தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 02, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணதாசன், தமிழ் வித்வான் பரீட்சையில், 'என்ட்ரன்ஸ்' பரீட்சைக்குப் படிப்பதற்காக, கம்பராமாயணத்தில், 100 பாடல்களும், அகநானூறில், 16 பாடல்களும், புறநானூறில், 16 பாடல்களும் மனப்பாடம் செய்தவர்.

பின், கவிதைகளைப் படிப்பதே பொழுது போக்காகி, கண்ணில் படும் பாடல்களை எல்லாம் மனப்பாடம் செய்ய துவங்கினார். பிற்காலத்தில், அவர் கவிஞராவதற்கு வேண்டிய அஸ்திவாரம், இவ்வாறு, 16வது வயதிலேயே அவருக்கு ஏற்பட்டது.

சொந்த ஊராகிய சிறுகூடல் பட்டியில், அவர் அனுபவித்த தனிமையும், உணர்ச்சிகளும், வாழ்க்கையில் நடந்த காதல் நிகழ்ச்சியும், அதில் ஏற்பட்ட தோல்வியும் தான், அவரது கவி உள்ளத்துக்குக் காரணங்கள்.

காதல் தோல்விக்கு பின், அவர் ஊரை விட்டுப் புறப்பட்டு, ராமச்சந்திரபுரம் சென்று, 'திருமகள்' என்ற பத்திரிகையின் ஆசிரியரானார்.

இவர், தன் பெற்றோரின் எட்டாவது பிள்ளையாகப் பிறந்ததால், (தேவகியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்த) கண்ணனின் நினை வாக, 'கண்ணதாசன்' என்று பெயர் வைத்துக் கொண்டார். அப்போது கம்பதாசன், பாரதிதாசன் ஆகிய பிரபல கவிஞர்கள் இருந்தனர்; அந்த இன்ஸ்பிரேஷன்!

கடந்த, 1944ல் தான், முதல் கவிதை எழுதினார்; 'அவள் கடிதம்' என்பது, அதன் தலைப்பு. பின், ஆறு வருட காலம், கவிதைகளே எழுதவில்லை; கவிதைகளுக்கு, பத்திரிகை உலகில் வரவேற்பு இல்லாததால்!

சில கேலிப் பாடல்களை எழுதி வந்தார். இரண்டொரு சினிமாப் படங்களுக்கு மட்டும், பாட்டு எழுதிக் கொடுத்தார். ஆனால், அப்போ தெல்லாம், படங்களில் கண்ணதாசனின் பெயர் வெளியிடப்படவில்லை. 1949ல், 'கன்னியின் காதலி' என்ற படத்திற்கு பாட்டு எழுதிய போது தான், முதன்முதலில் அவர் பெயர், திரையில் போடப்பட்டது.

—'என் குருநாதர் கண்ணதாசன்' என்ற கட்டுரையில், பஞ்சு அருணாசலம்.

***

ஒவ்வொரு கோவிலிலும், ஒரு நாடக அரங்கு அல்லது மேடை இருந்தது. கோவில் திருவிழாக்களின் போது, அங்கு நாடகங்கள் நடிக்கப் பெற்றன.

மாவெலி நாடகம், தஞ்சை மாவட்டதிலுள்ள வேதாரண்யத்துக்கு உரியது. இந்நாடகத்தின் தோற்றத்துக்கு காரணமான ஒரு நிகழ்ச்சி,தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறது.

கோவிலில் இருந்த, விளக்கு ஒன்றின் ஒளி குறைவதைக் கண்ட ஒரு எலி, விளக்குத் திரியைத் தூண்டி விட்டது. அப்போது, எலியின் மூக்கை, விளக்குத் தீ சுட்டு விட்டது. அந்த எலிக்கு, இறைவன் மூவுலக ஆட்சியையும் வழங்கி, அதைச் சக்கரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார். கார்த்திகை மாதத்தில், தீபம் ஏற்றி வைப்பவர் களுக்காக, மாவெலி வரம் கேட்டார்.

இந்நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் மாவெலி நாடகத்தை, தேவதாசிகள் நடித்து வந்தனர். தேவதாசி ஒழிப்புச் சட்டத்துடன், இந்த நாடகமும் வழக்கொழிந்து விட்டது.

நீலகிரி மாவட்டத்து இருளர்களில் சிலர், ஓரளவே படித்தவர்கள். பெரும்பாலா@னார் பள்ளிப்படிப்பு படிக்காதவர்கள். கோவில் திருவிழாக்களில் அவர்கள் நாடகங்களை நடத்துவர். வீட்டுத் திண்ணை தான் நாடக அரங்கு. அரிக்கன் விளக்கு ஒளியில், திரை எதுவும் இல்லாமல், புராணக் கதைகளை நடித்துக் காட்டுவர்.

இவற்றில் நடிப்பவர்கள், நாடக ஆசிரியர் ஒருவரிடம் பயிற்சி பெற்று, பல நாட்களுக்கு ஒத்திகை பார்ப்பர். மகாபாரதத்தில் அர்ச்சுனன் தவத்தை நடிப்பதில், அவர்கள் ஆர்வம் மிகுந்து காணப்படுகின்றனர். அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்கும் பெண்ணின் அழகை, உறுப்பு உறுப்பாக, கொச்சை மொழியில், அடைமொழிகளுடன் விரிவாக வர்ணிப்பது அவர்கள் வழக்கம். பெண்கள் இதை மிகவும் கூர்ந்து கேட்டு மகிழ்வர்.

— 'சோமாலெ' எழுதிய, 'தமிழ்நாட்டு மரபும், பண்பாடும்' நூலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us