PUBLISHED ON : ஜூன் 07, 2020

சீனாவின் ஷிபோ மாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண், ஜாவோ. இவர், கடந்த சில ஆண்டுகளாக, தன் நண்பரை காதலித்து வந்தார். ஆனால், அந்த காதலர், வேறு ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலிப்பது, சமீபத்தில் தான், ஜாவோவுக்கு தெரிய வந்தது. இதனால், காதலனை திட்டித் தீர்த்தார்.
ஆனாலும், அவருக்கு மனது ஆறவில்லை. காதலனை பழிக்குப் பழி வாங்க முடிவு செய்தார். 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனத்தில், 1,000 கிலோ வெங்காயத்தை, 'ஆர்டர்' செய்து, அதை, தன் காதலனின் வீட்டுக்கு, 'டோர் டெலிவரி' செய்ய வைத்தார்.
தன் வீட்டு வாசலில், ஒரு லாரியில், மூட்டை மூட்டையாக வெங்காயம் வந்திறங்குவதை பார்த்து, கடும் அதிர்ச்சி அடைந்தார், காதலன்.
அந்த வெங்காய பார்சலுடன், ஜாவோ அனுப்பியிருந்த கடிதத்தில், 'காதலுக்கு துரோகம் செய்து, என்னை அழ வைத்தாய் அல்லவா... இப்போது நீ அழுது புலம்பு...' என, எழுதியிருந்தார். வெங்காயத்தையும், அந்த கடிதத்தையும் பார்த்து, காதலருக்கு மயக்கமே வந்து விட்டதாம்.
ஜோல்னாபையன்
