
கவிஞர் கண்ணதாசன், தமிழ் தேசியக் கட்சி ஆரம்பித்த போது, கடற்கரையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், தி.மு.க.,வையும் அதன் தலைவர்களையும் வழக்கம் போல் தரக்குறைவாக தாக்கி பேசினார். ஆத்திரம் அடைந்த சிலர், கூட்டம் முடிந்தவுடன், கண்ணதாசனைக் தாக்க முயன்றனர். உடனே, கண்ணதாசன், போலீசில் புகார் கொடுத்தார். 'சிட்டிபாபுவும், வேறு சில மதுரைக்காரர்களும் சேர்ந்து என்னை கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த கொலை முயற்சியை, கருணாநிதி தான் தூண்டி விட்டார்...' என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார் கண்ணதாசன். இந்த புகார், மறுநாள் காலையில் ஒரு நாளிதழின் முதல் பக்கத்தில் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. வெளியூர் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு, அன்று தான், சென்னை திரும்பியிருந்தார் கருணாநிதி. 'கண்ணதாசன் கூறியிருப்பது பொய் என்று போலீசுக்கே தெரியும். உங்களை இந்த வழக்கில் சேர்க்க மாட்டார்கள்...' என்று கருணாநிதியிடம் நான் சொன்னேன். அது போலவே, கருணாநிதியை வழக்கில் சேர்க்கவில்லை.
சிட்டிபாபு மற்றும் சில மதுரைக்காரர்கள் மீது வழக்கு தொடுத்தனர். கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. நீதிபதி நடராஜன் மிகவும் நேர்மையானவர். வழக்கில் சிட்டிபாபுவுக்காக நான் ஆஜரானேன். கண்ணதாசனைக் குறுக்கு விசாரணை செய்தேன். அவர் பொதுமேடைகளில் எப்போதுமே தரக் குறைவாக பேசுபவர் என்பதை நீதிபதி உணரும் வகையில் கேள்விகளை கேட்டேன்.
'நீங்கள், சாதாரணமாக, எந்த பொதுக்கூட்டத்திலும், மாற்றுக் கட்சியினரை அசிங்கமாகவும், அவதூறாகவும் பேசுவது வழக்கம் அல்லவா?'
'இல்லை. நான் அப்படியெல்லாம் பேசுவது கிடையாது!'
கண்ணதாசன் இப்படித்தான் பதில் சொல்வார் என்பது நான் எதிர்பார்த்தது தான். இப்படி பதில் சொன்னதும், என்ன கேட்க வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன். அதைக் கேட்டேன்.
'நீங்கள் தி.மு.க.,வில் இருந்த போது, திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் பக்தவத்சலத்தின் மகள் சரோஜினி வரதப்பனைப் பற்றி என்ன பேசினீர்கள் என்பது நினைவிருக்கிறதா?'
'இல்லை...'
'நான் நினைவுபடுத்துகிறேன்...' என்று கூறி, 'சரோஜினி வரதப்பனைப் பற்றி, அவர் அசிங்கமாக பேசியதை அப்படியே எடுத்துச் சொன்னேன். இந்த பேச்சினால் ஆத்திரமடைந்த காங்கிரஸ்காரர்கள், உங்களை நையப் புடைத்தனர். சென்னை திரும்பிய நீங்கள், ரவுடிகளின் பட்டாளத்தோடு மறுபடியும் திருக்கழுக்குன்றத்தில் கூட்டம் நடத்தி, கலாட்டா செய்ய ஏற்பாடு செய்தீர்கள். இதை தெரிந்த அண்ணாதுரை, உங்கள் முயற்சியை தடுத்து நிறுத்தினார், இல்லையா?' என்றும் கேட்டேன்.
திருக்கழுக்குன்றம் பேச்சுபற்றி நான் குறிப்பிட்ட உடனே, கண்ணதாசனின் முகம் வெளிறி விட்டது. எங்கே, அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் காட்டி விடுவேனோ என்று பயந்தார். எனவே, சாமர்த்தியமாக, 'நான் அப்போது, தி.மு.க.,வில் இருந்ததால், தி.மு.க., பண்பாட்டையொட்டி அப்படிப் பேசியிருப்பேன்...' என்றார்.
'சரி... நீங்கள் தி.மு.க.,வை விட்டு வெளியேறிய பிறகு திருந்தி விட்டீர்களா? அதன் பின், மேடையில் பேசும் போதெல்லாம் நாகரிகமாகத்தான் பேசுகிறீர்களா?'
'ஆமாம்...'
'அண்மையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், மூதறிஞர் ராஜாஜியை, 'செருப்பால் அடிக்க வேண்டும்...' என்று பேசினீர்களா?'
இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்த்திராத கண்ணதாசன், அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். அவரை விட அதிர்ச்சி அடைந்தவர், நீதிபதி நடராஜன். 'இந்தக் கேள்வி எல்லாம் இப்போது எதற்கு கேட்கிறீர்கள்?' என்று பதறியபடி கேட்டார் நீதிபதி.
'இந்த சாட்சி கண்ணதாசன் எப்படிப்பட்டவர் என்பதை, இந்த நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் மேடை ஏறினால், கள் குடித்த குரங்கு போல் நடந்து கொள்பவர். பேசக் கூடாததையெல்லாம் பேசி, மாற்றாரின் ஆத்திரத்தை கிளப்பக் கூடியவர் என்பதை, இந்த நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கேள்விகளை கேட்கிறேன்...'
இதன் பிறகு, கண்ணதாசன் பதில் அளிக்கக்கூட நீதிபதி வாய்ப்பு தரவில்லை. சிட்டிபாபு உள்ளிட்டோர் மீதான கொலை முயற்சி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
—'ஒரு மேயரின் நினைவுகள்' நூலில், மறைந்த வேலூர் நாராயணன்.
***
நடுத்தெரு நாராயணன்

