PUBLISHED ON : நவ 11, 2012

ராஜாஜியிடம் நான் காரியதரிசியாக வேலை பார்த்த நாளில், சில சமயம், அவருடன் ரயில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அப்போது ஒருநாள் நடந்த ரசமான சம்பவம், என் வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்து விட்டது என்று துணிந்து சொல்லலாம்.
ரயில், 'லொடக்' என்று, இரண்டு ஆட்டம் ஆடி நின்றதும், தூங்கிக் கொண்டிருந்தவன், தூக்கி வாரிப்போட்டு எழுந்தேன். நாங்கள் இறங்க வேண்டிய சங்ககிரி துர்க்கம் ஸ்டேஷன் வந்தது. ராஜாஜியும், அப்போதுதான் எழுந்து, தம் படுக்கையைச் சுருட்ட ஆரம்பித்தார்.
அதைப் பார்த்து, நானும் என் படுக்கையைச் சுருட்ட ஆரம்பித்தேன். அதைக் கட்டுவதற்கு ஒரு கயிறு வைத்திருந்தேன். படுக்கையைச் சுருட்டி, அதனடியில் கயிற்றைவிட முயன்றபோது, படுக்கை முழுவதும் அவிழ்ந்து விழுந்தது! பிறகு படுக்கைக்கும், எனக்கும் பெரிய மல்யுத்தம் ஆரம்பித்தது.
தலையணையை உள்ளே திணித்தால், ஜமுக்காளம் வெளியே வந்து விழுந்தது. அதைத் திணித்து விட்டுப் பார்த்தால், துப்பட்டி எப்படியோ வெளியில் வந்து கிடந்தது. எல்லாவற்றையும் மறுபடியும் வைத்துச் சுருட்டி விட்டுப் பார்த்தால், கயிற்றை காணவே காணோம்.
துப்பட்டி, கயிற்றையும் சேர்த்து அழைத்து, படுக்கைக்குள் போய்விட்டது. துப்பட்டி மறுபடியும் வெளியில் வராமல், கயிற்றை மட்டும் எடுப்பதற்குள், எனக்கு மூச்சு வாங்கிவிட்டது.
மறுபடியும், படுக்கையை கட்டத் தொடங்கினேன். ஒரு வார்த்தையில் சொல்கிறேனே, அவரசத்தில் நம்மைக் காலை வாரி விடுவதற்கு, படுக்கையையும், கயிற்றையும் போன்ற வஞ்சக துரோக வஸ்துக்கள் ஒன்றுமே இல்லை. என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். படுக்கையை அந்தக் கயிறு கட்டவே மாட்டேன் என்றது.
அதற்குள்ளே, கார்டு விசில் அடித்து விட்டான். தம் படுக்கையைக் கட்டி, அதையும், மற்ற சாமான்களையும் கீழே இறக்கி விட்டு, என்னை பார்த்தார் ராஜாஜி! மளமளவென்று வந்து, என் கையிலிருந்து, கயிற்றைப் பிடுங்கி, அதை ஒரு வாங்குவாங்கி, ஒரு இழுப்பு இழுத்து, படுக்கையைக் கட்டி, முடிச்சு போட்டார்.
அப்புறம் கூட, அதை என் வசத்தில் ஒப்படைத்தால், விபத்து நேருமோ, என்னவோ என்று பயந்து, தாமே தூக்கிச் சென்று, பிளாட்பாரத்தில் போட்டார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர், ரயிலில் இருந்தவர்கள். எனக்கு மானமே போய்விட்டது. கொஞ்ச நாளைக்கெல்லாம், என்னுடைய காரியதரிசி பதவியையே ராஜினாமா செய்து விட்டேன்!
— ஆனந்த விகடன் (1938) இதழில் அமரர் கல்கி!
***
ரவீந்திரநாத் தாகூரின் இளம் பிராயத்தில், அவருக்கு பள்ளிக் கல்வியோடு, வீட்டில் டியூஷன் படிப்பும் உண்டு. இதனால், விடியும் முன்பே அவர் எழுந்து, படிப்புக்குத் தயாராக வேண்டும். காலையில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் வந்து, எலும்புக் கூட்டை வைத்து பாடம் நடத்துவார். அவர் சென்றதும், கணித ஆசிரியர் வருவார். கணக்குப் பாடம் நடக்கும். பிறகு, மொழிப் பாடத்திற்கு உரிய ஆசிரியர் வருவார். சமஸ்கிருதமும், வங்காளியும் நடைபெறும்.
காலை 9.30 மணிக்கு உணவு. 10.00 மணிக்குப் பள்ளிக்கூடம் போக வேண்டும்.
மாலை 4.30 மணிக்கு திரும்பும் போது, வீட்டில் உடற்பயிற்சி ஆசிரியர் காத்திருப்பார். ஒரு மணி நேரம் உடற்பயிற்சி. அவர் போனதும் ஓவிய ஆசிரியர் வருவார். அவர் போனதும் ஆங்கில ஆசிரியர்.
ரவீந்தரும் களைத்துப்போய் முன்னாலேயே தூங்கி விடுவார்.
இதை ரவீந்தர், பின்னாளில் தன் கவிதை ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தது பெருமைக்குரியது தான். ஆனால், பறவைக் குஞ்சுகளே பாக்கியம் செய்தவை. பறவைக் குஞ்சுகளின் பெற்றோருக்கு விளக்கு ஏற்றத் தெரியாது. எனவே, குஞ்சுகளின் படிப்பு காலை யிலேயே முடிந்து
விடுகிறது!
—'தாகூர்' நூலிலிருந்து...
நடுத்தெரு நாராயணன்
