PUBLISHED ON : ஜூன் 17, 2012

கடந்த, 1938ஆம் ஆண்டு முதன் முதலில், இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் நடந்தது. கிளர்ச்சியை தூண்டியதாக அண்ணாதுரை கைது செய்யப்பட்டு, சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். அண்ணாதுரையை சிறைக்குள் அனுப்பும்போது, மாலை பொழுதாகி விட்டது.
அவரை சிறைக்காவலர் முன் நிறுத்தினர். வழக்கமாக சிறையில் இரவு சாப்பாடு மாலை 5.00 மணிக்கே கைதிகளுக்கு வழங்கப்பட்டு விடும். 6.00 மணிக்குள் அனைத்து கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டு, அறைக் கதவுகள், காவலர்களால் பூட்டப்பட்டு விடும்.
அண்ணாதுரையை சிறைக்குள் அனுப்பும்போது, மாலை 6.00 மணியாகி விட்டது. கைதியை கொண்டு வந்த போலீஸ்காரர்களிடம் சிறைக்காவலர், 'மணி ஆறுக்கு மேலாகி விட்டது. இந்த நேரத்தில் வந்தால் ஏது சோறு?' என்று கோபமாகச் சொன்னார்.
'பசிக்கிறது, சோறு போடுங்கள்...' என்று கேட்பார் அண்ணாதுரை என எண்ணி, சிறைக்காவலர் அவ்வாறு சொன்னார்.
அதைக் கேட்டதும், அண்ணாதுரைக்கு சிரிப்பு வந்தது. சிரித்தார். சிரித்தபோது அவரது வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் தெரிந்தது. அதைப் பார்த்ததும் சிறைக்காவலர், 'இங்கே சிறைக்குள்ளே வெற்றிலைப் பாக்கு போடக் கூடாது...' என்றார், கண்டிப்புடன்.
பிறகு, அண்ணாதுரையை அருகில் வரச் சொல்லி, 'வேட்டியை உதறு; சட்டைப் பைக்குள் பீடி, சிகரெட் வைத்திருக்கிறாயா? காட்டு...' என்றார். 'அப்படி ஒன்றும் தன்னிடம் இல்லை...' என்றார் அண்ணாதுரை.
'சரி, அதோ பார்... மூலையில் இரண்டு மண் சட்டிகள் இருக்கின்றன. ஒன்றில், குடிக்கத் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள். மற்றொன்று, இரவில் சிறுநீர் கழிக்க; நிற்காதே! எடுத்துக் கொண்டு, 9ம் எண்ணுள்ள அறைக்கு போ! அங்கே கம்பளி இருக்கும். விரித்துப் படுத்துக் கொள். காலையில் எழுப்புவோம்...' என்றார். அந்த அதிகாரி.
அமைதியாக அறைக்குள் சென்று கம்பளியை விரித்துப் படுத்து கொண்டார், அண்ணாதுரை.
அண்ணாதுரையின் பொறுமை குணத்திற்கு இது ஒரு சான்று.
—'அண்ணா என்னும் தலைவர்' நூலிலிருந்து...
நெருப்புக் கோழிக்கு அடுத்த பெரிய பறவை ஈமு கோழி தான். இது பறக்க முடியாத பறவை. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும். (இப்போது நம்மூரிலும் வளர்க்கப்படுகிறது) பொதுவாக பறவைகளில் ஆண் பெரியதாகவும், பெண் கொஞ்சம் சிறியதாகவும் இருக்கும். ஆனால், ஈமு இனத்தில் ஆண் சிறியதாகவும், பெண் அதைவிடப் பெரியதாகவும் இருக்கும். ஈமு குடும்பத்தில் முட்டையை அடைகாக்கும் வேலையை பெண் பறவை செய்வதில்லை. அதை ஆண் பறவை தான் செய்யும்.
— 'பறவைகள் பலவிதம்' நூலிலிருந்து...
பாரதியார் பாடல்கள் சிலவற்றை மொழி பெயர்த்து, காந்திஜியின், 'யங் இந்தியா' பத்திரிகையில் வெளியிடச் செய்தார், ராஜாஜி. பாரதியாரின், 'ஞானரதம்' நூலுக்கு, 1936ல், 'ச.இரா' என்று கையெழுத்திட்டு, ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார் ராஜாஜி.
***
நடுத்தெரு நாராயணன்
