தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : நவ 18, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



'நெருங்கி'னாலும் சொல்லாதீங்க!



கொஞ்சம் நன்றாகப் பேசினாலே போதும்... பெண்கள், தங்கள் மனக் கவலைகளை எல்லாம், கொட்டித் தீர்த்து விடுவர். அதனால், பாதிப்பு ஏற்படும் போது தான், இவரிடம் போய் எல்லாவற்றையும் உளறினோமே என்று மனம் குமுறுவர்.

இப்படித் தான், எங்கள் வீட்டு அருகில் புதிதாக குடியேறினர் அவர்கள். அந்தக் குடும்பத் தலைவிக்கும், அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட, குடும்ப விஷயம் உட்பட, பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

சமீபத்தில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, பெண்களுக்கே உரிய ஜாடை பேச்சுகள், அவ்வப்போது அரங்கேறின. ஒரு நாள், 'இவ லட்சணம் தெரியாதா... இவ புத்திக்கு தான், இவளோட பொண்ணுக்கு ஒரு லூசு, புருஷனா கிடைச்சிருக்கான்... இப்ப, இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க, வேற மாப்பிள பார்க்கிறா... ' என்று, சுற்றியுள்ள அனைவரும் கேட்கும்படி கூற, இடிந்து போயினர் தாயும், மகளும்.

அதுவரை, கல்லூரி மாணவி போல் தோற்றம் கொண்ட அவரது மகளை, திருமணம் ஆகாதவர் என்றே நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். உண்மை தெரிந்ததும், பலரும் பலவாறு தூற்ற, மனமுடைந்த அந்தப் பெண், 'இதை ஏன் இவர்களிடம் கூறினாய்... எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை...' என்று, தன் அம்மாவிடம் சண்டையிட்டு, விடுதிக்கு சென்று விட்டாள்.

தான், சரியாக விசாரிக்காமல், திருமணம் செய்து வைத்ததால் தானே மகளின் வாழ்க்கை, வீணாகிவிட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த அவளது அம்மா, தற்போது, தன் செயலாலே, மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள் என்பதால், நொந்து, நூடுல்ஸ் ஆகிவிட்டார்.

நட்பு என்ற பெயரில், கண்டவரையும் நம்பி, வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியதால் தானே இந்த பிரச்னை... தேவையா இது?

பெண்களே... குடும்பப் பிரச்னைகளை, பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி, பின், விழி பிதுங்காதீர்கள்!

— ஆஞ்சலா ராஜம், சென்னை.

இவரன்றோ நல்லாசிரியர்!



என் வீட்டில், வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரை பார்த்து, பள்ளியில் படிக்கும் என் பேத்தி, வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தேன்.

அதற்கு அவள், 'இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால், அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள். இது பற்றி அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், தான் ஒரு எம்.ஏ.,பட்டதாரி என்றும், என் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும், 'அங்கு தரும் மாத சம்பளம், குடும்பம் நடத்தப் போதாது. அதனால், விடுமுறை நாட்களில், எனக்குத் தெரிந்த பெயின்டிங், வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும், 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக, நான் வெட்கப்பட வில்லைங்க; செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றார்.

என் பேத்தியை பார்த்தேன், அவள் முகத்தில் ஒரு பெருமிதம். என் உள்ளத்திலும், அவர் ஒரு நல்லாசிரியராக ஏறி அமர்ந்து கொண்டார்.

— களந்தை மைந்தன், நெல்லை.

இவர்களுமா...?



கல்யாணத்திற்கு காத்திருக்கும், பெண் அல்லது பையனை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரின் பெரிய தலைவலி, இப்போது யார் தெரியுமா? ஜாதகம் பார்த்து சொல்லும் ஜோதிடர்கள்தான். அவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. ஒரே ஜோதிடரே, இன்று பொருத்தம் என்று எழுதி கொடுத்த ஜாதகத்தை, வேறொருவர் அவற்றை நாளை எடுத்துப் போனால், தொடவே கூடாது; பொருத்தமில்லை என்கின்றனர்.

இந்த ஜோதிடர்களால், பெண் வீட்டாரும், பையன் வீட்டாரும் படும் அவஸ்தைக்கு அளவில்லை. சம்பந்தி ஆகும் முன்னரே சண்டை வந்து விடுகிறது.

என் உறவினருக்கு நடந்த கூத்து என்ன தெரியுமா? பெண் வீட்டார், பொருத்தமாக உள்ள ஜாதகப் பையனை போனில் அணுக, அவர்கள் பொருத்தமே இல்லை என்று, அவருடைய ஜோதிடர் கூறியதாக கூற, வாய்ச்சண்டை வளர்ந்து, 'உன் ஜோதிடர் வீட்டுக்கு நான் வருகிறேன்... என் ஜோதிடர் வீட்டுக்கு நீ வா... உண்மையை அறிந்து கொள்ளலாம்...' என்று பேச்சு வளர, கடைசியில் பார்த்தால், இருவரின் ஜோதிடரும் ஒருவரே...

அதே, பெண் - பையனின் ஜாதகத்தை பார்த்து, பெண்வீட்டாரிடம் பொருத்தம் என்று சொல்லி, பையன் வீட்டாரிடம் பொருத்தம் இல்லை... தொடவே கூடாது என்று, ஒரே ஜோதிடரே சொல்லி இருக்கிறார் என்றால், வெவ்வெறு ஜோதிடரிடம் காட்டினால், என்ன கதி என்று சொல்லாமலே தெரியும்!

ஜாதகப் பொருத்தம் பார்க்காமல், திருமணம் செய்ய பயமாக இருக்கிறது...

ஜோதிடர்களே... உங்கள் ஜோதிட சாஸ்திரத்தை, பணமாக்கும் தொழிலாக ஆக்கிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், பலர் வாழ்க்கை பிரச்னை, உங்கள் கையில் என்பதை மறக்காதீர்கள். நியாயமாகவும், நீதியுடனும் நடந்து கொள்ளுங்கள். நேர்மையாக இருந்து, உங்கள் தொழிலுக்கு துரோகம் இழைக்காமல், கூடிய மட்டும் இருக்க முயலுங்கள்.

— ஜே.சங்கீதா, சென்னை.

மொபைலை இப்படியும் பயன்படுத்தலாம்!



சமீபத்தில் நானும், என் தோழியும், ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது. பயணம் ஆரம்பித்தது முதலே, தோழியின் மொபைலில், குறுஞ்செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில், பர்சில் வைத்திருந்த மற்றொரு, 'சிம்'கார்டை மாற்றினாள். அதிலும், குறுஞ்செய்திகள் வந்தன.

கோபத்தோடு அவளைப் பார்க்க, அவள் தன் மொபைலை என்னிடம் நீட்டினாள். அத்தனை குறுஞ்செய்திகளும், பொது அறிவு வினா - விடைகள். அவளை வியப்போடு நோக்க, அவளே விளக்கினாள். தான் ஒரு வெப்சைட்டை ஆக்ட்டிவேட் செய்துள்ளதாகவும், அதில் இருந்தே, இந்த வினாக்கள் வருவதாகவும் கூறினாள்.

'வெப்சைட்டில் அதிகமான துறைகள் இருக்கும்' எனவும், 'நாமே அதில் ஏதாவது பதினைந்து துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். துறைக்கு இரண்டு கேள்விகள் வீதம், ஒரு நாளைக்கு முப்பது பொது அறிவு வினாக்கள் வரும்...' எனவும் விளக்கினாள்.

மேலும், மாணவர்கள் மொபைலில் வரும் குறுஞ்செய்திகளை மறக்க மாட்டார்கள் என்பதால், இந்த முறையை அறிமுகம் செய்துள்ளதாகவும், இது, அவள் கல்லூரிக்கு பயணம் செய்யும் நேரம் என்பதால், இந்த குறிப்பிட்ட நேரத்தை அதில் கொடுத்துள்ளதாகவும், அவள் குறிப்பிட்ட அந்த ஒரு மணி நேரத்திலேயே, முப்பது குறுஞ்செய்திகளும் வந்துவிடும் எனவும் கூறினாள்.

மொபைலை இப்படியும் உபயோகிக்கலாம் மாணவர்களே...

வெப்சைட் முகவரி: www.upscportal.com

— லக்ஷ்சனா, திண்டுக்கல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us