PUBLISHED ON : ஏப் 29, 2012

பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க, ஒரு இயந்திரம் உண்டு. ஒருவரை கேள்வி கேட்டால், அவர் அதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசனை செய்து பார்ப்பார்; சிந்தித்து பார்ப்பார்; இதனால், அவரது மனம் பாதிக்கப்படும். மனம் பாதிக்கப்படுவதால், உடல் அங்கங்களும், அவை வேலை செய்வதும் பாதிக்கப்படும். அவை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகின்றன என்பதைத் தெரிவிக்கும் கருவிதான், 'லை டிடெக்டர்' என்ற, 'பொய் கண்டு பிடிக்கும் இயந்திரம்!'
விசாரணை செய்யப்படுபவர், ஒரு நாற் காலியில் அமர்ந்திருப்பார். அவரது தோள் பட்டையின் கீழே, கை மீது ரத்த அழுத்தம் எடுப்பதற்கான காக்கி நிறப் பட்டி சுற்றப்பட்டிருக்கும். முழங்கைக்குக் கீழே, நாடித் துடிப்பு எடுப்பதற்கான, வெள்ளை நிறப் பட்டி சுற்றப்பட்டிருக்கும்.
மார்பை சுற்றி, ஒரு ரப்பர் குழாய் பொருத்தப் பட்டிருக்கும். இது, சுவாசம் வெளிப்படும் வேகத்தின் அளவைத் தெரிந்து கொள்வதற்காக. உள்ளங்கைகள், மின்சாரக் கருவிகளுடன் தொடர்புப்படுத்தப்படும். நாற்காலியிலேயே பலவித விசைகள் பொருத்தப்பட்டி ருக்கும்.
கேள்வி கேட்பவர், விசாரிக்கப்படுபவருக்கு எதிரில் அமர்ந்து கொள்வார். அவர் இயந்திரத்தை இயக்கி விட்டு, கேள்விகள் கேட்கத் துவங்குவார். சாதாரணமாக, பத்து கேள்விகள் கேட்கப் படுவது வழக்கம். நான்கு கேள்விகள், சம்பந்தப்பட்ட குற்றத்திற்குத் தொடர்பே இல்லாதவையாக இருக்கும். 'ஐந்தும் இரண்டும் எத்தனை?' என்பது போல.
இரண்டு கேள்விகள், குற்றத்திற்கு நேரடியாக சம்பந்தப்படாததாக, ஆனால், கிட்டத்தட்ட அதன் சாயல் உள்ளதாக இருக்கும். 'நீங்கள் தெருவில் செல்லும் போது, ஒரு முரடன், தன் மனைவியைத் கத்தியால் குத்திக் கொலை செய்வதைக் காண்கிறீர்கள். அதிகாரியாகிய நீங்கள், உடனே என்ன செய்வீர்கள்?' என்ற முறையில்.
மற்ற நான்கும், விசாரிக்கப்படுபவர், செய்ததாக சந்தேகிக்கப்பட்ட குற்றம் சம்பந்தப் பட்ட நேரடிக் கேள்விகளாக இருக்கும்.
'நீங்கள், உங்கள் மனைவியைத் திட்டமிட்டு கொலை செய்தீர்களா அல்லது திடீரென்று ஏற்பட்ட கோபத்தால் கொன்றீர்களா?' இந்த மூன்று விதமான கேள்விகளும், மாற்றி மாற்றி கேட்கப்படும்.
மிகவும் சாதாரணமான கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போது, அவை சம்பந்தமாக, இயந்திரம் பதிவு செய்யும் கோடுகள், ஒரு விதமாயிருக்கும். பொய் சொல்லும் போது, அவை வேறு விதமாய் இருக்கும். இந்த வித்தியாசங்களைக் கவனித்து தான், பதில்கள் உண்மையானவை அல்லது பொய்யானவை என்று நிர்ணயிக்கப்படும்.
சிலர் பொய் சொல்லும் போது, அவர்கள் முகத்தில் வெட்க உணர்ச்சி தோன்றும்; சிலர் முகம் வெளிறிப் போயிருக்கும்; சிலரது கண், இமைகள் துடிக்கும்; இவையெல்லாம், வெளித் தோற்றங்கள். பொய் சொல்பவர்கள் எல்லாருடைய உடலிலும், உள்ளூர ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு சுவாசத்தின் வேகம், வியர்வை விடுதல் இவை எல்லாம் பாதிக்கப்படும். இப்படிப் பாதிக்கப்படுவதை, இயந்திரம் ஒரு காகிதத்தில், 'கிராப்' போன்ற கோடுகள் இட்டுக் காண்பிக்கிறது.
இயந்திரத்தைப் பற்றி அறிந்த குற்றவாளிகள், தாங்கள் பொய் சொல்வதால், உடல் அங்கங்களோ, மனதோ பாதிக்கப்படாமல் இருக்கும் முறையில் அலட்சியமாகப் பதில் சொல்ல, தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இப்படிக் கட்டுப் படுத்திக் கொள்வதையும், இயந்திரம் காண்பித்து விடும்.
ஆனால், இந்த இயந்திரம், விசாரணை அளவிற்குத்தான் உதவுமே தவிர, இயந்திரம் சொன்னதை ஆதாரமாக வைத்து, ஒருவரை சட்டப் பூர்வமான குற்றவாளி ஆக்க முடியாது.
***
கருணாநிதி, முதன் முதலாக முதல்வராக இருந்த சமயம். அவர் தலைமையில், கோவையில் சிறுவாணி குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. குடிநீர் வாரியத் தலைவர், செ.கந்தப்பன் பேசும் போது, 'சிறுவாணியிலிருந்து, கோவைக்குப் போதுமான அளவு குடி தண்ணீர் கிடைக்க வழி வகுத்துள்ளார் முதல்வர். குடிநீர் பிரச்னை இன்றோடு தீர்ந்து விட்டது. எனவே, முதல் வருக்கு, 'சிறுவாணி வென்றாய்' என்ற சிறப்புப் பட்டத்தை, உங்கள் சார்பாக அளிக்கலாம் என்று எண்ணி உள்ளேன்...' எனக் குறிப்பிட்டார்.
அவருக்கு பின் கருணாநிதி குறிப்பிட்டதாவது:
என் அருமை கந்தப்பன், 'சிறுவாணி வென்றாய்' என்ற சிறப்பு பட்டத்தை எனக்கு அளிக்கயிருப்பதாக கூறினார். ஏற்கனவே எனக்குள்ள பல பட்டங்கள், மாற்றுக் கட்சிக்காரர் களிடம் சிக்கி, என்ன பாடுபடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். 'சிறுவாணி வென்றா#' என்ற பட்டத்தை, நாளை அவர்கள், 'சிறுவா... நீ வென்றாய்!' என்று, ஏளனமாய் பேசக் கூடும். ஆகவே, நான் சிறுவனாக மாற ஆசைப்பட வில்லை!
***
- நடுத்தெரு நாராயணன்
