PUBLISHED ON : மார் 17, 2013

மருதமலையில் வீற்றிருக்கும் மருதாசலமூர்த்தி எனப்படும் முருகன் கோவிலுக்கு, நீண்ட காலமாக கட்டப்பட்டுவந்த ஏழு நிலை ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், நாளை 18, 2013ந்தேதி திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மருதமலை புதுக்கோலம் பூண்டுள்ளது.
எப்போது எப்போது என்று, பக்தர்கள் ஏங்கித் தவித்த ராஜகோபுரம், பள பளவென்று நிறைய சிற்பங்களுடனும், அழகிய மண்டபங்களுடனும் கம்பீரமாக எழுந்துள்ளது. மருதமலையை ஏழாவது படைவீடாக போற்றுவதால், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலை ஆகிய ஆறு படை வீடுகளை நினைவு கொள்ளும் வகையில், இங்கு மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஆக, ஒரே இடத்தில், ஏழு படை வீட்டு முருகனையும் இங்கு தரிசிக்கலாம்.
பழநி முருகனைப் போன்று தண்டாயுதம் ஏந்தி, இடுப்பில் கைவைத்து நிற்கும் மூலவர் முருகனை சிருஷ்டித்த, பாம்பாட்டி சித்தர் குகை கோவிலும் அருகிலேயே உள்ளது. பாம்பு வடிவ பாறையின் கீழ் பாம்பாட்டி சித்தர் விபூதி கவசமணிந்து நின்று அருள்பாலிக்கிறார்.
மருதமலையின் ஸ்தல விருட்சமான மருதமரமும், வற்றாத சுனையான மருது சுனையும், இந்த பாம்பாட்டி சித்தர் குகைக்கோவிலருகே, இப்போதும் உயிரூட்டத்துடன் இருந்து, பக்தர்களை மகிழ்விக்கிறது.
மலைப்பாதையில், கார் போன்ற வாகனம் மூலம் செல்லலாம் என்றாலும், 837 படிக்கட்டுகளில் நடந்து செல்லும் பக்தர்களே அதிகம். இவர்கள் வழியில் உள்ள இடும்பன் சன்னிதியையும், தம்பிக்கு உகந்த விநாயகரையும் தரிசிக்கும் பேறு பெற்றவர்களாவர்.
மலை ஏறியதும், முதலில் தென்படும் பஞ்சவிருட்ச விநாயகர் விசேஷமானவர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்னும் விசேஷமாக காட்சி தருகிறார். அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என, பின்னி பிணைந்து வளர்ந்த, ஐந்து மரங்களுக்கு அடியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.
ராஜகோபுரம் கட்டித்தந்த கோவை பக்தர்கள், மேலும் தந்த நன்கொடையால், ஆதி முருகன் சன்னிதியும், விமானமும், மண்டபமும் கூட புதுப்பிக்கப்பட்டு, பிரமாண்டமான அழகுடன் காட்சி தருகிறது. கிட்டத்தட்ட, 600 அடி உயரத்தில் அற்புதமாக அமையப்பெற்றுள்ள மருதமலை ராஜகோபுர கம்பீரத்தையும், மருதாசல மூர்த்தியாகிய முருகனின் அழகையும், இந்த தருணத்தில் காண்பது விசேஷமானது என்பதால், கோவை வரும்போது மருதமலைக்கு சென்று வாருங்கள் அல்லது மருதமலைக்கு செல்வதற்காகவே, கோவைக்கு சென்று வாருங்கள்.
***
எம். ராகவேந்தர்

