PUBLISHED ON : செப் 02, 2012

சமீபத்தில் மறைந்த, எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனுடன், தான் பழகிய பசுமையான நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பாக்கியம் ராமசாமி:
குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., ஒரு குரு; இணை ஆசிரியர் ரா.கி.ர., இன்னொரு குரு. எடிட்டர் எஸ்.ஏ.பி., மகா பெரியவாள் மாதிரி. என்னை பொறுத்தவரை ரா.கி.ர.,வும் சகல விதத்திலும் என் மதிப்புக்குரிய பெரிய குரு. அவரை வெறுமே, 'பெரியவர்' என்று சொல்வது, உரிய மரியாதை கொடுத்தது ஆகாது என்று நினைப்பேன். ஆகவே, அவர் எனக்கு, 'சின்ன மகாப் பெரியவர்!' ரா.கி.ர.,வோடு, நான் ஏறக்குறைய, 40 ஆண்டு ஒட்டிக் கொண்டு இருந்திருக்கிறேன்.
கலைக் களஞ்சியம் பிரியரான அவரே, ஒரு கலைக் களஞ்சியம். எடிட்டர் எஸ்.ஏ.பி., பீரோ, பீரோவாகப் புதுப் புத்தகங்கள் படிப்பார். ரா.கி.ர., அதே பீரோ புத்தகங்களை ஆசிரியர் படித்தானதும், படித்து முடிப்பார்.
எவ்வளவு பெரிய, தடித்த சிக்கலான ஆங்கில நாவலாக இருந்தாலும், ரா.கி.ர., ஒரு சவாலாக எடுத்து, மொழி பெயர்த்துத் தள்ளிவிடுவார்.
ஒரிஜினலே தமிழ்தானோ என்று எண்ணும்படி, மொழிபெயர்ப்பு சரளமாக இருக்கும்.
'எதை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டுமோ, அதில் இரண்டு பாரா ரசித்துப் படித்துவிட்டு, புத்தகத்தை மூடி விடுங்கள். இனி, அந்த இரண்டு பாரா விஷயமும், உங்கள் சொந்த சொத்து. அதை எழுதின வெள்ளைக்காரனுக்கு, அது சொந்தமில்லை. போனால் போகிறது என்று, அந்த இங்கிலீஷ்கார பாத்திரங்களின் பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள். மற்றப்படி, பூராப் பூரா உங்களுடைய சரளத்துக்கு ஏற்ப எழுதித் தள்ளுங்கள். அதுக்குன்னு அவன் ஒரு பாரா எழுதியதற்கு, மொழி பெயர்ப்பு செய்கிறவர். ஒரு பக்க வியாக்கியானம் பண்ணிவிடக் கூடாது. பணமும், பத்தாயிருக்கணும், பொண்ணும், முத்தாயிருக்கணும்,' என்பார்.
குமுதத்தில் பணிபுரிந்த போது, ரா.கி.ர.,வையும், அவரது பன்முக எழுத்தாற்றலையும், வியந்து கொண்டிருப்பது தான் என் முக்கிய, இனிய பொழுது போக்காக இருந்தது.
ரா.கி.ர.,வின் மொழிபெயர்ப்பைப் பற்றி, இன்னொரு உதவி ஆசிரியரான புனிதன் கிட்டே வியப்பேன். 'என்னடா இது... ரங்காச்சு (ரா.கி.ர.,) என்ன ஏதாவது பசுமாடா? வைக்கோலைக் கொண்டு வந்து போட்டு, முதுகைத் தட்டினால் பாலாக் கறக்கிறாரே!' மேரி கொரல்லி பக்கத்திலே கூடப் போக முடியாது என்று ஆசிரியரே சொன்னார். ஆனால், ரா.கி.ர., பூந்து விளையாடி சபாஷும் வாங்கி விட்டார். மேரி கொரல்லி புத்தகம், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் வெகுவாக சிலாகித்துப் படிக்கப்பட்ட கடின நடை ஆங்கில நாவல்!
சவால் என்றால், ரா.கி.ர.,வுக்கு சர்க்கரைக் கட்டி. இலக்கியத்தில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும், எந்த சவாலுக்கும் பின்வாங்காதவர். ரா.கி.ர.,வுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது.
சைக்கிளே ஓட்டத் தெரியாது என்ற போது, மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ, லாரி பற்றி எல்லாம் தனித்தனியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஒரு மத்தியான நேரத்தில், ஆபீஸ் புறக்கடைப் பக்கம் போய், டிபன் பாக்சுகளைக் கழுவி, உதறிவிட்டு, இலாகாவுக்குள் நுழைந்து கொண்டிருந்த போது, எங்கள் கவனத்தை வராந்தாவில் நிறுத்தப்பட்டிருந்த, அரை டஜனுக்கும் மேற்பட்ட புத்தம் புது சைக்கிள்கள் கவர்ந்து இழுத்தன.
எங்கள் கோஷ்டி, புது சைக்கிள்களை வேடிக்கை பார்க்க, ஷெட்டுக்குப் போயிற்று.
ரா.கி.ர.,வின் வழக்கம் எதையும், சந்தேகத்துக்கிடமின்றிக் கேட்டு அறிந்து கொள்வார். வாழ்க்கையில் அறிஞராகவதற்கு இந்த குணம் முக்கியம் என்றும் கூறுவார்.
'என்ன திடீர்ன்னு இத்தனை புது சைக்கிள்... யாருக்கு?' என்றார்.
சைக்கிள்களின் பக்கத்திலேஇருந்த அக்கவுண்ட்ஸ் இலாகா, 'அண்ணாச்சி' பதில் சொன்னார்... 'ஓரொரு டிபார்ட்மென்ட்டுக்கும், ஒரு சைக்கிள்ன்னு ஒதுக்கி இருக்காங்க!'
உடனே, என் பக்கம் திரும்பி, 'நம்ம டிபார்ட்மென்ட்டுக்கு எதை எடுத்துக்கலாம்?' என்றார் ரா.கி.ர., அக்கவுன்ட்ஸ், 'அண்ணாச்சி' சிரித்தபடி அவசரமாக, 'அதெல்லாம் சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு தான். உங்க டிபார்ட்மென்ட்லே யாரும் சைக்கிள் ஓட்றதில்லையே...' என்றார்.
ஏதோ கிரிக்கெட் மாட்ச் விவாதம் என்று நினைச்சு, 'என்னாச்சு ஸ்கோர்?' என்றார் அங்கு வந்த, குமுதம் வெளியீட்டாளர் பார்த்தசாரதி.
அக்கவுன்ட்ஸ் அண்ணாச்சி, எந்த விஷயத்தையும், வெளியீட்டாளருக்கு அழகாகப் போட்டுத் தருவார்; அதாவது, விளக்குவார்.
'ஆர்.கே.ஆர்., அண்ணனுக்கு சைக்கிள் வேணுமாம்!' வெளியீட்டாளர் சிரித்தார் குறும்பாக, 'ஏன்... ஆசிரிய இலாகாவுக்கு ஒண்ணு ஒதுக்க வேண்டியது தானே?'
'அதில்லே... அங்கே யாரும் சைக்கிள் ஓட்டறதில்லையே...' என்றார் அக்கவுன்ட்ஸ் அண்ணாச்சி.
'என்ன ரங்கராஜன் சார்... சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சவங்களுக்குத்தான் சைக்கிள். நீங்கள் ஓட்டறீங்களா... சொல்லுங்கள்?' என்றார் வெளியீட்டாளர்.
ரா.கி.ர.,வும் சிரித்தார். 'சைக்கிள் ஓட்டறது என்ன பெரிய வித்தையா, கம்பசூஸ்திரமா... ஒரு மணி நேரத்திலே கத்துக் கொண்டால் தீர்ந்தது...' என்றார்.
எதிர் சவால் விட்டார் வெளியீட்டாளர்... 'சார்...
இன்னிக்கு சனிக்கிழமை; நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு. உங்களுக்கு ஒரு மணி இல்லை; ஒரு நாள் தருகிறேன். நீங்கள் திங்கட்கிழமை, வந்து ஓட்டிக் காட்டினால், ஒரு சைக்கிள் இல்லே. இரண்டு சைக்கிள் உங்களுக்குக் கொடுத்துடறோம்...' என்றார்.
ரா.கி.ர., அனாயாசமாக, 'சவாலுக்கு தயார்.
திங்கட்கிழமை ஓட்டிக் காண்பிக்கிறேன்...' என்றார்.
சவாலுடன் சனிக்கிழமை கழிந்தது.
ஞாயிறு தினம், காலை நேரு பார்க் மைதானத்தில், ரா.கி.ர., தனக்கு சைக்கிள் கற்றுத் தர, 'அடி'யாட்களை, அதாவது, அடிபட்டுக் கொள்ளத் தயாராக உள்ள சில ஆபீஸ் நண்பர்களை வரவழைத்துக் கொண்டார். ஜாதகம் சரியில்லாத ஒரு வாடகை சைக்கிளை வரவழைத்துவிட்டார்.
மூன்று பேர் வந்தனர். கிராம தேவதை முன் பலிகடாவை, நிறுத்துவது போல சைக்கிளை கிழக்குப் பக்கமாக நிறுத்தியாயிற்று.
வேட்டியை தார்ப்பாச்சு போட்டுக் கட்டிக் கொண்டு, சைக்கிள் பெடலில் கால் வைத்தார் ரா.கி.ர.,
'பார்த்து... பார்த்து... பார்த்து...' பல குரல்கள்.
அதற்குள், ரா.கி.ர., தன் முதல், 'விழுதலை' தரையில் பதிவு செய்து விட்டார்.
அடுத்து என்ன? பயிற்சிப் பட்டாளம் அவரைத் தூக்கி நிறுத்த, மீண்டும் பதவியேற்பு - சைக்கிள் ஆசனத்தில் அமர்ந்தார்.
பின்னணி வீரர்களின் சப்போர்ட்டில் ரா.கி.ர., சில அடிகள் முன்னேறினார்.
'உடம்பை வளைக்காதீங்க... நேரா பாருங்க!' சப்தங்களும், சமிக்ஞைகளும் வந்துகொண்டிருக்கும் போதே, சைக்கிள் ஒரு, திரிகோணாசனத்தை தவறாகச் செய்தவாறு, விசித்திரமாக வளைந்து திருகி ஒரு டமால்!
இந்தத் தடவை, ரா.கி.ர.,வின் சிராய்ப்புகள், ஆறுக்கும் மேலே என்று கணக்கிடப்பட்டது.
இப்படியே ஓட்டப் பழகுவது, கீழே விழுவதுமாக இருந்தது.
சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, போர் நிறுத்தப்படும் என்ற மகாபாரத கால யுத்த தர்மத்தை ஒட்டி, இருட்டிய பின், சைக்கிள் ஓட்டும் பயிற்சி நிறுத்தப்பட்டது.
அதற்குள், ரா.கி.ர., பாதி பீஷ்மர் ஆகி விட்டார். கைத்தாங்கலாக பாசறைக்கு - அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, படுக்கையில் கிடத்தப்பட்டார்.
'ஆளுங்க சுகம் இல்லை...' என்றார்.
'சில பேர் காலை வாரி விட்டுட்டாங்க...' என்று, என்னைப் பார்த்தார்.
நான் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு, அவரோடு ஓடி வரவில்லை என்பதையே அப்படிக் குறிப்பிட்டார்.
திங்கள் காலை ஆபீசுக்கு தகவல் பறந்தது.
ரா.கி.ர., ரொம்ப அடிபட்டுக் கொண்டு விட்டதாக!
எடிட்டர், வெளியீட்டாளர், ஒர்க்ஸ் மானேஜர், எடிட்டோரியல் என்று சுமார் ஒரு முக்கால் டஜன் பேர்வழிகள், ரா.கி.ர.,வை உடனடியாகப் பார்க்கப் புறப்பட்டாயிற்று.
காயம் நிறையப்பட்டிருந்தாலும், ரா.கி.ர., இந்தளவு போராடி இருக்கிறாரே என்று அவருக்கு வீரப் பதக்கம் தராத குறையாக அனைவரும் பாராட்டினோம்.
ஒருவழியாக அனைவரும் விடைபெற்றோம். அப்போது, ரா.கி.ர., இருந்த வீடு விசாலமாக இருந்தாலும், வெள்ளாளத் தெருவில் ஒரு நீண்ட குறுகிய சந்துக்குள் இருந்தது. எதிரே, ஆள் வந்தால், யாராவது ஒருத்தர் வழி விட்டால்தான், மற்றொருவர் முன்னுக்குப் போக முடியும்.
ஆசிரியரும், வெளியீட்டாளரும் ஆச்சரியப்பட்டனர். எதிரே ஆள் வருவதற்குப் பதில், ஒரு எருமை மாடு வந்து விட்டது. ஒரே கலாட்டாவாகி, எப்படியோ ஒதுங்கி, அது எங்களுக்கு வழி விட்டு, நாங்கள் அதற்கு வழிவிட்டு மெயின் தெருவுக்கு வந்து சேர்ந்தோம்.
'இத்தனை குறுகிய சந்திலா, ரா.கி.ர., இருக்கிறார்?' என்று ஆசிரியரும், வெளியீட்டாளரும் வியந்தனர். 'இங்கெல்லாம் வாடகைக்கு வீடு இப்படித்தான் சந்திலும், பொந்திலும் கிடைக்கிறது...' என்று யாரோ உரக்க முணுமுணுத்தனர்.
அடுத்த வாரமே, சிப்பந்திகளின் வீடு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு விட்டது.
காரியாலயத்தின் அன்பளிப்போடு, சிப்பந்திகளின் வைப்புத் தொகை ஓரளவுடன், குடியிருப்புகள் எழுந்தன.
'ஹை வாஷ்பேசின், ஹை பால்கனி, ஹை ஷவர், ஹை மொசைக்' என்று குதூகலத்துடன் புதிய வீடுகளுக்கு (குமுதம் குவார்ட்டர்ஸ்) எல்லாரும் குடியேறினோம், ரா.கி.ர.வின் பெயரைச் சொல்லிக் கொண்டு!
***
பாக்கியம் ராமசாமி
