
*சி.ராம், இனாம் மணியாச்சி: பத்திரிகை ஆசிரியருக்கு திருப்தி தருவது எது?
செய்தி வெளியிடுவதில், செய்தி சேகரிப்பதில், வெளியீட்டாளர் மற்றும் பத்திரிகை அதிபர் தலையீடு இல்லாமல் இருப்பது; செய்தி சேகரிக்க, தாராளமாக செலவு செய்ய நிர்வாகம் அனுமதிப்பது... தன் பத்திரிகை, விற்பனையில் முதலிடம் வகிப்பது... இவையே திருப்தியைத் தரும்!
***
** என்.மோகன், மவுலிவாக்கம்: மனிதனுடைய கொடிய விரோதியாக எதைக் கருத வேண்டும்?
மனிதனுடைய முழு முதல் விரோதி அறியாமையே! அறியாமை உடையான், செய்யத் தகாத காரியத்தை செய்வான். அவன் மனம் எப்போதுமே குழப்பத்தில் இருக்கும்! அவனிடமிருந்து நல்லவர்கள் விலகி விடுவர்! இவர்கள், தம் அறியாமையால் தம்மைத் தாமே ஏமாற்றி கொள்வர்!
***
*எஸ்.கார்த்திகா, பெருமாள்பட்டு: சமையல் எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போகிறதே...
உயர்ந்து கொண்டேதான் இருக்கும். நாம்தான் உபயோகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்... எந்த எண்ணெயானாலும் உடல் நலத்திற்கு கேடுதான்! பொரிப்பதை நிறுத்துவோம்; வேக வைத்து உண்போம்!
***
** ஜி.பிரியன், பழங்காநத்தம்: நல்ல அறிவுரை ஒன்று கூறுங்களேன்...
உங்களுக்கு பிறர் இழைக்கும் தவறுகளை, அப்போதே மறந்து விடுங்கள். உங்கள் தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்ளுங்கள்... அதன் பின், இன்பத்தை தவிர வேறு இல்லை.
***
*சி.சந்திரமோகன், சூளைமேடு: உங்கள் பிறந்த நாளில் என்ன உறுதி எடுத்துக் கொண்டீர்கள்?
உடன் இருந்து எரிச்சல் ஏற்படுத்தி, கோபமூட்டி, அதனால், பலனடைய நினைக்கும் ஆசாமிகளை, இதுநாள் வரை வெற்றிகரமாக சமாளித்து விட்டோம்; அந்த மன திடத்தை இன்னும் பலமடங்காக வளர்த்துக் கொள்ள உறுதி பூண்டேன்!
***
*ஏ.கண்ணன், வில்லிவாக்கம்: காலை, பகல், இரவு... எந்த வேளை, உணவை ரசித்து, ருசித்து உண்ண விரும்புவீர்கள்?
மூன்று வேளைக்கும் வேறுபாடு, வஞ்சனை ஏதும் வைத்துக் கொள்வதில்லை. காலையில் பழைய சோறு, சுண்டக் குழம்பு, சின்ன வெங்காயம், வடகம், வடு மாங்காய். ஆனாலும், கான்டினென்டல் பிரேக் பாஸ்ட் - அசைவம் தவிர்த்து, ப்ரூட் ஜூஸ், கார்ன்-பீட்-ஓட்- பிளேக்ஸ், கோல்டு மில்க், அத்துடன் பிரட் டோஸ்ட் பட்டர், நட்ஸ், கடைசியில் புசிப்பேன் ப்ரூட்ஸ்! மற்ற வேளையிலும் அப்படியே!
***
*ரா.கி÷ஷார், புதுச்சேரி: வாசகரின் இரு கேள்விகளுக்கு, ஒரே வாரத்தில் பதிலளிக்க மாட்டீரா?
நெவர்! ஒரு வருடத்தில் ஒரு கேள்வியாவது வெளிவந்து விடாதா என, நூற்றுக்கணக்கான வாசகர்கள் காத்திருக்க, நீர் பேராசை கொண்டவராக இருக்கிறீரே!
***
** எம்.ராஜாமணி, பூலுவப்பட்டி: பயங்கரவாதிகளை வேரோடு அறுக்காதது ஏன்?
பயங்கரவாதத்தை ஒழிக்க, முழு மனதுடன் முனைந்து அரசு செயல்பட்டால் பயங்கரவாதமாவது... ஒரு மண்ணாவது... ஆளுவோரின் நாற்காலி மோகம் தான் இப்போதைய இயலாமைக்கு காரணம்!
***

