
அன்றைய இந்தியாவின், அரசியல் கண்ணியம், நாகரிகம் ஆகிய பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு இதோ:
இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், எதிர்க்கட்சி உறுப்பினராக இஸ்மாயில் சாகிப் இருவரும், காங்கிரஸ்காரர்களாக பொது வாழ்க்கை யைத் தொடங்கி, சுதந்திரப் போராட்டத்தில் குதித்த போது, பாதைகள் மாறினாலும், இருவரின் குறிக்கோள், தேசிய ஒருமைப்பாடு.
நாடாளுமன்றக் கட்சி தலைவர்களை, ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார் நேரு. மாலை நேரத்தில் தொடங்கிய அக்கூட்டத்தில், காயிதே மில்லத்தின் கருத்துகளை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த பிரதமர், திடீரென்று நேரத்தை பார்த்து, எழுந்து விட்டார்.
'மிஸ்டர் இஸ்மாயில்... எழுந்திருங்கள், என்னுடன் வாருங்கள்...' என்றார் நேரு. பிரதமர், எதற்காக அழைக்கிறார் என்பது, காயிதே மில்லத்துக்குப் புரியவில்லை, மற்றவர்களுக்கும் புலப்படவில்லை. அருகிலிருந்த அறைக்கு இருவரும் சென்றனர். நேரு புன்னகைத்தபடி, 'உங்களுக்காகத் தான் இந்த ஏற்பாடு' என்று விரிப்பை சுட்டிக் காட்டினார்.
அதில் பழங்களும், குளிர்பானமும் வைக்கப்பட்டிருந்தன. 'மிஸ்டர் இஸ்மாயில்... இது நோன்புக்காலம் அல்லவா? நம் ஆலோசனைக் கூட்டம், அந்த கடமைக்கு தடையாக இருக்கக் கூடாதே... நீங்கள் நோன்பை திறந்து, தொழுகையை முடித்து வாருங்கள். அதன் பின், கூட்டத்தை தொடருவோம்...' என்றார்.
அரசியலில் இருவரும், எதிரும், புதிருமாக இருந்த போதிலும், ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுத்து, நடந்து கொண்டனர்.
***
அண்ணாதுரை முதன் முதலாக கதை-வசனம் எழுதிய படம், 'வேலைக்காரி!' படம் முடிவடைந்ததும், தயாரிப்பாளர் ஜூபிடர் சோமுவுக்கு படத்தின் மீது பயம் வந்துவிட்டது. கே.ஆர்.ராமசாமி, படத்தில் காளிதேவியை சாடிப் பேசும் காட்சி ஒன்றை அமைத்திருந்தார் அண்ணாதுரை. அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்கிற சந்தேகம் தயாரிப்பாளருக்கு. முடிந்த படம் மூன்று மாதம் கிடப்பிலேயே கிடந்தது.
கதாநாயகன் காளிதேவியை நோக்கி, 'தவறு செய்யும் வேதாசலங்களை வாழ வைக்கிறாய். தினம் தினம், கற்பூரம் ஏற்றும் என்னை வாட வைக்கிறாய்...' என்று பேசும் காட்சியை மக்கள் ஏற்பர் என்று தயாரிப்பாளரிடம் வாதிட்டார் அண்ணாதுரை. அந்த காட்சியுடனே படம் வெளியாகி, சக்கைப் போடு போட்டது.
— முக்தா சீனிவாசன் எழுதிய, 'கதாசிரியர்களுடன் நான்' நூலிலிருந்து...
***
எந்தப் பெண்ணை மனைவியாக தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்கு குழப்பமாக உள்ளதா?
ஒவ்வொரு பெண்ணின் பெயரையும் குறித்து, அவளால் கிடைக்கக்கூடிய அனுகூலங்களையும், பிரதி கூலங்களையும் பட்டியல் போட்டு பாருங்கள். நினைக்காதீர்கள், எழுதுங்கள். உங்களுக்கு எவரிடம் அனுகூலம் அதிகமோ, அவர்களை தேர்ந்தெடுங்கள். நான், என் மனைவியை அப்படித்தான் தேர்ந்தெடுத்தேன்.
— மு.வரதசாசனார் ஒரு கட்டுரையில்.
***
திராவிட இயக்கங்கள் கல்லூரி மாணவர்களிடையே வரவேற்பு பெற்று வந்த காலம், (1950களில்) அது. கண்ணதாசன், நெடுஞ்செழியன், அண்ணாதுரை போன்றவர்கள், கல்லூரி மாணவர் மன்றங்கள் சொற்பொழிவுக்கு அழைக்கப்படுவர். இவர்கள் அங்கு சென்று தமிழிலக்கியம் பற்றி பேசுவரே தவிர, அரசியல் பேச மாட்டார்கள். இப்படி பேச அழைக்கப்படும் பேச்சாளர்களுக்கு, கூட்டத்திற்கு வந்ததும் ஐந்து நிமிடங்களுக்கு முன்தான் இன்ன தலைப்பில் பேச வேண்டும் என்று தலைப்பு அறிவிப்பர்.
ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கண்ணதாசனுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு, 'ஒரு துளியும், சிறு பொறியும்!' கண்ணதாசன் எழுந்தார், 'மனிதன் உருவாவது சிறு துளியில் தான். அவன் அழிக்கப்படுவதோ, ஒரு பொறியால் தான்...' என்றார். மாணவர்களிடையே ஆரவாரம்.
அண்ணாதுரை ஒரு கல்லூரி விழாவில் பேசப் போனார். 'நாகரிகம்' என்ற திடீர் தலைப்பைக் கொடுத்தனர். அண்ணாதுரை எழுந்தார். 'மிசிசிபி-மிசவ்ரி எனும் ஆற்றங்கரையில் உள்ள அமெரிக்க நாகரிகமும், தேம்ஸ் ஆற்றங்கரை யிலுள்ள ஆஸ்திரிய நாகரிகமும், ரைன் நதிக்கரையிலுள்ள ஜெர்மானிய நாகரிகமும், போ நதிக்கரையிலுள்ள இத்தாலிய நாகரிகமும், யாங்ஸ்டியாங் ஆற்றங்கரையில் உள்ள சீன நாகரிகமும், நைல் நதிக்கரையிலுள்ள எகிப்திய நாகரிகமும், ஐராவதி ஆற்றங்கரையிலுள்ள ஆரியர் நாகரிகமும், காவிரி ஆற்றங்கரையிலுள்ள தமிழர் நாகரிகமும் ஒன்றல்ல...' என்று தொடங்கினார். மாணவர் களின் கைதட்டல் ஆரவாரத்திற்கு கேட்கவா வேண்டும்?
***
நடுத்தெரு நாராயணன்

