
என்னைச் சுற்றிலும் மகிழ்ச்சி, மழைச்சாரலாய் பரவிக் கொண்டிருந்தது. நான், 'லலித மகால்' கல்யாண மண்டபத்தில், மணப்பெண்ணின் அறையில், கண்ணாடி முன் அமர்ந்திருக்கிறேன். என் தோழிகள் ப்ரியா, ஹேமா, விஜி, கல்பனா என் அழகுக்கு, இன்னும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தி, என் கண்களுக்கு மை தீட்டிக் கொண்டே,'கல்பனா... வாணியின் வலது கண்ணுக்குக் கீழே உள்ள மச்சம், கடவுளே அவளுக்கு, திருஷ்டிப் பொட்டு வச்சு படைச்சது போல் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்...' என்றாள்.
நான், என் கண்களை, கண்ணாடியில் உற்றுப் பார்த்தேன். சாகரமாக இருக்கிற, என் கண்களின் விழித் திரையில் இருந்த லேசான பழுப்பு நிறம், சுற்றிலும் வரைந்திருந்த, லக்மே ஐகானின் கறுப்பு வளைவுகளால், இன்னும் எடுப்பாகத் தெரிந்தது. ஆனால், அதில், புதைந்திருக்கும் சோகம், எனக்கு மட்டுமே புரியும்.
கார்த்திக்கின், கண்கள் பச்சை நிறமாக இருக்கும். ஆண்மை ததும்பும் அவனுடைய முகத்திற்கு, அந்தப் பச்சை கண்கள், ஏதோவொரு கவர்ச்சியைக் கொடுக்கும்.
'உன் பேரண்ட்ஸ்ல யாராவது வெளிநாட்டவரா?' என்று, நான் விளையாட்டாகக் கேட்டதுண்டு. கார்த்திக், தன் அழகான வரிசைப் பற்கள் தெரிய சிரித்தபடி, 'ம்ஹும்... இல்லை. என் அம்மாவுக்கு பச்சை கண். அந்த வழியில் தான் எனக்கு இருந்திருக்கணும். ஏன்... உனக்குத் கூடத் தான் பழுப்புக் கண்...' என்பான் சீண்டலுடன்.
அந்தப் பழுப்புக் கண்களிலிருந்து, இப்போது, கண்ணீரே வரவில்லை. கீழே மேளம், நாதஸ்வரம் ஒலிக்கும் சப்தம் கேட்டன. என் அம்மா, பரபரப்பாக உள்ளே வந்து, “என்னம்மா... இன்னுமா அலங்காரம் முடியல. கீழே ரிசப்ஷனுக்குக் கூட்டிட்டு வரச் சொல்றாங்க... போதும் கிளம்பு,” என்றாள்.
“ஒரே நிமிடம் ஆன்ட்டி,” என்று, விஜி, என் சேலையின் மடிப்புகளை, காலருகே உட்கார்ந்து சரி செய்தாள். நான் ஒன்றும் பேசவில்லை.
“நீ கீழே போம்மா... நான் வரேன்,” என்றேன்.
“மாப்பிள்ளை வந்துட்டார்டி... எத்தனை நேரம், அவரைக் காக்க வைக்கிறது...” என்றாள் அம்மா.
நான் திரும்புகையில், என் அறை வாசலுக்கே வந்து விட்ட, மாப்பிள்ளை கிரிதர், என்னைப் பார்த்து, புன்னகை செய்தான்.
“ஹாய்... கேர்ள்ஸ், என்ன போகலாமா...இல்ல இன்னும் நேரமாகுமா...” என்று, அவன் கிண்டலாகக் கேட்டான். நான், “இல்ல... விடுங்கடி போகலாம்,” என்று, கிளம்பினேன்.
நான், கிரிதரை நேராகப் பார்த்தபடி, அவனோடு கிளம்புகையில், வேண்டுமென்றே, என் தோழி கல்பனாவின் பார்வையை தவிர்த்தேன்.
அவளுக்கு, கார்த்திக்கை நன்றாகத் தெரியும்.
'நான் துரோகி... இரக்கமில்லாதவள்...' என்று, நினைத்துக் கொள்வாள்; நினைத்துக் கொள்ளட்டும்.
நேற்றுக் கூட கேட்டாள். 'கார்த்திக்கை உன்னால் எப்படி மறக்க முடிந்தது...' என்று.
நானும், கிரிதரும் படிகளில் இறங்கி வரும்போதே, கேமராக்கள் பளிச்சிட்டன. நாங்கள் தானே இன்றும், நாளையும் கதாநாயகனும், கதாநாயகியும்.
கீழே வரவேற்புக்காக, அலங்கரிக்கப்பட்ட மேடையில், நானும் கிரிதரும் ஏறி, நாற்காலிகள் அருகே செல்கையில், அப்பா, கைகளில் மாலைகளோடு, முகம் நிறைய சிரிப்புமாக நின்று கொண்டிருந்தார். கிரிதர், மாலைகளை அப்பாவிடம் இருந்து வாங்கி, ஒன்றை என் கழுத்தில் போட, இன்னொன்றை, என்னிடம் நீட்டி, “ம்... மாப்பிள்ளை கழுத்தில் போடும்மா,” என்றார் அப்பா.
நான் கிட்டதட்ட, எந்திரம் போல், மாலையை வாங்கி, செயற்கையாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், கிரிதர் கழுத்தில் சூட்டினேன். அப்போது தான், கிரிதரை கிட்டத்தில் பார்த்தேன். கிரிதரும் அழகாகவே இருந்தான். கார்த்திக் மாதிரி நிறமில்லை; மாநிறம் தான். ஆனால், கண்கள், புருவம் எல்லாவற்றிலும் ஒரு கவர்ச்சியும், ஆண்மையும் தெரிந்தது.
ஆர்ப்பரித்த மேள சத்தம் நின்று, மெலிதான, வயலின் இசை வருகிறது. ஒவ்வொருவராக மேடைநோக்கி வர, அறிமுகங்களும், பரிசு வழங்கலும், சிரிப்பும், கேமராக்களின் ஒளிச் சிதறல்களும், வீடியோக்களின் உஷ்ணமும், ஏதேதோ வாசனைகளும், வந்து வந்து போயின.
'ரிசப்ஷன்' முடிந்து, என் அறைக்கு வந்து, என் அலங்காரங்களை ஒவ்வொன்றாக கழற்றுகையில், என் தோழிகள், 'சளசள'வென்று சிரித்து கொண்டே ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களின், ஒரு சில கேள்விகளுக்கு நான், சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன். இல்லை... சிரிப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன். யார் சொன்னது, சாதாரண மனிதர்களுக்கு நடிக்க வராது என்று!
கல்பனா மட்டும், ஏதோ வேலையில் ஆழ்ந்திருந்தாள். இல்லை... அவளும், என்னைப் போலவே, வேலை செய்வது போல், பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்.
என் மனசின் மூலையில், ஏதோவொரு இடத்தில், ஒரு முள் குத்தி, ரத்தம் கசிந்து கொண்டிருப்பது எனக்கு மட்டுமல்ல, அவளுக்கும் தெரியும். ஆனால், வெளியே காட்டாமல், நான் நடிப்பது அவளுக்கு உறுத்துகிறது.
கார்த்திக், நாளைக்கு, என் கல்யாணத்திற்கு வர மாட்டான். வர மாட்டான் என்ன, அவனால், வர முடியாது. அது எனக்கும், கல்பனாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
எல்லாரும் உறங்கி விட்டனர். எனக்குத் தான் தூக்கம் வரவில்லை. மெல்ல எழுந்து, மண்டபத்தின் வராந்தாவைக் கடந்து, மொட்டை மாடிக்கு வந்தேன். சில்லென்று இருந்தது. தண்ணீர் தொட்டிக்காக போடப்பட்டிருக்கும் இரும்புப் படிகளில் உட்கார்ந்து, வானத்தைப் பார்த்தேன்.
மேகமற்ற வானம், நட்சத்திரங்கள் அங்கங்கே மினுக்கிக் கொண்டிருந்தன.
தனியாக, இருட்டில், உட்கார்ந்திருப்பது, அந்த முள்ளின் வலிக்கு, ஏனோ, இதமாக இருப்பது போல் தோன்றியது. நிமிடங்கள் கரைந்தன.
'எனக்கு, இருட்டில் உட்கார்ந்து, வானத்திலிருக்கும் நட்த்திரங்களைப் பார்ப்பது ரொம்ப பிடிக்கும்...' என்றான் கார்த்திக்.
'ஐய... லூஸா நீ... எனக்கு அதெல்லாம் ஆகாதுப்பா. பயம்மா இருக்கும்...' என்றேன் நான்.
'அட... நீ இவ்வளவு பயந்தாங்கொள்ளியா... என்னோட, ஒரு நாள், என் வீட்டுக்கு வா... உனக்கு நான் அதன் சுகத்தை, புரிய வைக்கிறேன்...' என்றான் கார்த்திக்.
'ஓ... நீ அப்படி, 'பிளான்' போடுகிறாயா... அதெல்லாம், நம்மகிட்ட நடக்காது...' என்றேன் நான்.
'சே... சே... அந்த மாதிரி, 'க்ரூட் லவர்' நான் இல்லை. பக்கா ஜென்டில்மேன் தெரியுமா...' என்றான் கார்த்திக்.
ஜென்டில்மேன் தான்.
இப்போது, எனக்கு, ஏனோ, இருட்டை பார்த்தால் பயமாக இல்லை.
'நம்ப லவ்வைப் பத்தி, உங்க வீட்டில சொல்லிட்டயா வாணி...' என்றான் கார்த்திக்.
'வெய்ட் ஜென்டில்மென். சீக்கிரம் சொல்லி, 'பர்மிஷன்' வாங்கிடுவேன், பயப்படாதே...' என்றேன் நான்.
'எனக்கு, அடுத்த இரண்டு வாரத்தில், 'ஆன்ஸைட்' போகணும் வாணி. யு.எஸ்., புறப்படறதுக்கு முன் பேசிட்டம்ன்னா நல்லதுன்னு தோணறது...'
'நீ சொல்றதும் சரிதான். அப்பா டூர் போயிருக்கிறார். அவர், இந்த வாரக் கடைசிலதான் வரார். அப்ப சொல்லிடறேன். உன்னை அடுத்த வாரம் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன்...'
'ம்... இன்னும், ஆறு நாள் இருக்கே...' என்று, இழுத்தான்.
'ஆறு வருஷமா காத்திருக்க சொல்றேன். ஆறு நாள் தானே, பொறு தம்பி...' என்றேன் நான்.
'என்னது தம்பியா?'
'சாரி சாரி... பொறு மகனே...'
'இது, இன்னும் மோசம். நான் மகனா...'
'சாரி... பொறுடா...'
'குட்...' என்று, என்னை அணைத்துக் கொண்டான்.
ஆனால், ஆறு நாட்களுக்குப் பின், அவன் வரத்தான் இல்லை.
''வாணி...”
கலைந்து திடுக்கிட்டேன். கல்பனா தான் அழைத்தாள்.
ஒன்றும் பேசாமல், அவள் முகத்தைப் பார்த்தேன்.
கல்பனா, ஒன்றும் பேசாமல், என் அருகில் வந்து அமர்ந்தாள்.
“நான் எப்படி, இந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்தேன் என்று தோன்றுகிறது இல்லையா...” என்று,கேட்டேன் கல்பனாவை.
அவள் பதில் சொல்லாமல், ஆழமாக என்னைப் பார்த்தாள்.
“கார்த்திக்கை, என்னால், எப்படி இவ்வளவு சீக்கிரத்தில், மறக்க முடிந்தது என்று தானே, கேட்க நினைக்கிறாய்...” என்று, திரும்பவும் கேட்டேன்.
என் முகத்தைப் பார்க்கவில்லை கல்பனா. நானே, மேலே பேசினேன்.
“மறந்து தான் ஆக வேண்டும் கல்பனா. எனக்கு வேறு வழி இல்லை.”
என் குரலில், லேசான அழுகை தெறித்தது. இதற்கும், பதில் தரவில்லை கல்பனா.
“காதல் உணர்வு என்பது, ஒருவரின் அந்தரங்கம். அதை, பலரிடம் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருப்பது, அவசியமில்லை என்பது என் கொள்கை.”
“அதற்காக?”
“கார்த்திக் எனக்கு இல்லை என்று ஆன பின், அதை நினைத்து அழுவதிலோ, இல்லை எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று இருப்பதிலோ, இல்லை தோற்றுப் போன காதலுக்காக, உயிரை விடுவதிலோ அர்த்தம் இருப்பதாக, எனக்கு தோன்றவில்லை.”
வெடுக்கென்று, பதில் சொன்னாள் கல்பனா...
“இருந்தாலும், உன், 'ரியாக்ஷன்' கொஞ்சம் அதிகம்.”
“என்னால், எங்க அப்பா-, அம்மா சொல்வதை மறுக்க முடியவில்லை. என்ன காரணம் சொல்லி மறுப்பது? கிரிதரிடம், எந்தக் குறையும் எனக்குத் தென்படவில்லை.”
“அப்ப, உனக்கு, உன் காதலைவிட, கல்யாணம் செய்துக்கிறது தான் முக்கியம்ன்னு தோணியிருக்கு.”
“நிறைவேற முடியாத, என் காதலைப் பற்றிச் சொல்லி, என்னைச் சேர்ந்தவங்களை, துன்புறுத்துவதில், எனக்கு என்ன கிடைக்கப் போகிறது, நீயே சொல்.”
“நீ கல்நெஞ்சுக்காரி வாணி. உனக்கு இதயமே இல்லை.”
கடைசியில் வந்து விட்டது. நான் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்த, அந்த வசை.
எனக்கு, அவள் கோபத்தைப் பார்த்து, கோபமும் வரவில்லை, அழுகையும் வரவில்லை. ஒரு நிமிடம் அங்கே மவுனம் நிலவியது.
பின், நானே அந்த மவுனத்தை கலைத்து, தொடர்ந்தேன்...
“விதியின் விளையாட்டுகளில் என் வாழ்க்கையும் ஒன்று கல்பனா. காதல் என்னைப் பற்றிக் கொண்டதும், எனக்கு அற்புதமான, ஒரு காதலன் கிடைத்ததும் அதிர்ஷ்டம் தான். ஆனால், அந்தக் காதலுக்கு முற்றுப்புள்ளி நானா வைத்தேன்? என் காதலையும், கார்த்திக்கையும் பற்றிச் சொல்வதற்குள், என் காதல் கதை, கலைந்து விட்டதற்கு நானா பொறுப்பு! இதைக் காரணமாகச் சொல்லி, நான், என் அப்பா, அம்மாவைத் தடுத்தால், வீண் மனஸ்தாபங்களும், பிரச்னைகளும்தான் எழும்.
“நான் ஆம்பிளையாக இருந்தாலும் பரவாயில்லை... பெண். நான், என் வாழ்நாள் முழுக்கக் கல்யாணம் ஆகாமல் இருக்க முடியுமா... அப்படி இருந்தால், என் பெற்றோர் மனம் என்ன பாடுபடும்? கார்த்திக்கிற்கும், எனக்கும் ஏற்பட்ட உறவு, ஒரு வருஷத்திற்குள் தான் இருக்கும். அந்த உறவின் முடிவுக்காக, நான் என்னை பெற்று, வளர்த்து, ஆளாக்கி, என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த பெற்றோரின் மனசை, நோக அடிப்பதில், எனக்குக் கிடைப்பது என்ன... இன்னும் துக்கம் தான். அதுவும், எத்தனை நாட்களுக்கு... எனக்கு வந்த காதல், ஓர் அழகான கனவு. எல்லாக் கனவுகளுமே நினைவாகிறதா அல்லது நீண்டு கொண்டு தான் போகிறதா? என் கனவு கலைந்து விட்டதற்கு, நான் யாரைக் குறை சொல்வது? விதி போடும் பாதையில், பிறர் மனம் நோகாமல் சொல்வதைத் தவிர, வேறு வழி உனக்குத் தெரிந்தால், நீ, எனக்கு சொல்லு.”
“உனக்கு அழுகை கூட வரவில்லையே வாணி,” என்றாள் ஆச்சர்யத்துடன் கல்பனா.
“சில நிகழ்வுகள், அழுகையை விட அதிர்ச்சியைத் தான் அதிகம் தரும். எனக்கு கிடைத்தது அதிர்ச்சி. அதனால் தான், எனக்கு கண்ணீர் வரவில்லை.”
நானும், கார்த்திக்கும் பேசிக் கொண்டது நினைவுக்கு வந்தது...
'என்னால், உன்னைக் கல்யாணம் செய்ய முடியாவிட்டால், என்ன செய்வாய் வாணி?'
நான், முறைத்தேன் கார்த்திக்கை.
'என்ன... வேறு ஏதேனும், பிளான் வச்சுருக்கயா?'
'சே... சே... ஒரு பேச்சுக்குக் கேட்டேன்...'
'சரி... அதே கேள்வியை, நான் உன்னைக் கேட்கிறேன் நீ என்ன செய்வ?'
'ம்...நான் தேவதாஸ் மாதிரி, தாடியெல்லாம் வளர்த்து, தண்ணியடிச்சிட்டு, 'வாணி வாணி' என்று, தெருத் தெருவாத் திரிவேன் என்றா நினைக்கிறாய்... மாட்டேன். வேற... உன்னை விட, அழகான பெண்ணாய்ப் பார்த்து...'
'பார்த்து...'
'மறுபடி, காதலிக்க ஆரம்பிப்பேன்...'
'ராஸ்கல்...' என்று, அவன் தலையில், செல்லமாக அடித்தேன்.
'ஆ... ராட்சஸி...' என்று, பொய்யாக அலறினான் கார்த்திக்.
அசந்தர்ப்பமாக, அந்த நினைவில், புன்னகை வந்தது.
''நாம் நினைக்கிறபடியே எல்லாம் நடந்து விட்டால், அது வாழ்க்கையில்லை கல்பனா. கார்த்திக்கை, நான் மறந்து தான் ஆக வேண்டும். அதற்குத் தான், இந்தக் கல்யாணம். என் காதல், எனக்கும், உனக்கும் கார்த்திக்குக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். இது, நம்முடனேயே முடிந்து போகட்டும்.”
“அதுவும் சரிதான்,” என்று, முனங்கினாள் கல்பனா.
“ஒவ்வொருவருக்கென்றும், ஒரு அந்தரங்கம் இருக்கிறது. அது புனிதமானது. அதை, எல்லாருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது அநாவசியம்,” என்றேன். தொடர்ந்து, “நான், இனி, கிரிதரைத் தான் காதலிக்கப் போகிறேன்,” என்று கூறினேன்.
“ஆனாலும், நீ கல் நெஞ்சுக்காரி தான்,” என்றாள் கல்பனா.
“இருக்கலாம்... என் காதலை முறித்தது, நானோ, கார்த்திக்கோ, என் பெற்றோரோ, அவன் அப்பா- அம்மாவோ அல்ல. அவர் அல்லது அது,” என்று, வானத்தை நோக்கி கை காட்டினேன்.
கிழக்கில் தெரிந்த லேசான சாம்பல் நிறத்தை கிழித்துக் கொண்டு, பொன் நிற வெளிச்சம் உதயமாகிக் கொண்டிருந்தது.
''இன்னும் கொஞ்ச நேரத்தில், நன்றாக விடிந்து விடும். வா... போகலாம்,” என்று எழுந்தேன் நான். கல்பனாவும் எழுந்து, என்னுடன், கீழே வந்தாள். என்னையும் அறியாமல், கண்களில், கண்ணீர் எட்டிப் பார்த்தது.
கார்த்திக், என் வீட்டிற்கு வருவதாகச் சொல்லி இருந்த, அந்த வாரத்தின், ஒருநாளில், எதிர்பாராத விபத்தொன்றில், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்திருந்தான்.
தேவவிரதன்

