PUBLISHED ON : ஜூலை 23, 2017

கடந்த, 2006ல், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற, சிதம்பரத்தை சேர்ந்த, எஸ்.நடன குஞ்சிதபாதம் எழுதியது:
பத்து ஆண்டுகளுக்கு முன், உத்தம சோழமங்கலம் என்ற ஊரில், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்தேன். அச்சமயம், செப்., 5, 2006ல் தேசிய நல்லாசிரியர் விருதை பெறுவதற்காக, டில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
விருது வழங்கப்பட வேண்டிய நிகழ்ச்சிக்காக, முதல் நாளே, ஒத்திகை நடைபெற்றது.
மாநில வாரியாக, ஒவ்வொரு ஆசிரியருக்கும் வரிசை எண்கள் வழங்கப்பட்டு, 'ஒவ்வொரு ஆசிரியரும் எப்படி வர வேண்டும்; எப்படி திரும்பிச் செல்ல வேண்டும்...' என்று, மனித வள மேம்பாட்டு துறை அலுவலர்களால், பயிற்சி அளிக்கப்பட்டது.
விருது வழங்கும் விழா, புதுடில்லி, 'விஞ்ஞான் பவனில்' காலை, 9:30 மணிக்கு துவங்கியது.
ஒவ்வொரு ஆசிரியரையும் மேடைக்கு அழைக்க, இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கையால், விருது வழங்கும் நிகழ்ச்சி, நடந்து கொண்டிருந்தது.
வடமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மேடைக்கு அழைக்கப்பட, யாரும் மேடைக்கு வராததால், அப்துல் கலாமும், மேடையில் இருந்த அலுவலர்களும், ஒரு கணம் திகைத்து நின்றனர்.
சிறிது நேரத்தில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு ஆசிரியரை, 'அசோகா ஓட்டல்' பணியாளர்கள், மேடைக்கு அழைத்து வந்தனர்.
அதை கவனித்த அப்துல் கலாம், 'தடதட'வென்று பூட்ஸ் கால்கள் ஒலிக்க, 10 வயது சிறுவனை போல் மேடையில் இருந்து கீழே இறங்கி, அந்த ஆசிரியரிடம் ஓடோடி சென்று, விருதை வழங்கி, அவரை கட்டித் தழுவினார்.
தன் எதிரே வந்து நிற்பவர் இந்திய ஜனாதிபதி என்பதை உணர்ந்த அந்த ஆசிரியர், தன் நிலை மறந்து, எழுந்திருக்க முயன்றார்.
அவரை தடுத்து, சக்கர நாற்காலியில் அமரச் செய்து, அந்த வண்டியை தானே திருப்ப முயற்சி செய்தார், அப்துல் கலாம். ஆனால், அதிகாரிகள் தடுத்து விட்டனர்.
பின், அடுத்து விருது பெற வேண்டிய ஆசிரியர் மேடையில் நிற்பதை உணர்ந்த அப்துல் கலாம், அதே துள்ளலுடன், மேடைக்கு வந்து, நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
மாற்றுத்திறனாளியான அந்த ஆசிரியரிடம் அவர் காட்டிய வாஞ்சையையும், பரிவையும் உணர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் எழுப்பிய கரவொலி, 10 நிமிடங்கள் நீடித்தது.
அப்துல் கலாமின் மறைவு, இந்தியாவுக்கே மட்டுமல்ல, உலகத்திற்கே பேரிழப்பு!
'நினைத்து பார்க்கிறேன்' கட்டுரையில், ஜெயகாந்தன் எழுதியது:
ஒருமுறை, நண்பர் ஒருவருடன் கன்னியாகுமரிக்கு சென்றிருந்தேன். அது பனிக்காலம்... இரவு பவுர்ணமி நிலவில், தலையில், முண்டாசு கட்டி, கடற்கரையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். பின், திரும்பி வரும் போது, அங்கே நின்றிருந்த விவேகானந்தர் சிலையை பார்த்து, என்னிடம், 'சுவாமி விவேகானந்தரின் முகச்சாயல், உங்களுக்கு இருக்கிறதுன்னு யாராவது உங்க கிட்ட சொல்லியிருக்காங்களா?' என்று கேட்டார், நண்பர்.
அவர் அப்படி கேட்டதும் எனக்கு சந்தோஷமாகயிருந்தது. ஏனெனில், எனக்கே பல சமயம் அது மாதிரி எண்ணம் ஏற்படுவது உண்டு.
அதற்காகவே, வெகுகாலம் மீசை வைத்து கொள்ளாமல் இருந்தேன். யாராவது, ஒரு சினிமா நடிகரின் முகச்சாயல், எனக்கு இருக்கிறது
என்று சொல்வோரை விட, நண்பர் மிகவும்
மேலானவர் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால், அடுத்த நொடி, நான் வெடித்து சிரிக்கும்படி நண்பர் சொன்னார்... 'என்ன சம்பந்தமில்லாத ஒற்றுமை பார்த்தீர்களா...' என்று!
நடுத்தெரு நாராயணன்
