sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்

/

அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்


PUBLISHED ON : நவ 10, 2013

Google News

PUBLISHED ON : நவ 10, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு சகோதரி

என் வயது 28. ஆங்கிலப் பள்ளியில் ஆயா வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி, 12 வருடங்கள் ஆகிறது. நானும், என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, 15 வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மூன்று பெண் குழந்தையும், கடைசியாக ஒரு ஆண் குழந்தையும் உண்டு. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து, நாங்கள் இருவர் மட்டுமே சொந்தம் பந்தம், தாய், தந்தை என்று வாழ்ந்து வந்தோம்.

என் போதாத காலம்... என் மகன் பிறந்த நேரத்தில், என் கணவருக்கு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டு, ஆறு மாதங்களில் இறந்து விட்டார்.

என் பெற்றோர், என் கணவன் சாவுக்கு கூட வர மறுத்து விட்டனர். என் கணவர் வீட்டினரும் எங்களை கவனிப்பது கிடையாது. எனக்கு தெரிந்தவர்களின் உதவியுடன், நான்கு ஆண்டுகளாக, ஒரு பள்ளியில், ஆயா வேலை செய்து வருகிறேன்.

அடுத்த தெருவில் குடியிருக்கும், என் சின்ன மாமியாரின் மகன், அடிக்கடி வந்து, எனக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். அவருக்கு வயது 25. அவர் அன்பு, ஆறுதல், நாளாக நாளாக, அனைவரும் எங்களை தவறாக பேசும்படி செய்து விட்டது. அனைவரும் எங்களை இணைத்து பேசினர்.

'அனைவரும் நம்மை இணைத்து பேச ஆரம்பித்து விட்டனர். அது உண்மையாகவே இருக்கட்டும். நான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்...' என்று பழக்கத்தை தொடர்ந்தார்! நான் சிறு வயதாக இருப்பதாலும், கணவரை இழந்து, நான்கு வருடம் தனிமையிலிருந்ததாலும், என் கொழுந்தனாரை விரும்பினேன். அவர் மேல், அளவு கடந்த அன்பு வைத்து, இவ்வுலகமே, அவர் தான் என்று வாழ்ந்து வருகிறேன்.

தற்போது, என் மனசாட்சி, குத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு திருமணமாகாதவரின் மனதை கெடுத்து விட்டோமே என்று. நாம் திருமணமாகி குழந்தைகளை பெற்று விட்டோம். அவர், அதை அடையவில்லை. ஊர் கேவலமாக பேசுமே என்று அஞ்சுகிறேன்.

மேலும், நாங்கள் வாழ்க்கையில் இணைவதால், என் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்குமே என்று எண்ணி வேதனைப்படுகிறேன். என் குழந்தைகளுக்காக அவரை மறந்து விடுவது நல்லதா அல்லது அவரோடு சேர்ந்து வாழ்வதா என்று புரியாமல், யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

நான், அவரை பிரிந்து, என் குழந்தைகளுக்காக வாழ்வேன்; அவரால், இருக்க இயலாது. எனவே, எங்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியை கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பு தங்கைக்கு

உன் கடிதம் கிடைத்தது. நான்கு குழந்தைகளுடன், 28 வயதிலேயே கணவனை இழந்து, ஆதரவற்று நிற்பது தாங்க முடியாத சோகம் தான்...

ஆனாலும், எப்பேர்பட்ட துக்கத்தையும், காலம் ஆற்றி விடும் வரத்தை, கடவுள், நமக்களித்திருக்கிறார். சரி... உன் விஷயத்துக்கு வருவோம்.

படர்வதற்குப் பந்தல் இல்லாத கொடி, எதன் மீதாவது, தொற்றிப் படர்வது இயற்கைதான்... 28 வயதில் நிற்கும் உன்னை, இப்போது, உனக்கு கிடைத்திருக்கும் துணையை உதறு என்று நான் கூறினால், அது உனக்கும், உன்னுடைய காதலருக்கும் எரிச்சலாகக் கூட இருக்கும்.

ஆனால், என் அன்புத் தங்கையே... நீ, இதே வயதில், குழந்தை ஏதுமில்லாமல், கணவனை இழந்து நின்றால், 'சரி, உனக்கும் பிடித்திருந்தால் மறுமணம் செய்... தப்பே இல்லை' என்று, நான் சொல்லியிருப்பேன்...

நம் நாடு இருக்கும் நிலையில், இரண்டாவது குழந்தையே அதிகம் என்று, ஒரு குழந்தையோடு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் கால கட்டத்தில் நீ, நாலு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாய். உன் காதலன், இப்போது உன் மீதுள்ள ஆசையினால், உன் நாலு குழந்தைகளையும், தன் குழந்தைகளாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள், நமக்கென்று ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம், வார்த்தைகளில் வெடிக்கலாம்...

அப்படியெல்லாம் சொல்லக் கூடியவர் இல்லை என்கிறாயா... மனம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை கண்ணம்மா... நிமிடத்துக்கு நிமிடம் மாறும். அவர் சொல்லக் கூடியவர் இல்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள், - அலுப்பில், களைப்பில் அல்லது உண்மையிலேயே குழந்தைகளின் நலனில் ஏற்பட்ட அக்கறையில், உன் புதுக் கணவர் உன் குழந்தைகளைக் கடிந்து ஒரு வார்த்தை சொன்னாலும், உன்னால் அதைத் தாங்க முடியாது...

'இதுவே உங்க குழந்தையின்னா இப்படி சொல்லுவீங்களா?'

- இப்படிப்பட்ட பேச்சுகளுக்கெல்லாம், இடம் அளிக்க வேண்டி வரும்.

அதுமட்டுமில்லை, நீங்கள் இருவருமே ஒருவரையொருவர் நன்கு புரிந்து வாழ்ந்தாலும், உன் குழந்தைகள் வளர்ந்து, ஆளாகும் போது, உன்னையும், அந்தப் புது அப்பாவையும் மனதார அங்கீகரிக்க வேண்டும்...

'எங்களைப் பத்தி கொஞ்சமும் அக்கறையில்லாம உன் வாழ்க்கை பெரிசுன்னு இன்னொருத்தரை சேர்த்துகிட்டவதானே நீ...'

- இப்படியொரு சொல், பெற்ற குழந்தைகளின் வாயிலிருந்து வந்தால், எந்த பெண்ணும் தாங்க மாட்டாள்... என்னதான் காலம் மாறினாலும், பெண்களுக்கு சுதந்திரமும், உரிமையும் கிடைத்தாலும், மனதளவில் நம் பொறுப்புகளிலிருந்து நழுவி விடக் கூடாது சகோதரி... எதிர்பார்ப்பின்றி அன்பைக் கொடுப்பது, பெற்றவள் ஒருத்தி தான்.

அந்தப் பெற்றவளும், தனக்கு சொந்தமில்லை என்று நினைக்கும் போது, -அந்தக் குழந்தைகளின் மனசு என்ன பாடுபடும் என்பதை, கொஞ்சம் யோசித்து பார். உன் காதலனுக்கு, வேறொரு நல்ல மனைவி கிடைப்பாள். ஆனால், உன் குழந்தைகளுக்கு உன்னைப் போல், பாசத்தைத் தருகிற, இன்னொரு தாய் கிடைக்க மாட்டாள்.

ஆதலால், இக்கடிதத்தை, அவருக்கும் படிக்கக் கொடு.

நாளைக்கு, உங்களது இந்த சிறு சபலத்தினால், உன் மூன்று பெண்களின் வாழ்க்கையிலும் கேள்விக்குறிகள் முளைப்பதை இப்போதே தடுத்து விடு. ஆம்... உன் பெண்களுக்கு வருகிற கணவர்களுக்கு, தங்கள் மனைவியை வார்த்தையால் குத்த, நீதான் ஊசியாய் பயன்படுவாய்... அவர்களுடைய காலத்தில், இதெல்லாம், ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் போனாலும் போகலாம்... ஆனால், 'இவ அம்மா...' என்று, யார் உன்னைப் பற்றி பேசினாலும், உன் குழந்தைகள் கூசிக் குறுகிப் போவர்.

உடலின் தேவைகளைப் புறக்கணிப்பது அத்தனைச் சுலபமல்லதான். 'இப்படி இச்சைகளை அடக்குவதால், - நடு வயதுப் பெண்கள், பல விதமான மன நோய்களுக்கு ஆளாகின்றனர்...' என்று, மனோதத்துவ மேதைகள் சிலர் சொல்லலாம். ஆனால், எதற்கும் ஒரு மாற்று உண்டு.

அந்தக்காலத்தில், இளம் விதவைகள், தங்களது முடியுடன் கூட, ஆசையையும் மழித்துக் கொண்டு, வெள்ளைப் புடவை உடுத்தி, அடுப்படியோடும், பூஜை, புனஸ்காரத்தோடும் தங்களைத் தாங்களே தேய்த்துக் கொண்டனர்... இப்படிப்பட்டவர்களுக்குத் தான், புது மணத்தம்பதிகள் அல்லது நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கையில் ஆத்திரம், அழுகை, அசூயை எல்லாம் வரும்.

இப்போது, அந்த நிலை மாறி விட்டது. ஒரு கதவு முடினால், இன்னொரு கதவு உனக்காகத் திறக்கக் காத்திருக்கிறது.

ஆமாம். இன்று உனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை, சாதனைக்கான பாதையாக மாற்றப் பார். ஆயா வேலை பார்க்கும் நீ, உனது பள்ளி இறுதிப் படிப்பை வீட்டிலிருந்தபடியே படிக்கலாம். ஆசிரியை பயிற்சி பெற்று, சிறந்த ஆசிரியை ஆகலாம். நன்றாக உழைத்தால், 'நல்லாசிரியை' விருது கூட வாங்கலாம். உருப்படியாகச் செய்ய இந்த உலகில் எத்தனை இருக்கிறது தெரியுமா?

ஒன்றை இழந்தால்தான், மற்றொன்றை பெற முடியும்.

நிச்சயம் முடியும்.

- என்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us