தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை

திண்ணை

திண்ணை


PUBLISHED ON : நவ 18, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொகலாய மன்னர்கள், நம் நாட்டை ஆண்ட போதெல்லாம், அவர்களது தலைநகரம், இன்றயை பழைய டில்லி தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1911ல், அதாவது இன்றைக்கு, 100 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தில் மன்னராக இருந்த, ஐந்தாம் ஜார்ஜ், டில்லி வந்தார். இந்தியாவில், பிரிட்டிஷ் அரசுக்கு, புதியதொரு தலைநகரம் நிர்மாணிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார். அதன்படி உருவானதே, இன்றைய புதுடில்லி.

புதுடில்லி நகரின் நடுநாயகமாக விளங்குவது, ஜனாதிபதி மாளிகை. 1931ல், இது கட்டி முடிக்கப்பட்டது. இதற்குத் தேவையான, வெள்ளை மற்றும் சிவப்புக் கற்கள், தொலைவில் உள்ள பகுதிகளில் தான் கிடைத்தன. அவற்றை, லாரிகளில் கொண்டு வருவதெனில், அதிக செலவாகும். அதனால், ரயிலில் கொண்டு வந்தனர். மேற்படி பகுதிகளுக்கு, அப்போது ரயில் பாதை இல்லை. அதனால், புதிதாக ரயில் பாதையும் போட்டனர்.

புதுடில்லி நகரத்தை நிர்மாணிப்பதில், பெரும்பங்கு வகித்த அப்போதைய வைஸ்ராயாக இருந்த ஹார்டிஞ்ச் பிரபுவுக்கு, இந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை அமைக்க பிடிக்கவில்லை. காரணம், அந்த இடம், ஒரு கொலைக் களமாக இருந்தது தான். அதாவது, 14ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த டாமர்லேன் என்ற மங்கோலிய ஆக்கிரமிப்பாளன், தன்னை எதிர்த்த லட்சக்கணக்கான பாரத மக்களை, இந்த இடத்தில் தான் படுகொலை செய்தான். எனவே, இந்த இடத்தை ரத்தக்கறை படிந்த இடமாகவே, அவர் கருதினார். ஆயினும், அவரது அதிருப்தியையும், ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல், மாளிகையை அதே இடத்தில் எழுப்பிவிட்டனர்.

ஜனாதிபதி மாளிகையில், மொத்தம் உள்ள அறைகளின் எண்ணிக்கை, 340. இவற்றில், சிலவற்றைத்தான், நம் ஜனாதிபதிகள் பயன்படுத்துகின்றனர். மாளிகையின் பின்புறம், அழகிய பிரமாண்டமான பூங்கா உண்டு. எங்கு பார்த்தாலும், மரம், செடி, கொடி, பூக்கள். ஆங்காங்கே, செயற்கை நீர் ஊற்றுகள். இந்திய சுதந்திர தின மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, ஜனாதிபதி, விருந்து ஒன்று அளிப்பார். அது, இந்த,'மொகல் கார்டனில்' தான் நடைபெறும்.

—'ராஷ்டிரபதி பவன் - ஒரு சிறப்பு பார்வை' நூலிலிருந்து...

ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய, 'விசொர்ஜொன்' என்ற நாடகத்தின் கையெழுத்துப் பிரதி, 45 ஆண்டுகளாக கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் சிறைப்பட்டிருந்தது. பின், மேற்கு வங்க முதல்வர் அஜய்முகர்ஜி, ஒரு விழா நடத்தி, இந்த நாடகத்தை சாந்தி நிகேதன் (தாகூர் நிறுவிய கல்வி நிறுவனம்) துணை வேந்தரிடம் ஒப்படைத்தார். அந்த விழாவில் இந்த நாடகத்தை கொல்கத்தா போலீஸ்காரர்கள் நடித்து காட்டினர்.

தாகூரின் நாடகப் பிரதி, எப்படி போலீசாரிடம் வந்தது? சுதந்திரம் வருவதற்கு முன், பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில், ஒரு சட்டம் இருந்தது. அதன்படி, அரங்கேற்றத்துக்கு முன், எந்த நாடகப் பிரதியையும் போலீசாரிடம் காண்பித்து, ஒப்புதல் பெற வேண்டும். அந்த சட்டத்தை நீக்க, அப்போதே பல எழுத்தாளர்கள் பெரும் போராட்டமே நடத்தினர். அந்த வகையில், போலீசாரிடம் போய் சேர்ந்த பிரதி அது!

***

'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சிவகாமியின் சபதம்' போன்ற அமர கதைகளை எழுதிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, இளம் வயதில் ஹரிகதா காலட்சேபங்கள் பல செய்திருக்கிறார். பதினான்கு வயதில் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போதே வெளியூர்களிலும் சென்று காலட் சேபங்கள் செய்திருக்கிறார்.

***

தமிழில் கவிபாடிய, சங்க காலப் பெண் புலவர்கள் பலர் உண்டு. காக்கைப் பாடினியார், வெள்ளி வீதியார், பொன்முடியார், முடத்தாமக்கண்ணி இப்படி பலர். நவீன தமிழ் இலக்கியத்தில், முதல் பெண் எழுத்தாளர் யார் தெரியுமா? பாக்கியலட்சுமி!

யார் இவர் என்கிறீர்களா? தமிழில் முதல் சிறுகதையான, 'குளத்தங்கரை அரசமரம்' கதையை எழுதியவர். அது, வ.வே.சு., ஐயர் எழுதியதாயிற்றே என்கிறீர்களா? உண்மைதான். ஆனால், அதை அவர் தன் பெயரில் எழுதவில்லை. 'பாக்கியலட்சுமி' என்ற தன் மனைவியின் பெயரிலேயே அந்த கதையை எழுதி, வெளியிட்டார்.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us