
'ஜேம்ஸ் பாண்ட்' ஆக ஆசைப்படும், விஜய்!
'ஆக் ஷன், சென்டிமென்ட்' மற்றும் காதல் கதைகளாக நடித்து வரும் விஜய்க்கு, 'ஜேம்ஸ் பாண்ட்' பாணி கதைகளில் நடிக்கும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, தன்னிடத்தில் கதை சொல்ல வரும் இளவட்ட இயக்குனர்களிடத்தில், ஜேம்ஸ் பாண்ட் நடித்த சில படங்கள் குறித்து பேசும், விஜய், தன்னை கவர்ந்த இப்பட பாணியிலேயே அதிரடியான கதைகளை உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.
அதோடு, 'தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு பார்முலா இருந்தபோதிலும், மாறுபட்ட கதைகளில் நடித்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க வேண்டும். அப்போது தான், உலக சினிமா எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை, நம் ரசிகர்களும் தெரிந்து கொள்வர்.
'எனக்காக மட்டுமின்றி, ரசிகர்களுக்கு புதிய வடிவில் சினிமாவை காண்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் தான், அதுபோன்ற கதைகளை தேடுகிறேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
மும்பையில் குடியேறிய, ராஷ்மிகா மந்தனா!
கன்னட நடிகையான, ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் நம்பர் ஒன் நடிகை ஆனதும், ஐதராபாத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார். தற்போது அவர், ஹிந்தியில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அங்குள்ள ஹோட்டலில் தங்கி, ஹிந்தி படங்களில் நடித்து வந்தவர், தற்போது மும்பையில், 8 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீடு வாங்கி, தன் அம்மாவுடன் குடியேறி இருக்கிறார்.
இந்நிலையில், விஜயுடன், வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, 'தமிழில் முன்னணி நடிகையானதும், சென்னையிலும் ஒரு வீடு வாங்கி குடியேற திட்டமிட்டுள்ளேன். காரணம், சமீபகாலமாக கண்ணுக்கு தெரியாத அளவுக்கு ரகசிய கேமராக்கள் வந்து விட்டதால், ஹோட்டலில் தங்குவது பாதுகாப்புக்கு உகந்ததில்லை. மேலும், ஹோட்டல் என்றாலே எனக்கு அலர்ஜியாக இருக்கிறது...' என்கிறார்.
— எலீசா
ரஜினி படத்தை தவிர்த்த, சிவகார்த்திகேயன்!
ரஜினியின் தீவிர ரசிகரான, சிவகார்த்திகேயன், அவருடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். அதன் காரணமாகவே, தற்போது, ரஜினியை வைத்து தான் இயக்கப் போகும், ஜெயிலர் படத்தில், சிவகார்த்திகேயனை நடிப்பதற்கு, அழைப்பு விடுத்தார், நெல்சன்.
ஆனால் சிவகார்த்திகேயனோ, 'நெகட்டிவ் ரோலில் நடிக்கும்படி கூறியதால், அதை தவிர்த்து விட்டேன். தற்போது, 'ஹீரோ'வாக நடித்து வரும் படங்கள், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், இந்த நேரத்தில், வில்லனாக நடித்து, என், 'இமேஜை' கெடுத்துக் கொள்ள வேண்டாம் என, இந்த வாய்ப்பை தவிர்த்துள்ளேன். எதிர்காலத்தில் கண்டிப்பாக, ரஜினி படத்தில், எனக்கேற்ற கதாபாத்திரங்கள் வரும்போது நடிப்பேன்...' என்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த அந்த வேடத்திற்கு, தற்போது, வசந்த் ரவி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
— சி.பொ.,
'நெகட்டீவ் ரோலில்' ரம்யா கிருஷ்ணன்!
ரஜினியின், படையப்பா படத்தில், நீலாம்பரி என்ற அதிரடி வில்லி வேடத்தில் நடித்தவர், ரம்யா கிருஷ்ணன். அதுவே, அவருக்கு ஒரு அடையாளமாகி, அவரது இன்னொரு பெயரே, நீலாம்பரி ஆகிவிட்டது.
இந்நிலையில், ரஜினி நடிக்கும், ஜெயிலர் படத்திலும் நடிக்க இருக்கிறார். ஆனால், இந்த படத்தில், அவரை ஒரு குணசித்ர வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார், இயக்குனர். அதைக்கேட்ட ரஜினியோ, 'ரம்யா கிருஷ்ணன் என்றாலே, அதிரடியான, 'நெகட்டீவ்' வேடத்திற்கு தான் கச்சிதமாக இருப்பார். ஏற்கனவே, படையப்பா படத்தில், 'பவர்புல் பர்பாமென்ஸ்' கொடுத்தவர். அதனால், இந்த படத்திலும் அவருக்கு, 'நெகட்டீவ்' கலந்த ஒரு வேடத்தை கொடுங்கள்...' என, கூறியுள்ளார்.
அதனால், ஆரம்பத்தில், 'சாப்ட்'டாக இருந்த, ரம்யா கிருஷ்ணனின் கேரக்டரை, இப்போது அதிரடியான, 'நெகட்டீவ்' வேடமாக மாற்றி இருக்கிறார், இயக்குனர் நெல்சன். ஆக மீண்டும், இன்னொரு நீலாம்பரியாக, ரம்யாகிருஷ்ணன் உருவெடுப்பார் என்று தெரிகிறது.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* திருமணத்திற்கு பிறகு, மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும், ஜெனிலியா, தீவிரமாக தன் உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.'இரண்டு வாரத்தில், 4 கிலோ எடையை குறைத்துள்ளேன்...' என்கிறார்.
* ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி.வாசு இயக்கி வரும், சந்திரமுகி- - 2 படத்தில், லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உட்பட, ஐந்து, 'ஹீரோயினி'கள் நடிக்கின்றனர்.
அவ்ளோதான்!