
ஈ.வெ.ரா.,வும், ராஜாஜியும் அரசியல் களத்தில் கீரியும், பாம்பும் போல இருந்தனர். தொடக்க கால அரசியலில் இருவரும், அத்யந்த நண்பர்களாக இருந்தனர்.
ராஜாஜி தான், என் குரு என்று, ஈ.வெ.ரா.,வே சொல்லியிருந்தார். அவர்களுக்குள் பிறகு ஏன் பிரிவு ஏற்பட்டது என்று, சென்னை பொதுக்கூட்டம் ஒன்றில், ஈ.வெ.ரா.,வே சொன்னார்:
அந்தக் காலத்தில் ஆச்சாரியாருக்கு, என்னை விட சிறந்த நண்பர் எவரும் இல்லை. இப்போது எங்களைப் போன்ற விரோதிகளும் இல்லை. ஆச்சாரியாரை நான் தெரிந்து வைத்திருப் பதைப் போல, வேறு யாரும் தெரிந்து வைத்திருக்க முடியாது.
எங்கள் பிளவுக்குள், எந்த ரகசியமும் இல்லை. 'பளிச்' சென்று சொல்வதானால், என்றைக்கு ஆச்சாரியார், மனசாட்சியை விட்டு, தன் மூளையை மட்டுமே மதிக்கத் துவங்கினாரோ, அன்றே, நான் அவரை விட்டு விலகிப் போனேன்!
***
ஐப்பான் தொழிற்சாலை ஒன்றின் அறையில், முதலாளியின் முகத்தை, பெரிய ரப்பர் பந்து மீது வரைந்து வைத்திருக்கின்றனர்.
முதலாளி மீது கோபப்படும் தொழிலாளி, அந்த அறைக்கு வந்து, பந்து மீது வரையப்பட்டுள்ள முதலாளியின் முகத்தில், நாலைந்து குத்துகள் குத்தி, கோபத்தைத் தணித்துக் கொள்வார். இது, முதலாளியின் ஏற்பாடு.
அங்கு, வேலை நன்றாக நடக்கிறதாம்!
***
கலிலியோ, டெலஸ்கோப்பை கண்டுபிடித்து, விண்வெளியை ஆராய்ந்து, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்று அறிந்தார். (அவருக்கு முன், கோபர்னிகஸ் கண்டுபிடித்த உண்மை தான் அது!)
கலிலியோவின் கருத்து, பாதிரியார்களுக்கும், போப்பாண்டவருக்கும் பிடிக்கவில்லை. அதை, 'மத விரோதமானது...' என்றனர்.
கலிலியோ இந்த உண்மையை, இரண்டு பேர் விவாதிப்பது போல் வைத்து, ஒரு புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்தில், 'பூமி சுற்றவில்லை' என்று வாதிடும் ஆள், பித்துக்குளித் தனமாகவும், அசடு போலவும் பேசுவான். அந்தப் பாத்திரம், போப்பாண்ட வரைத் தான் குறிக்கிறது என்று, பலர் கோள்மூட்டி விட்டனர்.
வாடிகனுக்கு - போப்பாண்டவரின் சன்னிதிக்கு உடனே வரும்படி, கலிலியோவுக்கு சம்மன் போனது. கிழவரான கலிலியோ, போப்பாண்டவரின் கட்டளையை மீற முடியாமல், அங்கே சென்றார். போப்பாண்டவர் முன் மண்டியிட்டு, தலை குனிந்து, கோபர்னிகசின் கருத்து மிகவும் தவறு என்றும், இனி, அதைப் பரப்பினால், தனக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்றும், இப்போதைக்குத் தன்னை மன்னிக்கும்படியும், ஒரு உறுதி பத்திரம் வாசித்து, கையெழுத்துப் போட்டார்.
ஆனால் அவர், 'கையெழுத்து போட்டு விட்டேனே தவிர, பூமி என்னவோ சுற்றத்தான் செய்கிறது...' என்று, ரகசியமாக முணுமுணுத்தார்.
***
புதுச்சேரி நண்பர் ஒருவர் சொன்னார்...
தமிழகப் பள்ளிகளிலுள்ள, வருகை பதிவேட்டில் மாணவன் பெயருக்கு நேரே, பெருக்கல் அடையாளம் போட்டிருந்தால் அவன், 'ஆஜர்' என்று அர்த்தம்.
புதுச்சேரிப் பள்ளி வருகை பதிவேடுகளில், மாணவன் பெயருக்கு நேரே, கூட்டல் அடையாளம் போட்டிருந்தால், மாணவன் பள்ளிக்கு வரவில்லை என்று பொருள். முன்னது ஆங்கில முறை; பின்னது பிரெஞ்ச் முறை.
***
பிளை-வுட் தொழிற்சாலை ஒன்றை, சுவீடன் நாட்டு கூட்டுறவுடன் நிறுவ, நான் ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது, 'இந்தத் தொழிற்சாலைக்காக, நீங்கள் சுவீடன் நாட்டிலிருந்து மூங்கில்கள் இறக்குமதி செய்வதில்லை என்று உறுதிமொழி தர வேண்டும்...' என்று, என்னிடம் சொன்னார், அரசாங்க அதிகாரி ஒருவர்.
அந்த இடத்திலேயே, அவர் கேட்ட உறுதிமொழியை எழுதிக் கொடுத்தேன். ஏனெனில், சுவீடன் நாட்டில் மருந்துக்குக் கூட மூங்கில் கிடையாது.
— சொன்னவர்: ஜி.டி.பிர்லா, - பழைய 'ஸ்டேட்ஸ்மென்' இதழிலிருந்து...
***
நடுத்தெரு நாராயணன்

