PUBLISHED ON : மே 13, 2012

'கடந்த 1937ல், ராஜாஜி அமைச்சரவை ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, கோதை நாயகியை, சினிமா சென்சார் போர்டுக்கு உறுப்பினராக நியமித்தனர்.
முதல் படத்தை பார்த்து விட்டு, கடுமையாக ஆட்சேபித்தார். காரணம், அப்படத்தில் ஆரம்பக் கட்டத்தில் காந்தி, தேசிய இயக்கம் முதலிய சில காட்சிகளுக்கு பிறகு கொலை, கொள்ளை, கற்பழித்தல் ஆகிய சம்பவங்களைக் கொண்டே, முழு படமும் தயாரிக்கப்பட்டிருந்தது தான்.
'நம்முடைய பண்பாட்டுக்கு விரோதமாக, இந்தப் படத்தை வெளியிடவே கூடாது...' என்று கோதை நாயகி எதிர்த்ததை, மற்றொரு உறுப்பினரான பம்மல் சம்பந்த முதலியாரும் ஆமோதிக்கவே, படம் வெளிவராமலே போனது.
சூரிய குமாரி நடித்த, 'அதிர்ஷ்டம்' என்ற படத்தில், குட்டை பாவாடை அணிந்து ஊஞ்சலாடும் காட்சி ஒன்றை ஆட்சேபித்து, கருத்து தெரிவித்தார் கோதை. ஆனால், படம் வெளியானபோது, வெளியூர்களில் அந்தக் காட்சி இடம்பெற்று விட்டது. அனேகம் பேர் கடிதம் எழுதவே, மீண்டும் தயாரிப்பாளர்களை எச்சரித்து, 'நெகடிவ்' பிரதியில், அந்தக் காட்சியை அழிக்கும்படி சொன்னார்.
கடந்த, 1960ம் ஆண்டு பிப்ரவரியில், கோதை நாயகி உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோது, 'குளிர்ந்த நெஞ்சம்' என்ற நாவல் பூர்த்தியாகாமலே இருந்தது.
'நான் பிழைத்து வந்து எழுத மாட்டேன் என்று நினைக்கிறீர்களா? நானே தான் அதைப் பூராவும் எழுதுவேன்...' என்றார்.
ஆனால், அந்த நாவலை அவர் முடிக்கவேயில்லை. அதற்குள் ஆண்டவன் அவரை அழைத்து கொண்டான்.
கடைசி நாவலை, அவள் பூர்த்தி செய்ய இயலவில்லை. ஆனால், பேத்தி, வை.மு.விஜயலட்சுமி, பாட்டியின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில், அதை எழுதி முடித்தார்.
— மறைந்த பெண் எழுத்தாளர் வை.மு.கோதை நாயகியின் கணவர் ஒரு பேட்டியில்...
அவர் முதல்வரா இருந்த போது, நாங்க, எந்த சலுகைகளும் அனுபவிக்கக் கூடாதுன்னு, கண்டிப்புடன் இருப்பாரு. அவர் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது கூட, வீட்டிலேர்ந்து யாரையும் கூட்டிட்டுப் போகலே. போய் பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசை.
அதனால, எங்க வீட்டு கார் டிரைவரை, விழா நடக்கும் இடத்துக்கு என்னை அழைச்சிட்டு போகச் சொன்னேன். அங்கே போனா, எனக்கு பெரிய அதிர்ச்சி. ஏதோ ஒரு சின்ன விழாவா இருக்கும்ன்னு நினைச்சிட்டு போனேன்.
ஆனா, அங்க ஆயிரக்கணக்கான மக்கள்; உட்கார கூட இடம் இல்லே. நான் அந்த ஒரு மணி நேர விழாவையும் நின்னுகிட்டே பார்த்தேன்.
— தன் கணவர் அண்ணாதுரை பற்றி, மறைந்த ராணி அண்ணாதுரை.
வீட்டில் உள்ள குழந்தைகளை (என் அண்ணன் நாராயணனு டையவை) பகட்டாக வளர்க்கக் கூடாது என்பார் என் கணவர். வீட்டில் அனைவரும் பாய் விரித்துதான் படுத்துக் கொள்ள வேண்டும்; அவரும் அப்படித்தான். அவர் உடல்நிலை மோசமான போதுதான், அதுவும் டாக்டர்கள் வற்புறுத்தியதால் தான், அவர் கட்டிலில் படுக்கத் துவங்கினார்.
— எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் வி.என்.ஜானகி ஒரு பேட்டியில்...
பாம்புகள், விஷப் பற்களை உட்பக்கம் வாயில், மடக்கி வைத்திருக்கும். கடிக்கும் போது, அவைகளை வெளிப்பக்கம் நீட்டி, எதிரியின் உடம்பில் குத்தும். பற்கள் உடலில் நுழைந்தவுடனே, விஷ சுரப்பிகள் சுரக்கும். அப்போது, விஷம் நாளத்தின் வழியாக பற்களின் துவாரத்திலிருந்து, எதிரியின் உடலில் பாய்ந்து விடும். இஞ்ஜெக்ஷன் கொடுக்கும் ஊசியில் உள்ள துவாரம் போலவே, ஒவ்வொரு பற்களிலும் விஷம் வெளியேறுவதற்கு துவாரம் உண்டு.
பாம்பின் விஷம், ரத்தத்தில் கலந்தால் தான், உயிருக்கு ஆபத்து. பன்றியை பாம்பு கடித்தால், விஷம் உடனே அதன் ரத்தத்தில் கலப்பதில்லை. ஏனெனில், பன்றிக்கு உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கும். கொழுப்பில், அந்த விஷம் தங்கி, சக்தியில்லாமல் போய் விடும். இக்காரணத்தால் தான், பன்றிகள், பாம்புக் கடியினால் இறப்பதில்லை.
— வேலூர் கண்ணப்பர் எழுதிய, 'மூலிகை மணி' இதழிலிருந்து...
***
நடுத்தெரு நாராயணன்
