sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஆசான்!

/

ஆசான்!

ஆசான்!

ஆசான்!


PUBLISHED ON : செப் 04, 2022

Google News

PUBLISHED ON : செப் 04, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பச்சை நிற சிற்றுந்து, 'நல்லுார்' போர்டுடன் செம்மண் சாலையில் பயணிக்க, இடையிடையே பரந்த மண் புழுதி, பஸ் கண்ணாடியில் படர்ந்து, அதன் நிறத்தை பழுப்பு நிறமாய் மாற்றியது.

தகவல் துறை பட்டதாரி மற்றும் பல சிறப்புப் பட்டங்கள் பெற்று, சென்னையில் அயல்நாட்டு கம்பெனியின் தலைமை பொறுப்பு நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவன், பிரகாஷ்.

ஆறு இலக்க சம்பளம். வயது, கிட்டத்தட்ட அரை சதம் நோக்கி நெருங்கி விட்டான். அவனுள் கடந்த ஒரு வாரமாய், ஒரே மன அழுத்தம்.

இரவு - பகல் பாராது, பணத்துக்காக ஓடி ஓடி உழைத்து, கால் நுாற்றாண்டு காலம் கடத்தியவன். மனம் தளர்ந்து, இப்போது, மனைவி, இரு மகள்களிடம், 10 நாள் ஓய்வில், தான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு செல்வதாக தெரிவித்தான்.

'என்னங்க, 10 நாள் விடுப்பு எடுத்து, ஏதாவது வெளிநாட்டு சுற்றுலா போனாலாவது சரி. போயும், போயும் உங்க கிராமத்துக்கு போறேங்கறீங்க... அங்கே என்ன பொழுதுபோக்கு இருக்கு?' என அங்கலாய்த்தாள், மனைவி மாலா.

'மாலா, இதுவரை, நானும் உன்னை மாதிரி தான் நினைச்சேன். ஆனா, திடீர்னு ஒரு வாரமா மனசு பாரமா இருக்கு. என் சொந்த பூமியில, கால் வைச்சு கும்பிட மனசு துடிக்குது. நான் படிச்ச பள்ளி, என்னோட வாத்தியார் சுவாமிநாதன் பற்றிய நினைவுகள் என் மனசுல. அதான் கிளம்பறேன்...' என்றான்.

பசுமை போர்த்திய, பாசம் விளையும் பூமி பார்த்து, விழியோர நீர் துளிர்த்து கன்னத்தில் வடிந்தது; கைக்குட்டையை எடுத்து துடைத்து கொண்டான், பிரகாஷ்.

நுழைவு அறிவிப்பு, 'நல்லுார்' கிராமம் கண்ணில் பட, தோளில் பையை மாட்டி, பஸ்சிலிருந்து இறங்க தயாரானான்.

அவனுடன் இறங்கிய ஆறு பேர், இவன் தோற்றத்தைப் பார்த்து, தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.

அதே பழைய நிலையில், ஊர் பாதை. வெள்ளாடுகள் மந்தையாய் இவனுக்கு முன் போக, வேப்பங்குச்சியை கிரிக்கெட் பேட்டாய் சுழற்றியபடி, ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி போனான், சிறுவன் ஒருவன்.

''தம்பி, உங்க பேரு என்ன... என்ன படிக்கிறீங்க?'' சற்று வேகமாய், அச்சிறுவனை நெருங்கி வினவினான், பிரகாஷ்.

வேகமாய் தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து, ''சார், நீங்க... என் பெயர் முருகன். 6ம் வகுப்பு படிக்கிறேன்.''

குரலிலும், செயலிலும் மரியாதை தெரிந்தது.

''என் பெயர் பிரகாஷ். ஆமா, நம் ஊர் நடுநிலைப்பள்ளி எப்படி இருக்கு... பாதை எந்த பக்கம்?''

''சார்... இதோ இப்படி கிழக்காலப் போய், வடக்கால திரும்பினா பெரிய பம்ப்செட் வரும். அதை ஒட்டி நடந்தா கொஞ்சம் தொலைவில் இருக்கு. யாரைப் பார்க்கணும், பள்ளிக்கூடம் அடைக்கிற நேரமாச்சே,'' என்றான்.

''அப்ப, நான் வேகமா போறேன். பை...'' என, விரைவாய் நடந்தான்.

குழப்பமாய் கையை ஆட்டினான், சிறுவன் முருகன்.

முருகன் கூறிய பம்ப்செட் அடையாளம் கண்ணில் பட, சுற்று முற்றும் பார்த்த பார்வையில், மங்கலாய் தெரிந்தது, பள்ளிக்கூடம். உற்சாகம் பற்றிக்கொள்ள, ஓட்டமும் நடையுமாய் பள்ளியை அடைந்தான், பிரகாஷ்.

'அரசு நடுநிலைப்பள்ளி' அரைவட்ட வடிவ வளைவு போர்டு, பெயின்ட் உதிர்ந்து ஆண்டுகள் பல இருக்கும். சற்று யோசனையுடன் உள்ளே நுழைய, ஓர் ஆசிரியர், கூடவே ஒரு ஆசிரியை இருந்தனர். கைக்கட்டி நின்றவர்களின் முகத்தில் கலவரம் அப்பியிருந்தது.

'வணக்கம் சார்...' என, பிசிறடித்தது, இருவரின் குரல்கள். அவர்களின் பின், ஓரமாய் நின்றிருந்தான், சிறுவன் முருகன்.

''டேய் முருகா, அதுக்குள்ள எப்படிடா இங்கே... அதுவும் எனக்கு முன்னாடி?'' ஆச்சரியப்பட்டான், பிரகாஷ்.

''சார்... நான் குறுக்கு பாதையிலே ஓடி வந்து, நீங்க வர விபரத்தை சொல்லிட்டேன்,'' என்றான், முருகன்.

''சார், வணக்கம்! நான் அகிலன், பள்ளி தலைமை ஆசிரியர். இவங்க ஹேமா, இன்னொரு ஆசிரியை,'' என சொல்லி, மீண்டும் வணக்கம் தெரிவித்தார்.

''என் பெயர் பிரகாஷ். இது பள்ளிக்கூடம் இல்லை... இந்த கோவிலைப் பார்த்து கும்பிட்டு, வழிபடத் தான், சென்னையில் இருந்து வந்திருக்கேன்,'' என, தன்னைப் பற்றி சுருக்கமாய் விளக்கினான்.

''டீச்சர், அநேகமா நீங்க சற்று தொலைவிலிருந்து வர்றீங்கன்னு நினைக்கிறேன்.''

''ஆமா சார், 10 கி.மீ., பயணம். மாலை, 5:00 மணிக்கு பஸ். அதை விட்டா, அப்புறம், 7:00 மணிக்கு தான்,'' என, பதட்டமாய் பேசினார்.

''மன்னிக்கணும். நீங்க கிளம்புங்க. அகிலன் நீங்க?''

''அவசரமேயில்லை. நான் இதே ஊர்ல ஒரு வீட்ல தங்கியிருக்கேன். விருப்பப்பட்டா, இன்னைக்கு இரவு நீங்க என்னோட தங்கலாம்,'' என்றார், அகிலன்.

''மிக்க நன்றி... உங்க அனுமதியோட, நான் படிச்ச வகுப்பை பார்க்கணும்,'' என்றான், பிரகாஷ்.

''நிச்சயமா, வாங்க...'' என, அழைத்துச் சென்றார்.

சற்று நெகிழ்ச்சியுடன் வகுப்பறைக்குள் நுழைந்தவன், ''இதான் என்னோட ஐந்தாம் வகுப்பு. ஆனா, அப்பவெல்லாம் மர பெஞ்சுகள். இப்போ இரும்பு பெஞ்ச்,'' என சொல்லி, பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து, வகுப்பறையை பார்வையிட்டான்.

பெரிதாய் மாறி இருக்கவில்லை, வகுப்பறை. புதிதாய் வேயப்பட்ட ஓடுகள் இடைவெளி வழியே சூரிய ஒளிக் கீற்றுகள். கரும்பலகை, புதிதாய், 'டஸ்டர்' மற்றும் ஸ்டாண்ட் ஓரம் சாக்பீஸ் டப்பா.

''அகிலன் சார், இப்படி உட்காருங்க. இது உங்க பள்ளி, நீங்களே நின்னா எப்படி? சமீபத்தில், 'கரும்பலகை' கவிதை படிச்சேன்,'' என, கைப்பிடித்து அவரை அருகில் அமரவைத்து, கண்களில் ஒற்றிக் கொண்டான்.

அவசரமாய் கையை உதறி, ''அடடா... என்ன சார் நீங்க, என் கையை தொட்டு... ஏதோ கரும்பலகை கவிதைன்னு சொன்னீங்க?'' என, நினைவுபடுத்தினார்.

''இதோ...'' பையிலிருந்த கவிதைத் தொகுப்பை எடுத்தான், பிரகாஷ்.

'கரும்பலகை!'

* அன்று...

முதன் முதலாய்

எழுத்துக் கண்ணை

திறந்த பலகை!

* பறந்த சுண்ணாம்பு

துகள்களுக்கிடையே

குரு - சிஷ்யன்

உறவை உலகிற்கு

அறிவித்த

அறிவிப்பு பலகை!

* மாதா பிதா

குரு தெய்வம்

மாண்பை மனதில்

நிறுத்திய பலகை!

*இன்று -

கால மாற்றத்தில்

காணாமல் போய்

தன் உன்னதத்தை

தொலைத்து விட்டது

நம்மிடையே!

*வாழ்வோம்

கரும்பலகை

போதித்த போதனைப்படி

என்றும்!

வேக, வேகமாய் வாசித்து முடித்தான், பிரகாஷ்.

''அருமை சார்!'' கை தட்டி பாராட்டினார், தலைமை ஆசிரியர் அகிலன்.

''நன்றி சார். இந்த கவிதை தான், என்னை இங்கே கூட்டி வந்தது. என் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை, கண்முன்னே காட்டி ஒரு கலகலப்பை கொண்டு வந்திருக்கு எனக்கு,'' மகிழ்ச்சியாய் கூறினான், பிரகாஷ்.

''ஆச்சரியம் சார்... பெரிய பதவியில் இருந்தும், பழசை மறக்காமல் உங்கள மாதிரி சிலர் தான், உள்ளூரை மறக்காம இருக்கீங்க!''

''போன வாரம் வரை, நானும் மறந்து தான் இருந்தேன். திடீரென ஒரு ஞானோதயம், இந்த கவிதையால எனக்கு கிடைச்சது. ஓ... சாரி நாம கிளம்பலாம். பள்ளிக்கூடம் அடைக்கிற நேரம் தாண்டிடுச்சே,'' வருத்தப்பட்டான், பிரகாஷ்.

''என்னை பொறுத்தவரை, இந்த பள்ளிக்கூடம் தான் எல்லாம். நான் தனி மரம். வீட்டுக்கு போய் என்ன பண்ண போறேன்.''

''அப்போ உங்க திருமணம்?''

''அப்பா, அம்மா தேனியில். பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்க. வாரம் ஒருமுறை கண்டிப்பா அவங்கள பார்க்கப் போவேன். தாராளமா உங்க நினைவுகளை நீங்க பகிரலாம். மெயின் ரோடுல புரோட்டா கடை இருக்கு,'' சொல்லி சிரித்தார், அகிலன்.

''சார், சந்திச்ச கொஞ்ச நேரத்திலேயே நெருங்கி பழகிட்டீங்க...'' சிநேகமாய் பிரகாஷ் கை நீட்ட, நட்போடு கை குலுக்கினார், அகிலன்.

''ரொம்ப போரடிக் கிறேனோ?''

''சே சே... ரொம்ப மகிழ்ச்சியாவும், வித்தியாசமான உணர்வாவும் இருக்கு,'' என்றார், அகிலன்.

''சார், நான் படித்தபோது, சுவாமிநாதன் சார் தான் தலைமையாசிரியர். இல்லை, ஓராசிரியர் பள்ளி இது. சகலமும் அவரே. மறக்க முடியாத நினைவுகள். அப்ப, கல்வி ஆழமா, நல்ல புரிதலுடன் இருந்தது.

''திடீரென முந்தின நாள் பாடத்திலிருந்து வினா எழுப்புவார். பதில் தெரியலைன்னா எழுந்து நிற்கணும். வரிசையா கேள்வி ஒரு சுற்று வரும். யாரு பதில் சொல்கிறார்களோ, அவங்க பதில் சொல்ல முடியாதவங்க தலையில் குட்டணும்.''

''ஓ ஆஹா...'' சிரித்தார், அகிலன்.

''ஆமா நிஜமா... நான் பெருமைக்கு சொல்லல, நிறைய தடவை நிறைய பேரை குட்டியிருக்கேன்.''

''ரொம்ப புத்திசாலி சார், நீங்க ஒரு தடவை கூட குட்டு வாங்கலையா?'' ஆர்வமானார், அகிலன்.

''அது எப்படி சார்... நானும் சில தடவை குட்டு வாங்கியிருக்கேன். தப்பு செய்யாதவன் யாருமே இல்லையே. இங்கே, அனுபவம் தானே பாடம் நம் வாழ்க்கையில்.''

''அருமையா பேசி அசத்துறீங்க,'' சிலாகித்து சிரித்தார், அகிலன்.

''இன்னொரு விஷயம். சில பேரு எனக்கு நெருங்கிய நண்பரா இருப்பாங்க. அவங்க தலையில மட்டும் லேசாக குட்டுவேன்,'' என்று கூறி, பல ஆண்டுகளுக்கு பின், வாய் விட்டுச் சிரித்தான்.

''ஆமா, நீங்க சொன்ன சுவாமிநாதன் சாரை பார்த்தீங்களா?'' வினவினார், அகிலன்.

''அதுக்குதானே முக்கியமாக வந்திருக்கேன். அவர் தான் எனக்கு கல்விக்கண் திறந்த கடவுள்; ஆசான். எல்லா வகையிலும், படிப்பும், ஒழுக்கமும் இரண்டு கண்கள் என, புரிய வைத்த ஒரு புனிதர்.

''படிப்பு மட்டுமே ஒருவனை, நல்ல மனிதனா உயர்த்த முடியாது. சுய ஒழுக்கம், தேசபக்தி, சமூக சேவை என, இப்படி பல விஷயங்கள். அந்த ஆசான், என் அடி மனசுல பதிய வைச்சதால தான், இப்ப நான் உங்க முன்னாடி நல்ல நிலையில் இருக்கிறேன். நான் அவரைப் பார்க்கணும். உதவி செய்ய முடியுமா?'' என, கை கூப்பினான், பிரகாஷ்.

''திரும்ப திரும்ப கும்பிட்டு, பெரிய மனுஷனா ஆக்காதீங்க. சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா எனக்கும், அவர் தான் ஆசான். நாலு வருஷத்துக்கு முன் இங்கே வந்தப்போ, அவர் தான் எனக்கும், தலைமை ஆசிரியர்.

''எல்லா வகையிலும் என்னுடைய வழிகாட்டி. இரண்டு ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்று, பக்கத்து டவுனுக்கு இடம் மாறினாரு.''

''சார், நான் அவரை பார்க்கணும்,'' என்றான், பிரகாஷ்.

''நிச்சயமா. இன்னிக்கு இரவே பார்த்துடலாம்.''

தொலைபேசியில் தொடர்பு கொண்டார், அகிலன்.

சுவாமிநாதன் சம்மதம் தர, பள்ளியை சுற்றிப் பார்த்த பிரகாஷ், அகிலனோடு புறப்பட்டான்.

வாசலிலேயே நின்று வரவேற்ற சுவாமிநாதனிடம், பிரகாஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

''வா வா... நல்லா இருக்கியாடா... என் மாணவனை எனக்கு தெரியாதா? என்ன பெரிய ஆளாயிட்ட!'' என்ற சுவாமிநாதன், ''வாங்க, அகிலன் தம்பி. நலமா?'' என, வினவினார்.

''உங்க ஆசியில ரொம்ப நலமய்யா. பிரகாஷ் சார், உங்களை பற்றி ரொம்ப ரொம்ப உயர்வா சொன்னார். உங்களைப் பார்க்கணும்ன்னு விருப்பப்பட்டதால, அழைத்து வந்தேன்.''

''ரொம்ப சந்தோஷம். பிரகாஷ், ரொம்ப நல்ல மாணவன். படிப்பு, விளையாட்டுன்னு பல வகையில...'' பாசத்துடன் பிரகாஷை தட்டிக் கொடுத்தார்.

காலைத் தொட்டு வணங்கி, ஒரு சால்வையை சுவாமிநாதனுக்கு அணிவித்தான், பிரகாஷ். முதலில் மறுத்து, வற்புறுத்தலுக்கு பின் ஏற்றுக்கொண்டார். நெகிழ்ச்சியான நினைவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

''ஐயா, ஒரு சிறிய விண்ணப்பம். என்னோட இந்த நிலைக்கு, வளர்ச்சிக்கு, நீங்களே காரணம். பள்ளிப் பருவத்தில் அப்பா, அம்மாவுக்கு அடுத்து ஆசிரியர்கள் தான் எல்லாம். எதிர்கால வாழ்வின் வழிகாட்டி. ஒளிவிளக்கு.''

''அடடா போறும்பா. நீ சொல்வது உண்மைதான்னாலும், உழைப்பு, அறிவு, திறமை வேணுமே. அது உன்கிட்ட இருந்ததுனால தான் நீ உயர்ந்திருக்கே,'' பிரகாஷைப் பாராட்டினார், சுவாமிநாதன்.

''ஐயா... ஒரு விசேஷத்திற்கு போகணும். விரைவில், உங்களை நான் மீண்டும் சந்திக்கிறேன்,'' என விடை பெற்றான், பிரகாஷ்.

அன்றிரவு, அகிலன் வீட்டில் பல்வேறு விஷயங்களை பேசியபடி, பிரகாஷுக்கு பொழுது கழிந்தது.

ஒரு வாரம் ஓட்டமாய் கழிய, மீண்டும் அகிலன் உடன் சுவாமிநாதன் வீட்டிற்கு வந்தான், பிரகாஷ்.

''வணக்கம் ஐயா!'' பிரகாஷ்.

''வாடா, ஏதோ விசேஷம்ன்னு சொன்னே. என்னது?'' என்றார், சுவாமிநாதன்.

''வர்ற வெள்ளிக்கிழமை பள்ளியில ஒரு விழா. நீங்க அவசியம் வரணும்,'' சொல்லிவிட்டு சிரித்தான், பிரகாஷ்.

''என்ன அகிலன், நீங்களாவது சொல்லுங்க?''

''வாங்க சார். மாலை, 5:00 மணிக்கு மறக்காம வந்திடுங்க,'' என்றார், அகிலன்.

வெள்ளிக்கிழமை -

நல்லுாரே விழாக்கோலத்தில் திளைக்க, அலங்காரங்களுடன் பள்ளிக்கூட வாசலில் கலர் கலரான கொடிகள். ஒரு சிறிய மேடை. விழா கதாநாயகன், சுவாமிநாதன் சார்.

கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து பேச ஆரம்பித்தார், மாவட்ட கல்வி அதிகாரி...

''அனைவருக்கும் மாலை வணக்கம். இப்பள்ளியின் முன்னாள் மாணவர், பிரகாஷ், மிகுந்த முயற்சி எடுத்து, மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன், 1,000 நுால்களுடன் கூடிய நுாலக கட்டடம் மற்றும் சுகாதாரமான கழிப்பறை கட்டடம் கட்ட பணம் கொடுத்துள்ளார்.

''தன் ஆசான், முன்னாள் தலைமையாசிரியர் சுவாமிநாதன் பெயர் பதித்து துவக்கவிழா கல்வெட்டை, அவரை வைத்தே திறந்து கவுரவப்படுத்த விரும்புகிறார். தயவுசெய்து சுவாமிநாதன் ஐயா, கல்வெட்டை திறந்து வைக்க, உங்கள் அனைவரின் சார்பில் வேண்டி அழைக்கிறேன்.''

சுற்றி இருந்தவர்களின் கை தட்டல் பாராட்டு மழையில் நனைந்தபடி, தன் முன்னாள் மாணவனின் அன்பு கட்டளையை நிறைவேற்றினார், 'ஆசான்!'

தன் பங்கிற்கு, ஆகாயம் மழைத்துளிகளை சிந்தி, அன்பை பொழிந்தது.

கி. முரளிதரன்






      Dinamalar
      Follow us