
எவ்வளவோ நல்லவைகளை கற்கிறோம்; ஏற்கிறோம்; அனுபவத்திலும் பெற்று நலம் பெறுகிறோம். இருந்தாலும், நாம் கற்ற கல்வியும், அனுபவங்களும் உதவாமல், முக்கியமான நேரங்களில் மறைந்து விடுகின்றன. என்ன காரணம்?
மும்மூர்த்திகளின் வடிவம், பைரவர். ஒரு சமயம், சிவபெருமானையும், அம்பிகையையும் தரிசிப்பதற்காக, கயிலைக்கு வந்தார். தன் வாகனமான, சுவானத்தை (நாயை) வெளியே நிறுத்தி விட்டு, உள்ளே போய் தரிசனம் முடித்து வெளியில் வந்தார்.
அவருடைய வாகனமான சுவானத்தை காணவில்லை. திகைத்தார், தேடிப் பார்த்தார்; பலனில்லை.
வேறு வழியின்றி, மறுபடியும் உள்ளே போய், சிவபெருமானிடம், 'பரம்பொருளே... தங்கள் ஆணைப்படி, சுவானத்தில் ஏறி, உலகம் முழுதும் வலம் வருகிறேன். இன்று, இங்கே தரிசனத்திற்காக வந்த, என் வாகனத்தை காணவில்லை; காரணமும் தெரியவில்லை...' என்று, முறையிட்டார்.
'பைரவா... 'நான் சிறந்தவன். எனக்கு ஈடு இணை யாருமில்லை...' என்ற எண்ணம், உனக்குள் அழுத்தமாக பதிந்து விட்டது. உன்னுடைய அந்த இறுமாப்பு, உன் வாகனத்தை மறைத்து விட்டது.
'உன் வாகனத்தை, ஏதோ சாதாரணமான சுவானம் (நாய்) என, எண்ணி விட்டாய் நீ... அது, சாதாரணமானது அல்ல. வேதமே உனக்கு வாகனமாக அமைந்துள்ளது; அது, உனக்கும் தெரியும். அகங்காரம் கொண்டவருக்கு, வேதத்தின் ஜீவன் விளங்குவது இல்லை. அறிந்து கொள்...' என்றார், சிவபெருமான்.
'கருணாகரா... என் போன்றவர்களுக்கு தாங்கள் அளித்த தண்டனை, சரியானது தான். போதும் இந்த தண்டனை. இழந்ததை மீண்டும் அடைய, அருள்புரியுங்கள்...' என, வேண்டினார், பைரவர்.
'பைரவா... மதுரைக்கு வடமேற்கில், யாம் விரும்பிய நல் தலம் திருவாதவூர். அங்கு சென்று வழிபாடு செய்; எண்ணியதை எய்துவாய்...' என்றார், சிவபெருமான்.
பரம்பொருளை வணங்கி, புறப்பட்டு திருவாதவூர் வந்து சேர்ந்தார், பைரவர். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உருவாக்கி, நீராடினார்.
திருநீறு மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்து, 'வேத முதல்வா... பொல்லாத செருக்கால், யான் பட்ட துயரம் போதும். வேத மயமான வாகனத்தை இழந்த அடியேனுக்கு, மீண்டும் அதை தந்து அருள்புரியுங்கள்...' என, அழுது, தொழுது வேண்டினார்.
'பைரவா... பேறு தரும் இவைகளை பெற்று, அமைதியாக செயல்படு. உன்னால் உண்டாக்கப்பட்ட பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்வோர், எண்ணியதை எய்துவர்...' என்று அருளி, மறைந்தார், சிவபெருமான்.
ஒன்றுக்கு நான்காக பெற்று, மகிழ்வோடு திரும்பினார், பைரவர்.
கடுமையாக உழைக்கும் பலரும் முன்னேற்றம் காண்கின்றனர்; சந்தேகமில்லை. ஆனால், சற்று முன்னேற்றம் அடைந்ததும், மதி மயங்குகிறது; களை போல, கர்வம் தலை நீட்டி விடுகிறது. அதன் காரணமாக, நம் வாழ்க்கையை செலுத்துவது எதுவோ, அது விலகிப்போய் விடுகிறது.
திருந்தி, இறைவனிடம் சரணாகதி
அடைந்து முறையிட்டால், இறையருளால் நன்னிலை அடையலாம் என்பதை விளக்கும் வரலாறு இது.
பி. என். பரசுராமன்