
நெய் பாயசம்!
தேவையான பொருட்கள்: பச்சரிசி - அரை ஆழாக்கு, பொடித்த வெல்லம் - இரண்டு டம்ளர், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தேவையான அளவு, பல்லு பல்லாக கீறிய தேங்காய் துண்டுகள் சிறிதளவு, நெய் - 100 கிராம்.
செய்முறை: பச்சரிசியை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் வெல்லத்துடன் அரை டம்ளர் நீர் சேர்த்து, பாகு காய்ச்சவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டிய வெல்லக் கரைசலில், வடித்து வைத்த சாதத்தை கொட்டி கிளறி, நெய்யை சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். பாயசம் கொஞ்சம் கெட்டியாக திரண்டு வருகையில், நெய்யில் வறுத்து எடுத்த தேங்காய் துண்டு, முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். நெய் பாயசம் தயார்!
பாலடைப் பிரதமன்!
தேவையான பொருட்கள்: பச்சரிசி - ஒரு ஆழாக்கு, பால் - இரண்டு டம்ளர், சர்க்கரை - ஒன்றரை டம்ளர், கும்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை: பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவி, மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அந்த மாவை, வாழை இலையில் அடை மாதிரி தடிமனாக தட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் இட்லி பானை வைத்து, இட்லி தட்டு மீது வாழை இலை அடையை வைக்கவும். சில நிமிடங்களில் அடை நன்கு வெந்ததும், இலையிலிருந்து எடுத்தால் கையோடு வந்துவிடும்.
இந்த அடையை, ஒரே அளவாக சின்னச் சின்ன துண்டுகளாக்கவும். பாலை அடுப்பில் வைத்து பாதியாக சுண்டியதும், அடைத் துண்டங்களை போட்டு மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அடைத் துண்டுகளில் பால் இறங்க இறங்க, அடை சற்று பெரிதாகும். அப்போது சர்க்கரை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். சர்க்கரை நன்கு கரைந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி குங்குமப்பூ துாவவும்.
மஞ்சள் பூசணி எரிசேரி!
தேவையான பொருட்கள்: மஞ்சள் பூசணிக்காய் - அரைக் கிலோ, மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி, மிளகாய் துாள் - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - மூன்று, தேங்காய் துருவல் - மூன்று கப், சீரகம் - ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு மற்றும் தண்ணீர் தேவைக்கு ஏற்ப.
செய்முறை: மஞ்சள் பூசணிக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். அடி கனமான வாணலி அல்லது குக்கரில் போட்டு மஞ்சள் பொடி, மிளகாய் துாள், உப்பு சேர்த்து வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். இரண்டு கப் தேங்காய் துருவலுடன், பச்சை மிளகாய், கொஞ்சம் சீரகம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து, மீதமுள்ள ஒரு கப் தேங்காய் துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில், தேங்காய் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு தாளித்து, மசித்து வைத்துள்ள பூசணிக்காயில் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் இறக்கி வைத்து, கறிவேப்பிலை மற்றும் பொன்னிறமாக வறுத்த தேங்காய் துருவலைப் போட்டு கலக்கவும்.