/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பார்வையாளர்களை பரவசப்படுத்தும் பிரமாண்ட அதிசயம்!
/
பார்வையாளர்களை பரவசப்படுத்தும் பிரமாண்ட அதிசயம்!
PUBLISHED ON : ஏப் 22, 2012

வட ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டில், கேசபிளான்கா என்ற நகரில் உள்ள ஷாப்பிங் மாலில், அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மீன் தொட்டி, ஆச்சரியத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த ஷாப்பிங் மாலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில், ஷாப்பிங் மாலின் கீழ் தளத்தில், அதிசயிக்கதக்க வகையிலான, பிரமாண்டமான மீன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதை, பிரமாண்ட மீன் தொட்டி என கூறுவதை விட, நீர்வாழ் உயிரினங்களுக்கான ஒரு மினி அருங்காட்சியகம் என்றே கூறலாம்.
இதன் உயரம், 30 அடி. தொட்டியின் மேல் குறுக்களவு, 40 அடி. மீன் தொட்டியின் கீழ் உள்ள குறுக்களவு, 44 அடி. அக்ரிலிக் எனப்படும் பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருளாலும், கண்ணாடியாலும் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் தடிமம், ஐந்து அங்குலம்.
இதில், கண்ணை பறிக்கும் வகையிலான நிறங்களை கொண்ட, 3,000க்கும் மேற்பட்ட அழகிய மீன்கள் உலவ விடப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருக்குமோ, அதேபோன்ற சூழ்நிலையை தொட்டிக்குள் உருவாக்கியுள்ளனர். பாசி, செடி, கொடிகள் என, அனைத்தும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தொட்டிக்குள் தினமும், பத்து லட்சம் லிட்டர் தண்ணீர் விடப்படுகிறது. தண்ணீரை சுத்திகரிப்பதற்காக, அந்த ஷாப்பிங் மாலின் மற்றொரு பகுதியில், மிகப் பெரிய மோட்டார் அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட மீன் தொட்டியின் ஹைலைட், அதற்குள் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியிலான லிப்ட் தான். மீன் தொட்டியின் மையப் பகுதிக்குள் சென்று வரும் வகையில், இந்த லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. மீன்கள், தொட்டிக்குள் நீந்திச் செல்வதை, மிக, மிக அருகில் சென்று, பரவசத்துடன் பார்த்து ரசிக்கலாம். கூம்பு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய மீன் தொட்டி என்ற பெருமையும், இதற்கு கிடைத்துள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவற்றை, இந்த அருங்காட்சியகத்தின் பின்னணியில் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட மீன் தொட்டியை அமைத்துள்ள ஷாப்பிங் மால் நிர்வாகிகளின் முகங்களில், சாதனையின் பெருமிதம் காணப்பட்டாலும், ஒருவித கலக்கமான மன நிலையுடன் தான், அவர்கள் காணப்படுகின்றனர். அவர்களிடம் விசாரித்தபோது, 'இந்த பகுதியில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும். இந்த தொட்டி அமைக்கப்பட்ட பின், இதுவரை இரண்டு மிதமான நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றால், இந்த தொட்டிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும், கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டால், தொட்டி மட்டுமல்ல, எங்கள் மனதும், சுக்கு நூறாகப் போய் விடும்...' என, கவலையுடன் கூறுகின்றனர்.
***
எஸ். ரித்விக் முகில்

