தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 14, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தில் நிருபராகப் பணியாற்றிய, காலம் சென்ற, ஆர்.கே.நாயர் தம் நினைவுக்குறிப்பு நூலில் எழுதுகிறார்...

'இந்தியா பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாது. பாகிஸ்தான் எப்படியும் வந்து தான் தீரும்...' என்று மும்பை மாதுங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் ராஜாஜி . கேட்டுக் கொண்டிருந்த மக்கள் வெகுண்டு எழுந்தனர். ஒரே அமளி. ராஜாஜி மீது கற்களும், தார் உருண்டைகளும் விழுந்தன. ராஜாஜி அணிந்திருந்த தூய வெண்ணிற ஜிப்பா கன்னங்கரேலென்று ஆகி விட்டது.

ஆனால், ராஜாஜி பதறவில்லை. 'நான் சொல்வது உண்மையாகிற நாள் வெகு தொலைவில் இல்லை. இன்று என் மீது கல் வீசிய இதே இடத்தில், நான் பூச்செண்டு பெறுவேன்...' என்று கூறி சொற்பொழிவை முடித்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின், அதே மைதானத்தில் அமோகமாக வரவேற்கப்பட்டார்; கவர்னர் ஜெனரலான ராஜாஜி. பாகிஸ்தான் தனி நாடாகி இருந்தது. ராஜாஜியின் மேற்படி இரண்டு கூட்டங்களின் சொற்பொழிவையும் நான் குறிப்பெடுத்தேன்.

***

பராசக்தி படம் வெளியாவதற்குச் சில தினங்களுக்கு முன், சிவாஜி கணேசனுக்கு திருமணம் நடந்தது. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள, சுவாமிமலையில், ஒரு சிறிய சத்திரத்தில், தன்னுடைய சகோதரி மகளை மணந்தார். சீர்த்திருத்த முறையில் தான்! தமிழாசிரியர் ஒருவர் தலைமை தாங்க, கருணாநிதியும், நானும் வாழ்த்துரை வழங்க, திருமணம் முடிந்தது. நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள், கிருஷ்ணன், பஞ்சு, சகஸ்ரநாமம் போன்றோர் வந்திருந்தனர். உணவருந்தப் போகும் நேரம், 'லேட்'டாக வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.,

எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எம்.ஜி.ஆரைப் பார்த்து, கணேசன், எந்தவித உள்ளுணர்வும் இல்லாமல் சொன்னார்: அண்ணே நீங்க இந்த சூட்டு கோட்டு போட்டுக்கிட்டு ஏண்ணே ஆக்ட் பண்ணப் போறீங்க, கத்தி எடுத்தீங்கன்னா கைகொட்டி மக்கள் ரசிக்கும்போது என்றார்.

எம்.ஜி.ஆர்., முகத்தில் மாறுதல் தெரிந்தது. விடைபெற்று போகும் போது, என்னிடம் எம்.ஜி.ஆர்., சொன்னார்: கணேசு என்னைப் பார்த்து என்ன கேட்டது பார்த்திங்களா? ஊம்... பார்க்கிறேன். வீரசாகசப் படங்களில் கதாநாயகனாக வந்த எம்.ஜி.ஆர்., ஒரு மாறுதலாக சூட்டு கோட்டு போட்டு கதாநாயகனாக நடித்த, 'அந்தமான் கைதி' என்ற படம் அப்போது தான் வெளிவந்து, தோல்வி கண்டிருந்தது.

இதை மனதில் வைத்தே, சிவாஜி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஒரு சொல் எம்.ஜி.ஆர்., மனதில், 'ஆழமான சவாலுக்கு' அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும்.

— 'என் நினைவுகள்' நூலில் ராம.அரங்கண்ணல்.

***

காங்கிரஸ் கட்சியின் தலைவராக, பாபு ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சமயம், பம்பாய் வீதியில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார். நான்கு குதிரைகள் இழுத்து வரும் ஒரு கோச் வண்டியில் அருமையான பவனி. வியாபாரிகளும், செல்வந்தர்களும் வசிக்கும் ஒரு வீதியின் வழியாக ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. வாழ்க்கையில் அதற்கு முன்னோ, பின்னோ பார்த்திராத ஒரு அதிசயக் காட்சியை அன்று கண்டேன்.

மேலேயிருந்து தங்க மழை பெய்தது. ஆம்... காங்கிரஸ் நிதிக்காக மாடியிலிருந்து இறைத்தனர், சிறிதும் பெரிதுமான தங்கக்கட்டிகளை. ஊர்வலத்தினர், சிதறி விழுந்த தங்கக் கட்டிகளைப் பொறுக்கி எடுத்து, ராஜன்பாபுவிடம் கொடுத்த காட்சி மறக்கவே முடியாது.

— காங்கிரசின் தோற்றமும், வளர்ச்சியும் நூலிலிருந்து...

***

'இந்துஸ்தான் மிஷின் டூல்ஸ்' (மத்திய அரசு நிறுவனம்) தொழிற்சாலையை நேருஜி, 1955ல் துவக்கி வைக்க வந்திருந்தார். ஆனால், இயந்திரங்கள் சரியாகப் பொருத்தப்பட்டு தொழிற்சாலை துவக்கப்பட வேண்டிய நிலையில் இல்லை. நேருவுக்கு ஒரே கோபம். 'நான் இங்கே எதைத் துவக்குவது? எத்தனையோ நிதியுதவி தந்தோமே எல்லாம் என்ன ஆயிற்று? மக்களுக்கு நான் என்ன பதில் சொல்வது?' என்றெல்லாம் கோபத்துடன் உயர் அதிகாரிகளிடம் இரைந்தார். எப்படியோ சமாளித்துத் துவக்க விழா நடத்தினர். சில மாதங்களுக்குப் பின் நேருஜியின் உத்தரவுப்படி, 'டாடா' நிறுவனத்திலிருந்து ஒரு நிபுணர் வந்து நிலைமைகளை சரி செய்தார்.

— 'நேருவின் வாழ்வில்' என்ற நூலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us