தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 07, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் ராணுவத்தில், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, 'தர்பார்' என்றழைக்கப் படும், 'சைனிக் சம்மேளன்' நடைபெறும். கடந்த மாதத்தில் மேற்கொண்ட பயிற்சிகள், பணிகள், அதிலிருந்த நிறை குறைகள், மாற்று வழிகள் பற்றி விவாதிக்கப்படும். ராணுவ வீரர்களின் நியாயமான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.

ஒரு உதாரணம்: அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்., பதவியேற்றவுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதில் கண்டிப்புடன் இருந்தார்.

அது சமயம், எம்.ஜி.ஆர்., ராணுவத்துக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். மாநிலத்தில் ஒரு துளி மது கூட இல்லாமல் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், விடுமுறை யில் வரும்போது, வழக்கமாக எல்லா ராணுவ வீரர்களுக்கும் அவர்கள் விடுமுறையில் வரும்போது மதுபாட்டில்கள் (மிலிட்டரி ரம்) கொடுப்பது போல, தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கும், மது பாட்டில் கள் வழங்கினால், அவர்கள் மூலம் அறவே மது ஒழிக்கப்பட்டுள்ள தமிழகத்தில், மதுவாடை வீசி விடும்!

எனவே, தமிழக ராணுவ வீரர்களுக்கு விடுமுறையில் வரும்போது தரப்படும் மதுவை, இனிமேல் தராமல் நிறுத்திவிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

என்னதான் ராணுவமாக இருந்தாலும், அதைவிட, ஒரு ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர், மாண்புக்கும், மரியாதைக்கும் உரியவர் என்பதோடு, மற்ற பல முதல்வர்களை விட, அனைவராலும் வசீகரிக்கப்பட்ட ஒருவர் எம்.ஜி.ஆர்., என்பதால், அவருடைய வேண்டுகோளை ஏற்று, தமிழக வீரர்கள் விடுமுறையில் செல்லும் போது, அவர்களுக்கு மது பாட்டில்கள் கொடுப்பது நிறுத்தப்பட்டது. வீரர்களுக்கு, இந்த உத்தரவு எரிச்சலைக் கிளப்பியது!

உத்தரவு நடைமுறைக்கு வந்து, மது பாட்டில்கள் மறுக்கப்பட்டு, சில வீரர்கள் விடுமுறையில் சென்றுவிட்ட நிலையில், அந்த மாதத்திற்குரிய தர்பார் கூடியது. தர்பாருக்குரிய நடைமுறைகள் முடிந்து, கேள்வி நேரம் வந்த சமயத்தில், ஒரு வீரர் எழுந்து, இந்தப் பிரச்னையை கிளப்பினார். 'ராணுவ வீரர்களில், தமிழக வீரர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? மற்ற மாநில வீரர்களுக்கு உள்ள ஒரு சலுகையை, எங்களுக்கு மட்டும் இல்லை என மறுப்பது நியாயம் தானா?' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கமாண்டிங் ஆபீசர், 'உம் கேள்வி நியாயம் தான். சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய கடமை, சாதாரணக் குடிமகனை விட, ராணுவ வீரனுக்கு அதிகம் உள்ளது. எந்த ஒரு சட்டத்தையும், சரியா, தவறா என்று ஆராய அல்லது விமர்சிக்கக்கூடிய இடத்தில் நாமில்லை. சட்டத்தையும், உத்தரவையும் பின்பற்ற வேண்டியது தான் நம் கடமை. எனவே, ஒரு மாநில முதல்வராகிய உங்கள் எம்.ஜி.ஆர்., வேண்டுகோளை நிராகரிப்ப தென்பது சரியாகாது. தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு, மது அளிப்ப தென்பது சாத்தியமில்லை...' என்று கூறினார்.

வேறு சில வீரர்களும் இதை எதிர்த்து, தங்கள் நியாயத்தை எடுத்துக் கூறினர். ஆனால், மேலதிகாரி எல்லாவற்றையும் நிராகரித்து விட்டார். கடைசியாக ஒரு வீரர் எழுந்து, 'நாங்கள் மதுவை எங்கள் சொந்தத் தேவைக்காகத்தான் எடுத்துச் செல்கிறோம்; விற்பனைக்காக அல்ல. இதனால், ஒட்டுமொத்த மாநிலத்தின் மதுவிலக்குக் கொள்கையின் புனிதம் கெட்டு விடும் என்று, எங்கள் மாநில முதல்வர் கேட்டுக் கொண்டதால், அதை அப்படியே ஏற்று எங்களுக்கு மது கொடுக்க மறுக்கிறீர்கள். சரி. ராணுவத்துக்கு முதல்வர் வேண்டுகோள் வைக்க உரிமை உள்ளதைப் போல, ராணுவத்திற்கும் முதல் வரிடம் வேண்டுகோள் வைக்க உரிமை உண்டே. நீங்கள் எங்கள் சார்பாக அதைச் செய்யலாமே...' என்று கேட்டார்.

'சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம். கொள்கை முடிவில் தலையிட முடியாது...' என்றார் கமாண்டர்.

வீரரும் விடாமல், 'ஆனால், தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்களில் மது தாராளமாகக் கிடைக்கிறது. வசதி படைத்தவர்கள், 'பர்மிட்' வாங்கி, குடிக்கின்றனர். பனியிலும், நடுங்கும் குளிரிலும் நாட்டைக் காக்கும் நாங்கள் குடித்தால், தமிழகம் தள்ளாடி விடுமா?' என்று கேட்டார்.

உடனடியாக மேலதிகாரிகளுக்கு விஷயத்தை விளக்கி, தமிழக வீரர்களுக்கும் மது கொடுக்க உத்தரவிட்டார் கமாண்டிங் ஆபீசர்.

— கபிஸ்தலம் ராஜேந்திரன் எழுதிய, 'ராணுவம் ஓர் அறிமுகம்' நூலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us