PUBLISHED ON : ஜூலை 23, 2017

மாலை நேரம் —
காபி குடித்தபடி, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார், மயில்வாகனன்.
வாசலில், பைக் சத்தம் கேட்டது. புயல் போல் வீட்டிற்குள் நுழைந்த கோபி, ஹாலில் உட்கார்ந்திருந்த அப்பாவை, கண்டும், காணாதது போல தன் அறைக்குள் சென்று விட்டான்.
சாத்தியுள்ள அறையின் முன் நின்று,''கோபி... காபி போடட்டுமா...'' என்று கேட்டாள் அம்மா, வள்ளி.
''கொஞ்சம் நேரம் போகட்டும்,'' என்றான் உள்ளிருந்தவாறு! ஜன்னல் வழியாக பார்த்த போது, உடையைக் கூட மாற்றாமல், கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருந்தான். யாரையும் பார்க்க, பேச பிடிக்காமல், தன்னை, அவன் தனிமைப்படுத்திக் கொள்வது தெரிந்தது.
''கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துட்டான்; எப்ப எழுந்து வருவானோ... அந்த அளவுக்கு வேலை அவனை படுத்தி எடுக்குதோ என்னவோ... அதுக்கு தான், முதல்லயே சொன்னோம்... இந்த படிப்பு வேணாம்ன்னு கேட்டத்தானே...'' என்று, அவள் அங்கலாய்க்கும் போதே, 'படக்'கென்று கதவை திறந்த கோபி, ''நான் சொன்னேனா... வேலை பளுவாயிருக்கு; என்னால முடியலன்னு... நீங்களா, எதையாவது கற்பனை செய்யாதீங்க. வெளியில் இருந்து வந்தவனுக்கு, 'டயர்டா' இருக்காதா... அரை மணி நேரம், 'ரெஸ்ட்' எடுக்க கூடாதா,'' என்று சிடுசிடுத்தான்.
''சரிப்பா... 'ரெஸ்ட்' எடு; தோணும் போது சொல்லு, காபி கலக்குறேன்,'' என்று சொல்லி, கிச்சனுக்கு போனாள்.
நடப்பதை கவலையுடன் பார்த்த மயில்வாகனன், 'டிவி'யை நிறுத்தி, காலி கோப்பையுடன் எழுந்து வந்தார்.
''பாத்தீங்களா, அவன் எப்படி நடந்துக்குறான்னு... இப்ப எல்லாம் கலகலப்பா பேசுறதே இல்ல; முன்னெல்லாம் எவ்வளவு வேடிக்கையா பேசுவான். இப்ப ஒரு வார்த்தை பேசுறதுக்கு கூட யோசிக்கிறான்,'' என்று, புகார் வாசித்தாள், வள்ளி.
''இங்க பாரு... அவன் என்ன இன்னும் சின்ன குழந்தையா... படிச்சு, வேலைக்கு போய்கிட்டிருக்கிறவனுக்கு, நிறைய ஆபிஸ் பிரச்னைகள் இருக்கும்,'' என்று, மனைவிக்கு சமாதானம் செய்தாலும், யோசனையுடன் நகர்ந்தார், மயில்வாகனன்.
சிறிது நேரத்தில் போன் ஒலிக்க, யாரும் எடுக்காததை பார்த்து, ''அதான் போன் அடிக்குதுல்ல, யாராவது எடுங்களேன்; யார் காதிலும் விழலையா,'' என்று, அறையிலிருந்து கத்தினான் கோபி.
''இதோ எடுக்குறேன்பா,'' வேகமாக, 'ரிசிவர்' எடுத்து பேசிய மயில்வாகனன், ''அடடே துரையா... பாத்து எவ்வளவு நாளாச்சு... வீட்ல எல்லாரும் சவுக்கியமா...'' என்று விசாரித்தார்.
அவர் ஏதோ ஒரு முக்கியமான தகவல் சொல்லியிருப்பார் போலிருக்கு. ''துரை... நீ என் மொபைலுக்கு வர்றியா... இங்க, 'லேண்ட் லைனில்' பேசறது, என் மகனுக்கு இடைஞ்சலாக இருக்கும்; அவன் முக்கியமான வேலையில் இருக்கான்,'' என்று சொல்லி, மொபைல் நம்பரை தந்து, ரிசீவரை வைத்தார்.
தன் அறையை ஒட்டி, மரத்தடியில் நின்று, கத்தி பேசும் அப்பாவை சத்தம் போடுவதற்காக எழுந்து, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த கோபி, அப்பாவின் பேச்சை கேட்டு நிதானித்தான். போனில் சீரியசாக பேசிக் கொண்டிருந்தார், மயில்வாகனன்...
''துரை... பத்து, பதினைந்து வயசு வரைக்கும், பசங்க நம்ம கைக்கு கீழ இருக்காங்க; அதுக்கு மேல போய்ட்டா, அவங்களுக்கு பெரிய மனுஷ தனம் வந்துடுது. தனக்கு தானே முடிவெடுக்குறது, அவங்க கருத்துல பிடிவாதமாக இருக்கிறதுன்னு மாறிப் போயிடறாங்க. தன் திறமை என்ன, எந்த வழியில் போனால், சிறப்பாக செயல்பட முடியும்ன்னு முழுசா தெரிஞ்சுக்காம, அந்த நேரத்துல எது வசீகரமாக இருக்கோ அந்த துறைப் பக்கம் சாய்ந்திடுறாங்க. உன் பிள்ளையும், அப்படி தான் செய்திருக்கான்.
''இப்ப, அவனுக்கு அவன் தேர்ந்தெடுத்த துறை சரியில்லன்னு தோண ஆரம்பிச்சுருக்கு; அத உன்கிட்ட சொல்லலாம்ன்னா, 'ஆரம்பத்திலேயே சொன்னேனே... இந்த, 'கோர்ஸ்' வேணாம்ன்னு; நீ கேட்டியா'ன்னு கண்டிக்க ஆரம்பிச்சிடுவியோங்கற பயம் அல்லது அவனுக்கு தான் தோத்து போயிட்டதாய் நினைச்சிட கூடாதுங்கற ஈகோவுல, தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கிறான். இதப்பத்தி, உன் மகன் சீனுகிட்ட நான் பேசுறேன்; நீ கவலைப்படாதே...'' என்றபடி திரும்பினார்.
சட்டென்று திரும்பிக் கொண்டான் கோபி.
மறுநாள், அவன் வீட்டுக்கு வரும் போது, அப்பா, தோட்டத்து வாசலில் நின்று, மொபைலில் பேசுவதை, அவனையறியாமல் காதில் வாங்கினான், கோபி.
''சீனு... உனக்கு வேலை தானே போச்சு; குடி ஒண்ணும் மூழ்கிடலயே... இதுக்காக வருத்தப்படவோ, ஒரேயடியாய் நம்பிக்கை இழக்கவோ கூடாது. இந்த வயசுல, நீ தேர்ந்தெடுத்த படிப்போ, வேலையோ உனக்கு பொருந்தலைன்னு தோணிச்சுன்னா, அங்கேயே உட்கார்ந்து, யோசனை செய்துக்கிட்டிருக்காம, நமக்கு பொருத்தமான வேலையோ, தொழிலையோ தேர்ந்தெடுத்திரணும்.
''நீ பிடிவாதமா தேர்ந்தெடுத்த படிப்பு, அதன் மூலம் கிடைச்ச வேலை... அதனால, தோத்து போய்ட்டதா, 'பீல்' செய்றியா... இந்த வயசுல இப்படி தான், சின்ன சிக்கல் கூட, பூதாகரமா தெரியும்; கொஞ்சம் விலகி வந்து பாத்தால், எல்லாம் சரியாயிடும்...'' என்று பேசியவாறு தோட்டத்தில் இறங்கி போனார்.
அவர் போவதையே பார்த்தபடி நின்றான் கோபி. 'யாருப்பா அது... என்ன பிரச்னை...' என்று, கேட்க வேண்டும் போல் இருந்தது; ஆனால், கேட்கவில்லை.
அடுத்த நாளும் அப்பாவின் பேச்சு, வீட்டில் இரைந்து கொண்டிருந்தது.
''சீனு உனக்கு சின்ன வயசு... இப்ப எந்த படிப்பையும் படிக்கலாம்; எந்த துறையையும் முயற்சி செய்யலாம். நாலு வருஷம் வீணா போச்சுன்னு, 'பீல்' செய்து, அடுத்து உள்ள, 50, 60 ஆண்டு வாழ்க்கையை கெடுத்துக்காதே. எனக்கு தெரிஞ்சு, மெடிக்கல் காலேஜில் சேர்ந்து, இரண்டு வருஷம் படிச்சு, பிடிக்கலைன்னு உதறி, வேற படிப்புல சேர்ந்திருக்காங்க; டிப்ளமா மெக்கானிக்கல் முடிச்சு, வேலை பிடிக்காம, 'ஆர்ட்ஸ்' படிச்சு, பிடிச்ச வேலைக்கு போனவங்க இருக்காங்க. வாய்ப்புகள் கொட்டி கிடக்கு; ஒண்ணு சரியில்லனா, இன்னொன்ன தேர்ந்தெடுத்து, போய்கிட்டே இருக்கணும்.
''குழந்தை, நடக்க முயற்சிக்கிறப்ப, விழத்தான் செய்யும்; விழும் போது வலிக்கும்; அழுகை வரும்; அதற்காக, குழந்தை அடுத்து முயற்சி செய்யாமல் இருக்குமா... கால் உறுதியாகிற வரை, இந்த தடுமாற்றம் இருக்கும். கொஞ்சம் வளர்ந்துட்டால் போதும்; எல்லாம் புரிபட்டுரும். இப்ப என்ன... நீ, நம்பி போன இரண்டு முயற்சிகள் கை விட்டு போச்சு அவ்வளவு தானே... எடிசன் மாதிரி எட்டாயிரம் முறையா முயற்சி செய்துட்டே...'' என்றவர் மகனை பார்த்ததும், ''ஓ... சாரி கோபி; தொந்தரவு செய்துட்டேனா,'' என்று, கொஞ்சம் தள்ளி நின்று, பேச்சை தொடர்ந்தார்...
'யாரோடு பேசுகிறார் அப்பா...' என்று, நகராமல், அந்த பேச்சை கவனித்தான் கோபி.
அவனுக்கு முதுகு காட்டி நின்று, அவர் பேசினாலும், பேச்சு அவனுக்கு எட்டியது.
''பாரு சீனு... முதல்ல, நீ ஒண்ண நல்லா புரிஞ்சுக்க... உன் மீதும், உன் திறமை மீதும் நம்பிக்கை வை; தன்னம்பிக்கை இல்லாதவன் தான், எதிர்காலத்தை நினைச்சு பயப்படுவான். நம்மை விட்டு எது போனாலும், நம்பிக்கை ஒண்ணு இருந்தால் போதும்; மேலே வந்துடலாம். இந்த விஷயத்தை, தயக்கமில்லாமல் உன், 'பேரண்ட்ஸ்' கிட்ட பகிர்ந்துக்க... பெத்தவங்ககிட்ட என்ன, ஈகோ... அவங்க, எப்பவும் உன் நல்லதை தானே விரும்புவாங்க... தயக்கமா இருந்தால், நான் வந்து பேசுறேன்; டோன்ட் வொர்ரி...'' என்று முடித்தார்.
யோசனையுடன் அறைக்குள் போனான், கோபி.
''என்னங்க...''
''ம்...''
''யாருங்க அந்த பையன்?''
''எந்த பையன்?''
''தினமும் போன் போட்டு
பேசுறீங்களே...''
''அவனா... என் நண்பன்
துரையோட பிள்ளை.''
''அவனுக்கென்ன பிரச்னை?''
''பிளஸ் ௨வில் அவன் எடுத்த, மார்க்க வச்சு, பெத்தவங்களும், டீச்சர்சும், அவனை, இன்ஜினியரிங் எடுக்க சொல்லியிருக்காங்க; இவன், பிடிவாதமா வேற ஒரு, 'கோர்ஸ்' எடுத்து படிச்சான். அதற்கான வேலை வாய்ப்பும், சொல்லிக்கிற மாதிரி இல்ல. சில இடங்கள்ல முயற்சி செய்து, தோத்து சோர்ந்து போயிருக்கிறான்; இப்ப, தப்பு செய்துட்டமோ, தோத்து போயிட்டமோங்கற பயம் வந்துருச்சு; ஆனாலும், வீம்புக்காக, அந்த, 'லைன்'லயே இருக்கான். அதான், 'அட்வைஸ்' செய்து, தேத்திக்கிட்டிருக்கேன்.''
''பொய்... உங்களுக்கு துரைங்கிற பேர்ல நண்பரே கிடையாது; இதுல, அவர் பையனுக்கு, 'அட்வைஸ்'ங்கறது டூப்பு. உங்களுக்கு, யார் கிட்ட இருந்தும் போன் வர்றதேயில்ல. வர்றது போல, நீங்களா, 'செட்' செய்து, மணிக்கணக்கா, போன்ல, 'அட்வைஸ்' மழை பொழியுறீங்க. என்னாச்சு உங்களுக்கு,'' என்று, கிடுக்கிப்பிடி போடவும், ''பரவாயில்லயே, கண்டுபிடிச்சுட்டியே... அப்படின்னா, எதுக்காக அப்படி பேசுறேன்னும் உனக்கு புரியணுமே...'' என்றார்.
''புரியலயே...''
''எல்லாம், நம்ம பையனுக்காக தான்,'' என்றவர், ''இப்பெல்லாம் ஏன் கோபி எரிஞ்சு விழுறான்னு உனக்கு தெரியுமா?'' என்றார்.
''தெரியலயே...''
''அவன் பார்த்துக்கிட்டிருந்த வேலை போச்சு,'' என்றார்.
''என்னங்க சொல்றீங்க?''
''வேலை போன விஷயத்தை நம்மகிட்ட மறைக்கிறான்; அன்னைக்கு, நாம அவ்வளவு சொல்லியும், கேட்காம, பிடிவாதமா, அவனுக்கு தோணுன கோர்ஸ் எடுத்துப் படிச்சான். படிப்பை குறை சொல்ல முடியாது. எதை படிச்சாலும், எந்த வேலைக்கு போனாலும், சின்சியரா இருந்தால், முன்னுக்கு வந்துடலாம். துரதிருஷ்டவசமா, நம்ம பையனுக்கு, அந்த, 'லைன்' செட்டாகல. அதை வெளிப்படையா சொன்னால், தான் தோத்துட்டதா மத்தவங்க நினைச்சிடுவாங்களோன்னு, நல்லா போய்க்கிட்டிருக்கிற மாதிரி காட்டிக்கிட்டிருக்கான்.
''இது, அவனுக்கு நல்லது இல்ல; போகப் போக மன அழுத்தத்தை ஏற்படுத்திடும். அதன் அறிகுறி தான் எரிச்சலும், கோபமும்! இதப் பத்தி, நாம நேரடியா பேசினா, புரிஞ்சுக்க மாட்டான். அதான், யாருக்கோ சொல்ற மாதிரி, அவனுக்கு சொல்லிக்கிட்டிருக்கேன். புரிஞ்சு, நம்மகிட்ட அவன் பிரச்னைகளை, வெளிப்படையா பேச முன் வந்தால் போதும்; அவன் சிக்கல் தீர்ந்திடும். குறைந்தபட்சம், அவன் மனதிலிருக்கும் அழுத்தம் குறைந்து, இயல்புக்கு வந்தாலே, நல்ல விஷயமாய் இருக்கும்,'' என்றார்.
அவர் நம்பிக்கை வீண் போகவில்லை; தொடர்ந்து, கற்பனை சீனுவுடன் பேசியதில், ஒருநாள், ''அப்பா... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்; சீனுவுக்கு போலவே, எனக்கும் ஒரு பிரச்னை...'' என்றான், கோபி.
மகனை ஆதரவாக அணைத்து, ''சொல்லு கோபி,'' என்றார்.
சொல்ல துவங்கினான் கோபி; அவன் பிரச்னை, கொஞ்சம் கொஞ்சமாக, அவனை விட்டு விலகத் துவங்கியது.
படுதலம் சுகுமாரன்
