தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரையுலகில் மறுமலர்ச்சி தந்துள்ள மாறுதல்கள் ஏராளம். தமிழகத்தை தான் குறிப்பிடுகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன், எடுக்கப்பட்ட ஒரு படத்தை பார்த்தேன். ஒரு நடிகை பூரிப்பு மிகுதியால், 'சந்தோஷம்...' என்று கூறியது, யாரோ ஒரு வேலைக்காரனை கூப்பிடுவது போல இருந்தது.

மாறுதல் இன்று நடிப்பில் மட்டுமல்ல, காட்சியமைப்பு, படப்பிடிப்பு, கதை, வசனம், பாட்டு அனைத்திலும் புதுமை பூத்து விட்டது. மாறுதல்களை தந்த மறுமலர்ச்சி, அடுக்கு மொழிகளையும் கூடவே அழைத்து வந்தது. காவியத்தில் மட்டும் காட்சி தந்த அந்த எதுகை, மோனைகள், நாடகத்திலும் வந்து புகுந்தன.

'சாதாரணமாக தினந்தோறும் நாம் தெருவிலே பார்ப்பவர்கள், அடுக்கு மொழியிலா பேசுகின்றனர்? அப்படியிருக்க, திரையிலே வருவோர் மட்டும் ஏன் அடுக்கு மொழி பேச வேண்டும்?' இப்படிப்பட்ட கேள்விகள் இப்போது, உரத்த குரலில் கேட்கப் படுகின்றன.

நாம், தினந்தோறும் தெருவில் சந்திக்கும் மனிதர்களில் பெரும்பாலோர், அதிக அழகாக இருப்பதில்லை. ஆனால், அவலட்சணங்களை கதாநாயகன், கதாநாயகிகளாகப் போட்டால், எல்லாரும், 'கிரிட்டிக்'குளாக மாறி விடுகிறோம்.

திரையில் அழகானவர்களைப் பார்க்க விரும்பும் நாம், உலகத்தில் சாதாரணமாக இன்சூரன்ஸ் ஏஜன்டுகளிடமும், தரகு வியாபாரிகளிடமும் காண முடியாத நடிப்பை, திரையில் காண வேண்டுமென்று விரும்புகிற நாம், அடுக்கு மொழிகளையோ, எதுகை மோனைகளையோ எதிர்ப்பதில் அர்த்தமில்லை.

ஆனால் ஒன்று, திரைக்கு அழகு தந்த அடுக்கு மொழிகள், இப்போது பெரிய தொத்து வியாதியாக மாறி விட்டன. 'கா' என்று ஆரம்பித்தால், 'கழுகு மலையிலே கண்ணைத் திறந்தபடி, கடவுளை வணங்கி, கந்தசாமி என்பவன் கடும் தவம் இருந்தான்' இந்த மாதிரி ஆகி விட்டது.

—'குண்டூசி' சினிமா இதழில்,(1951) வெளியான கட்டுரை ஒன்றில், மு.கருணாநிதி.

பட்டுக்கோட்டை அழகிரி, காசநோயால் அவதிப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பொதுக்கூட்டத்தில் பேச, தன்னை யார் கூப்பிட்டாலும், 100 ரூபாயை அழகிரிசாமிக்கு மணியார்டர் செய்து, ரசீதை காட்டினால், கூட்டத்தில் தான் கலந்து கொள்வதாக அறிவித்தார் அண்ணாதுரை.

பல இடங்களிலிருந்து பணம் வந்தது; அழகிரிக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும், நோய் குணமாகாமல் அழகிரி இறந்து விட்டார். சவ அடக்கத்திற்கு, சென்னையிலிருந்த ஈ.வெ.ரா., செல்லவில்லை. தஞ்சை மயானத்தில் நடந்த, இரங்கல் கூட்டத்தில், ஈ.வெ.ரா., வராதது குறித்து, கருணாநிதி காட்டமாகப் பேசி விட்டார்.

மற்றவர்கள் பேசும் போது, ஈ.வெ.ரா., தன் தடியைத் தட்டுவார். உடனே, பேசுபவர் தன் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு சமிக்ஞை. சிதம்பரத்தையடுத்த கொள்ளிடம் கூட்டமொன்றில், ஈ.வெ.ரா.,வை வைத்துக் கொண்டே, 'தடியைத் தட்டி, எங்கள் பேச்சை நிறுத்தச் சொல்லாதீர். கூட்டத்துக்குப் புறப்படும் முன், தடியை வீட்டிலே வைத்துவிட்டு வாருங்கள்...' என்று பேசி விட்டார் க.அன்பழகன்.

மறுநாள் சென்னைக்கு வந்த ஈ.வெ.ரா., 'விடுதலை' பத்திரிகை அலுவலகத்தில் இருந்த என்னையும், குருசாமியையும் அழைத்து, 'இனிமேல் இந்த கருணாநிதி, அன்பழகன் இரண்டு பேர் சம்பந்தமா எந்த செய்தி வந்தாலும் போடாதீங்க...' என்று கண்டிப்பான உத்தரவு போட்டார்.

— அரங்கண்ணல் எழுதிய, 'நினைவுகள்' நூலிலிருந்து...

ஏப்ரல் 13, 1954ல், முதல்வர் பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்குப் புறப்பட்டார் காமராஜர். காரில் அவர் ஏறியதும், அவர் காருக்கு முன்னால் இருந்த போலீஸ் வண்டியிலிருந்து, 'உய்ங்... உய்ங்...' என்று, சைரன் ஒலி எழும்பியது.

அதிகாரியை அழைத்தார் காமராஜர். 'அது, என்னய்யா சப்தம்?' என்று கேட்டார்... 'ஐயா... இது முதல்வர் போகும்போது,< போக்குவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி...' என்றார் அந்த போலீஸ் அதிகாரி.

'இந்த வழக்கம் எல்லாம் இனிமே வேண்டாம்னேன். இந்த சப்தத்தைக் கேட்டு, மக்கள் பயந்து ஓடப் போறாங்க...' என்று கோபித்தார். அதன் பின், காமராஜர் செல்லும் வண்டி முன், சைரன் ஒலி எழுப்பப்படவே இல்லை.

— 'காமராஜர் வாழ்க்கை வரலாறு' நூலிலிருந்து....

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us