தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (2)

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (2)

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (2)


PUBLISHED ON : மே 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளிநாடுகளில், குறிப்பாய் மேற்கத்திய நாடுகளில், பொது இடங்களில் யார் என்ன செய்கின்றனர், எங்கே போகின்றனர், வருகின்றனர் என்பது பற்றி யாரும் கவனிப்பதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை. அவரவர்களின் காரியங்களை பார்த்தபடி போய்க்கொண்டே இருப்பர்.

அந்த கலாசாரமும், இங்கிதமும் நமக்குப் போதாது என்பதை உறுதிப்படுத்துவது போல் இருந்தது, அங்கு நான், பார்த்த காட்சி ஒன்று! விமானத்திற்காக காத்திருந்த போது, ஒரு பெண், வயது இருபதுதான் இருக்கும். ஒரு இளைஞனின் மடியில் அமர்ந்து...

அந்த இளைஞன், அவளது நண்பனோ, காதலனோ, கணவனோ தெரியாது. குரங்குக்குட்டி, தாயின் மடியைக் கட்டிக் கொண்டிருப்பது போல, அவள், அவனது மடியில் ஒருக்களித்து - களித்துக் கொண்டிருந்தாள்.

அவளது மடியில் லாப் - டாப், நமக்கு லப் டப். கம்ப்யூட்டரில் என்ன சித்தாட்டம் ஆடினர் எனத் தெரியாது. எண்ணி ஐந்து வினாடிகளுக்கொரு முறை, வெற்றி என கட்டை விரலைக் காட்டி, அவள், அவனுக்கு முத்தம் கொடுத்தாள்.

அப்புறம் கொஞ்ச நேரத்தில், அவன், அவளுக்கு; அதுவும் கன்னத்தில் இல்லை. உதடுகளில்! அமெரிக்கா, அங்கேயே எங்களுக்கு வந்தனம் சொல்லிற்று!

அக்கம் பக்கம் அமர்ந்திருந்த பிற, 'வெள்ளை' கள் இதுபற்றி சட்டை செய்யவில்லை. நம்மூரிலிருந்து வந்திருந்த எங்களை மாதிரி அசமஞ்சங்கள் மட்டும் வே - பார்த்துக் கொண்டிருந்தோம்.

'நம்மூரில் பொது இடத்தில், 'பிஸ்' அடிக்கலாம்; 'கிஸ்' அடிக்க முடியாது. வெளிநாட்டில் பொது இடத்தில், 'கிஸ்' ஓ.கே; 'பிஸ்' கூடாது...' என்று சினிமா ஒன்றில் நகைச்சுவை வசனம் வரும்.

இதுகள் எந்த நாடோ, எங்கு போகணுமோ, எந்த விமானத்திற்குக் காத்திருந்து இளமை ஊஞ்சலாடுகிறதோ...?

ஒரு விமானத்திலிருந்து இறங்கி, அடுத்ததைப் பிடிக்க இருக்கும் இடைவேளையில், அந்தந்த விமானத் தளங்களில், ஓய்வெடுக்க வசதிகள் இருக்கும். முதல் வகுப்புப் பயணிகள் என்றால் கூப்பன்கள் தந்து விடுவர்.

சிறப்பு ஓய்வறைகளில், அவற்றை உபயோகித்து உணவு, மது, பழரசம் என எல்லாம் அங்கு இலவசமாக வாங்கி கொள்ளலாம். மற்ற பயணிகள், வெளி இருக்கைகளில் அமர்ந்திருக்கணும். அங்கே, 'டிவி' உண்டு. பல நாடுகளி லும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என, இலவசமாய் அவற்றைப் பயன்படுத்தலாம். பொழுது ஓடியே போய் விடும். காத்திருப்பின் களைப்பு தெரியாது.

ஆனால், பெரும்பாலான அமெரிக்க நகரங்களிலும், பெல்ஜியத்திலும் தேடோ தேடு என தேடவேண்டி இருந்தது. தேடிப் பிடித்தால், இலவசம் இல்லை, கட்டணம் என்றனர்.

சரி, கேட்பதைக் கொடுத்து ஒழிக்கலாம், என்று டாலரை எடுத்து நீட்டினால், 'நோ கேஷ்! கிரெடிட் கார்டு ப்ளீஸ்...' என்கின்றனர்.

இந்த கிரெடிட் கார்டு கலாசாரம், மேல்நாடுகளில் அதிகம். பர்ஸ் நிறைய சீட்டுக் கட்டுபோல அடுக்கி வைத்துத் தேய்க்கின்றனர்.

டிராவல் கார்டு, விசா கார்டு, கிரெடிட், அது இது என, பல துருப்புச் சீட்டுக்கள்... நம்மூரில் பணம் கொடுத்தால் மகிழ்வர். அங்கே, 'கேஷ்' என்று சொன்ன உடன், ஓரங்கட்டி விடுகின்றனர்.

கார்டு (கடன்) காரர்களுக்கு முன்னுரிமை! கேஷ் எண்ணி சரி பார்த்து வாங்க நேரமாகுமாம். அதே மாதிரி ஆன்லைன் பர்ச்சேஸ்!

ஆளாளுக்கு கம்ப்யூட்டரும், லாப் - டாப்பும் வைத்திருப்பதால், என்ன பொருள் வேண்டும் என்றாலும், ஆன்லைனில் பணம் செலுத்தி விடுகின்றனர். அவற்றை அழகாய் பார்சல் செய்து, நம் வீட்டு வாசலில் வைத்துவிட்டுப் போய் விடுகின்றனர்.

பொய் பித்தலாட்டமில்லை; ஏமாற்று இல்லை; வாசலில் இருக்கும் பொருளை, வேறு எவரும் களவாடுவதுமில்லை; ஆன்லைனில் வாங்கும்போது, விலையும் குறைவு. வரியும் கிடையாதாம்.

அந்த விமானத் தளத்தில், இன்டர்நெட்டிற்கு வழியில்லை என்றான பின், சும்மா <உலாத்தலாம் என்று கிளம்பினோம். பளபள தளத்தில், டூட்டி ப்ரீ கடைகள், உணவுக் கூடங்கள், உலகம் முழுக்க, சொல்லி வைத்த மாதிரி, விமான தளத்தில் உள்ள உணவுக் கூடங்களில் கொள்ளை! கொள்ளையர்கள் நடத்துகிற மாதிரி அபாண்ட விலை!

டாலரையோ, யூரோவையோ, நம் ரூபாய்க்குக் கணக்குப் போடும்போதே, பசி போய் விடுகிறது. சரி தண்ணீர் குடித்து வயிற்றை நிரப்பலாம் என்று பார்த்தால், அரை லிட்டர் இருநூறு ரூபாய்; விளங்குமா?

தண்ணீரை விட பெப்சி, கோக் வகைகள் விலை குறைவு. உணவு வகையில், சைவக்காரர்களுக்கு மண்டகப்படிதான்! வெறும் இலை, தழைகளை பன்னில் வைத்து, 'கொமுக்கு'வதைத் தவிர வேறு வழியில்லை.

அதிலும்கூட, எது விலை கம்மி என, மேய்ந்து கொண்டிருந்த போது, பயணிகளை கூப்பாடு போட்டு அழைத்தது, 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனம். லக்கேஜ்களை செக்கின் செய்து கொள்ள வேண்டுமாம்!

சரியென்று அவர்கள் அழைத்த கவுன்டருக்குச் செல்வதற்குள், பெரிய கியூ! அங்கே ஒரு கறுப்பு அக்கா. முன்னே சென்றவர்களை, ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பொதுவாய் குவைத்திலிருந்து, நம் ஊருக்கு, 40 கிலோ அனுமதிப்பர். ஆனால், அமெரிக்க அண்ணன் விஷயத்தில், ஏகக் குதறல்கள்.

பெட்டி, இந்த சைசில் தான் இருக்கணும்; ஒரு பெட்டி, 23 கிலோவுக்கு மேல் போகக் கூடாது; பெட்டியைப் பூட்டக் கூடாது; கயிறு கட்டக் கூடாது; காய்கறிகள், உணவுப் பொருட்கள் கூடாது.

நாங்கள் பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர், தலா இரண்டு பெட்டிகள், ஒவ்வொன்றும், 23 கிலோவுக்கு மிகாமல் கொண்டு செல்லலாம் என்று, டிக்கெட்டிலேயே குறிப்பிட்டிருந்தனர்.

அமெரிக்காவை விட குவைத்தில், (வரி இல்லாததால்) விலைவாசி குறைவு. அதனால், நிறைய அள்ளித் திணித்திருந்தோம்.

எனக்கும், மனைவிக்குமாக நான்கு பெட்டிகள். குவைத் ஏர்போர்ட்டிலேயே தகராறு ஆரம்பம், அமெரிக்கன் ஏர்லைன்சின் கூட்டணியில், எதிகாடு ஏர்லைன்சில் நாங்கள் பயணிக்க வேண்டும்.

அவர்கள், 'ஒருவருக்கு ஒரு பெட்டிதான்...' என்று கூறினர். டிக்கெட்டில் உள்ளதே என காட்டினாலும் கூட, 'அது அமெரிக்கன் ஏர்லைன்சிற்குத்தான்; எங்களுக்கு அல்ல...' என்று விரட்டினர்.

என்ன செய்யலாம்? வாங்கின உபயோகமான பொருட்களை தூரப்போட முடியுமா? அதற்காக, கட்டணமும் செலுத்த முடியாது... வேண்டாத சடுகுடு!

யு.எஸ்.,சில் உறவினர் சரவணனிடம் விவரம் சொல்ல, அவர், 'கொஞ்சம் பொறுங்கள்...' என்று அமெரிக்கன் ஏர்லைன்சை விரட்டிப் பிடித்து, பேசி, சண்டை பிடித்து, கடைசியாய் வேறு வழியில்லை, 'ரெண்டு பெட்டியையுமே நீங்கள் கொண்டு வாருங்கள், ஒரு பெட்டிக்கு மட்டும் கட்டணம் செலுத்தி விடுங்கள்...' என்றார்.

'கட்டணமா?'

'கவலைப்பட வேண்டாம். இங்கு வந்து அதை, 'ரிட்டன்' பண்ணிடுவர்...' என்று, பாடுபட்டு லக்கேஜ்களை ஏற்றியிருந்தோம்.

ஆனால், அந்த செக்கின் கறுப்பு - தடி - அக்கா, எடுத்த எடுப்பிலேயே எங்களை மறித்து, '<உங்களோடது எத்தனை பெட்டிகள்?'

'நான்கு... ஏன்?'

'அவற்றில் என்ன வைத்திருக்கிறீர்கள்? பேக் பண்ணினது யார்?' என்றாள் விறைப்பாய்.

அவளது கண்ணில் தெரிந்த சிவப்பு, வயிற்றைக் கலக்கிற்று.

— தொடரும்.

-என்.சி.மோகன்தாஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us