
அன்புள்ள சகோதரிக்கு —
நான், 54 வயது பெண்மணி. படுத்த படுக்கையாக இருக்கும் முதியோர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுக்கு பணிவிடை செய்யும், நர்சாக பணிபுரிகிறேன். கணவர், ஒரு சோம்பேறி. வேலைக்கே போக மாட்டார். மாமியார் வீட்டில் கூட்டு குடும்பமாக இருந்ததால், வாழ்க்கை ஓடியது. இப்போது, மாமியார் - மாமனார் காலமாகி விட, அனைவரும் தனித்தனியாக பிரிந்து விட்டோம்.
எனக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. 35 ஆண்டுகளாக பணியாற்றி, சொந்த இடம் வாங்கி, மாடி வீடு கட்டினேன். மாடியில், சின்ன மகன் - மருமகள் மற்றும் பேரன் வசிக்கின்றனர். கீழ் தளத்தில், பெரியவன் இருக்கிறான். எனக்கும், என் கணவருக்கும் தனி அறை.
எனக்கு நுரையீரல் மற்றும் கல்லீரலில் பிரச்னை இருப்பதால், மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இப்போதும், வேலைக்கு சென்று வருகிறேன்.
பெரிய மருமகள், என் கணவருடன் உறவு வைத்திருப்பதோடு, என்னையும் அவதுாறாக பேசி வேதனைப்படுத்துகிறாள். கணவரும், அவளும் சேர்ந்திருப்பதை நானே ஒருமுறை பார்த்து அதிர்ந்து விட்டேன். ஆனால், அவர்களுக்கு எந்த பயமும் இல்லை.
இதை கேட்டதற்கு, வீடு வீடாக முதியோர்களை கவனிக்க போய், நான், கேடு கெட்ட வாழ்க்கை வாழ்வதாக பேசுகிறாள், பெரிய மருமகள். இதைக் கேட்டு, கணவரும் ஏதும் பேசாமல் மவுனம் சாதிக்கிறார். பெரிய மகனும் ஏதும் பேச முடியாமல் தவிக்கிறான்.
சின்னவனுக்கு திருமணம் ஆவதற்கு முன், இவள், அவனுடன் சல்லாபம் செய்து, அவனையும் தன் கைக்குள் வைத்திருந்தாள். இதை அறிந்து, அவசர அவசரமாக சின்னவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். இப்போது, அவன் தன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான்.
உறவினர்களிடம் சொல்லலாம் என்றால், குடும்ப மானம் போய் விடுமே என்று பயமாக இருக்கிறது. இதனால், மன அழுத்தம் அதிகமாகி, பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது.
இந்த பிரச்னைகளுக்கு என்ன தீர்வு சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
உன் மருமகள், 'நிம்போமேனியாக்' வகை பெண். இவ்வகை பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். இவர்கள் எளிதில் திருப்தியடைய மாட்டார்கள். உறவு முறைகளை பார்க்காமல், தாம்பத்ய சுகம் தேடுவர். மாமனாரானால் என்ன, கொழுந்தன் முறையானால்
என்ன, இவர்களுக்கு, ஆண் என்கிற கணக்கு தான்.
சில பெண்களுக்கு, தங்களை விட, 30 வயது மூத்த, தந்தை போன்ற ஆண்களுடன் உறவு கொள்ள பிடிக்கும். இதை, 'எலக்ட்ரா காம்ப்ளக்ஸ்' என்பர். இது ஒருவகை மனநோய். இந்த நோய் கூட, உன் மருமகளுக்கு இருக்கக் கூடும்.
மருமகள், உன் இரண்டாவது மகனுடன் உறவு வைத்திருந்த போதே கவனமாய் அவளை உறவு வட்டத்திலிருந்து துண்டித்திருக்க வேண்டும்.
ஒரே வீட்டின் மூன்று ஆண்களையும், மலை பாம்பு போல இரை எடுத்து விட்டாளே, உன் மூத்த மருமகள்... செவிலியர் நங்கையாக இருக்கும் நீ, மூத்த மருமகள் விஷயத்தில் இன்னும் அதிக சாதுர்யமாய் நடந்திருக்கலாம். கோட்டை விட்டு விட்டாய்.
அடுத்தடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* மாடியில் இருக்கும் இரண்டாவது மகனை காலி பண்ண சொல். உன் வீட்டிலிருந்து குறைந்தது, 5 கி.மீ., துாரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி, அவனை குடி போக சொல். மாடி, 'போர்ஷனை' வாடகைக்கு விடு
* நீயும், கணவரும், இரண்டாவது மகனுடன் சேர்ந்திருங்கள் அல்லது தனி வீடு பார்த்து தனிக்குடித்தனம் போங்கள். மொத்தத்தில் உன் குடும்பத்து இரு ஆண்களும், மூத்த மருமகளை முகத்துக்கு முகம் சந்திக்கும் வாய்ப்பை தராதே
* கணவர் உன்னுடன் வர மறுத்தால், சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்
* 'உன் மனைவியையும், தந்தையையும் ஒன்று சேர விடாதே. தந்தையை உன் வீட்டுக்குள் விடாதே. நான் நல்லவளா கெட்டவளா என்பது முக்கியமல்ல. உன் மனைவி கெட்டவளாய் தொடராமல் பார்த்துக் கொள்...' என, மூத்த மகனை எச்சரி
* மூத்த மகன், உன் அறிவுரையை உதாசீனப்படுத்தினால், அவனையும், கணவரையும் நிரந்தரமாக பிரித்து, இரண்டாவது மகனுடன் போய் தங்கு
* அப்பாவையும், அண்ணனையும், இரண்டாவது மகன் பகைத்துக் கொள்ள விரும்பாவிட்டால், நீ தனியாக போய் விடு. முதியோர்களை கவனித்துக் கொள்ளும் செவிலியர் நங்கை பணியை தொடர்ந்து செய். பிரத்யேகமாக சமையல் செய்து சாப்பிடு
* வீட்டின் மூன்று ஆண்களும் தனித்தனியே முரண்டினால், நீ கட்டிய வீட்டை நல்ல விலைக்கு விற்று, பணத்தை வங்கியில் போடு. வட்டி பணத்தில், உனக்கான வைத்திய செலவை செய்து கொள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆன்மிக சுற்றுலா போ. மாதம் ஒருமுறை அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் சென்று வா. ஆசிரமங்களில் ஒரு நாள் செலவை, 'ஸ்பான்சர்' செய்
* மகன்கள், மருமகள்களுக்கு தெரியாமல், பேரன் பேத்திகளை வரவழைத்து கொஞ்சு. அவர்களுக்கு தேவையான பரிசு பொருட்களை வழங்கு
* தவறு செய்யும் மருமகளை, ஏழு கடல், ஏழு மலை தாண்டி, மாளிகையில் பூட்டி வைத்தா காவல் காக்க முடியும்... எந்த பெண்ணும், திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடக் கூடாது என்ற, 'மாரல்' போலீஸ் வேலையை பார்க்கவா நீ பிறந்தாய்... 'மருமகளுடன் தகாத உறவு வைத்திருக்கிறோமே...' என்று, உன் கணவர் வெந்து நொந்து சாக வேண்டும்.
கேவலமான பெண்ணுடன் உறவு வைத்திருந்தோமே என, இரண்டாவது மகன் வேதனைப்பட வேண்டும்.
மனைவியின் நடத்தை கெட்டத் தனத்தை நினைத்து, மூத்த மகன் ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும். அவர்கள் யாரும் கவலைப்படாத போது, நீ ஏன் மன அழுத்தத்தை அதிகப்படுத்தி, மனநலம் குன்றுகிறாய்
* பிரச்னைகளிலிருந்து விலகி இரு. சேற்றில் புரண்டு மகிழும் பன்றிகளிடமிருந்து துாரம் தள்ளி நில், சகோதரி.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.