுகிற கலை இதுவே!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us