PUBLISHED ON : மார் 24, 2013

விருகம்பாக்கம். கோலிவுட் அபார்ட்மென்ட்ஸ்.
'பஞ்ச் டயலாக் தொழிற்சாலை மூன்றாவது தளத்தில்' என்ற அம்புக்குறி இடப்பட்ட, அறிவிப்பு பலகை, தரைத்தளத்தில் பதிக்கப்பட்டிருந்தது.
ஓட்டிவந்த இனோவா காரை விட்டு இறங்கினார் படத்தயாரிப்பாளர் யூரோ குஞ்சிதபாதம். பக்கத்து முன்னிருக்கையிலிருந்து வெளிப்பட்டான், இயக்குனர் காட்பாடி கவிராஜன். பின்னிருக்கையிலிருந்து வெளிப்பட்டான் ஆக்ஷன் ஹீரோ தமிழ்காந்த்.
மூவரும் லிப்ட்டுக்குள் புகுந்து கொள்ள, லிப்ட் மூன்றாவது தளத்திற்கு உயர்ந்து துப்பியது. ஒரு பிளாட்டின், அழைப்பு மணியை அமுக்கினர்.
நல்லி எலும்புக்கு பேன்ட் சர்ட் போட்டு விட்டது போலிருந்த ஒருவன், கதவை திறந்து விட்டான். ''ஓ... நீங்களா... உள்ள வாங்க... உள்ள வாங்க.''
வரவேற்பறையில் மூவரும் அமர்ந்தனர். ''கோலிவுட்டின், மூன்று முக்கிய தூண்களான, மூவரும் ஜோடி சேர்ந்து வந்திருக்கீங்க... என்ன விஷயம்?''
''நீங்க யாரு? பஞ்ச் பரமேஷோட உதவியாளரா?''
''ஆமா. என் பேரு ஜிலேபி ராமு. சின்ன சின்ன, ரோல்கள்ல நூறுபடம் நடிச்சிருக்கேன். இப்ப, நான் பஞ்ச் பரமேஷோட உதவியாளர். தற்சமயம், என் பெயர் பீச்சாங்கை. என்ன விஷயமா வந்திருக்கீங்க?''
''நாங்க, உடனே பஞ்ச் பரமேஷை பார்க்கணும்... இருக்காரா?''
''இருக்கிறார். நீங்க வந்திருக்கிறத, உடனே போய் சொல்றேன். ஒரு பத்து நிமிடம் வெயிட் பண்ணுங்க.''
ஐந்து நிமிட கரைசலில், பச்சை நிற பேன்ட்டும், ஆரஞ்ச் நிற சட்டையும், நீலநிற குளிர் கண்ணாடியும் அணிந்த பரமேஷ் தோன்றினான். ''ஹாய்... ஹாய்... ஹாய்.''
பரமேஷின் முகத்தில், கொழுக்கட்டை கொழுக்கட்டையாய் வீக்கங்கள்.
''என்ன பாக்கிறீங்க? சம்பளத்துக்கு ஆள் வச்சு, என் மூஞ்சிலேயே குத்து விட சொல்றேன். குத்து வாங்க, குத்து வாங்க, எனக்குள் புதுசு புதுசா பஞ்ச் டயலாக்குகள் பூக்கும். நான்கடி உயர டாபர்மேன் வளர்க்கிறேன். அது, என் ஆடைகளை கடித்துக் குதறும் போதும், மானாவாரியா எனக்குள் பஞ்ச் டயலாக்குகள் கிளம்பும்.''
''நாங்க, எதுக்கு உங்களை பார்க்க வந்திருக்கோம்னா...''
''அதை நானே சொல்றேன் புரடியூசர் குஞ்சு. நீங்க, தமிழ்காந்த்தை வச்சு, 100 கோடி ரூபாய் பட்ஜெட்ல, 'அதகளம்'ன்னு ஒரு படம் தயாரிக்கப் போறீங்க. டைரக்டரா, புதுமுகம் கவிராஜனை போட்டிருக்கீங்க. தமிழ்காந்த்துக்கு, வரிசையா நாலு படம் பிளாப். அதகளத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கணும்ன்னு ஆசை உங்க யூனிட்டுக்கு. எத்தனையோ, தமிழ்படங்கள், பரபரப்பான பஞ்ச் டயலாக்கால ஜெயிச்சிருக்கு. அதகளத்துக்கு, ரணகளமா பஞ்ச் டயலாக்ஸ் வைக்கணும்ன்னு விரும்பி என்னை தேடி வந்திருக்கீங்க. ஆம் ஐ கரக்ட்?''
''யூ ஆர் ஹண்ட்ரட் பர்சன்ட் கரக்ட் பஞ்ச் பரமேஷ். அதகளத்துக்கு நீங்க வைக்கிற பஞ்ச் டயலாக்ஸ், கோலிவுட், பாலிவுட்டை மட்டுமல்ல, ஹாலிவுட்டையே, ஒரு உலுக்கு உலுக்கிடணும். படம் பாக்ற ஒவ்வொரு ரசிகனும், படத்ல வர்ற பஞ்ச் டயலாக்குகளை ஆயுளுக்கும் மறக்கக் கூடாது. துவண்டு கிடக்ற என் மார்க்கெட்டை, அடுத்த பத்து வருஷத்துக்கு தூக்கி நிறுத்தணும் உங்க பஞ்ச் டயலாக்ஸ்,'' என்றான் தமிழ்காந்த்.
''தூள் கிளப்பிரலாம். ரஜினிகாந்த், விஜய், அஜீத், சூர்யா இவங்களோட பேமஸ் பஞ்ச் டயலாக்குகளையே தூக்கி சாப்ட்டுடலாம். படத்துல பிரேமுக்கு பிரேம், நாக் அவுட் பஞ்ச் வச்சு அசத்திடலாம். அதகளத்தின் கதையை ஒன்லைன்ல சொல்லுங்க.''
''படத்ல, தமிழ்காந்த் பச்சையப்பன் கல்லூரி மாணவனா வர்றார். கல்லூரியில் நடக்கும் மாணவர் தலைவர் தேர்தலுக்கு நிக்கிறார். வேட்பு மனுவை, வாபஸ் வாங்கிடுன்னு, எல்லா அரசியல் கட்சி தலைகளும் தமிழ்காந்த்தை மிரட்டுகின்றன. 'மாணவர் தேர்தல்ல நிக்கிறதையா தடுக்கறீங்க? இந்த தேர்தல்ல ஜெயிக்கிறதோட நிக்காம, சட்டசபை தேர்தல்ல நின்னு, முதலமைச்சர் ஆகி காட்றேன்'னு, அரசியல் தலைகளுக்கு சவால் விடுகிறார் தமிழ்காந்த். சக மாணவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி, சட்டசபை தேர்தலில் குதித்து, வெற்றி பெறுகிறார் தமிழ்காந்த். கதை இடையே, சகல கட்சி வில்லன்களுடன் மோதல், மூன்று காதலிகளுடன் கொஞ்சல், 12 சீன் காமெடி ட்ராக் வந்து போகும்.''
தமிழ்காந்தின் முகத்தை, ஒரு தடவை உற்று பார்த்தான் பஞ்ச் பரமேஷ். முகத்தில் அப்பட்டமாக முதலமைச்சர் கனவு பொங்கி வழிந்தது.
''பஞ்ச் டயலாக் எழுத என் கூலி எவ்வளவு?''
''இருபது லட்சம் பேமென்ட். இப்ப அட்வான்ஸ் அஞ்சு லட்சம்.''
''படத்துக்கு டம்மி வசனம் ரெடி செய்துகொடுத்துருங்க ஜமாய்ச்சிடலாம்.''
ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை, யூரோ குஞ்சிதபாதம் பரமேஷிடம் கையளித்தார்.
''செக் பவுன்சாகி விடாதே!'' கிண்டலடித்தபடி, காசோலையை வாங்கிக் கொண்டான் பஞ்ச் பரமேஷ்.
''இந்த கூட்டணி ஜெயிச்சிருச்சுன்னா, ஒட்டுமொத்த கோலிவுட்டும், நம் ஆளுமைக்கு கீழ் வந்துவிடும். நான் என்ன உயரத்துக்கு போகிறேனோ, அதே உயரத்துக்கு பஞ்ச் பரமேஷையும் கொண்டு செல்வேன். இது சத்தியம்.''
''ஷூட்டிங் எப்ப ஆரம்பிக்கறீங்க?''
''உங்க பஞ்ச் டயலாக்ஸ் முழுக்க, எப்ப கைக்கு வருதோ, அந்த நொடியில ஷூட்டிங்கை ஆரம்பிச்சிருவோம்.''
''எனக்கு ரெண்டு வார டயம் போதும். அதுக்குள்ள, பஞ்ச் டயலாக் பிரளயத்தை, பூகம்பத்தை பத்து ரிக்டர் ஸ்கேல் அளவில் பூக்க செய்துடுவேன்.''
யூரோ குஞ்சிதபாதம், தன் பேக்கிலிருந்து ரிப்பன் கட்டிய சாம்ப்பெய்ன் பாட்டிலை எடுத்து பரமேஷிடம் நீட்டினார். ''படு காஸ்ட்லி சாம்பெய்ன். இதை குடிச்சுக்கிட்டே பஞ்ச் டயலாக்ஸ் ரெடி செய்யுங்க.''
''தாங்க்யூ,'' பீச்சாங்கையை வாங்கச் சொல்லி, சமிக்ஞை காட்டினான் பஞ்ச் பரமேஷ்.
''அப்ப நாங்க கிளம்புறோம்.''
''கொஞ்சம் பொறுங்க. காபி சாப்ட்டுட்டு போகலாம்.''
''இட்ஸ் ஓ.கே., முதல் ஷெட்யூல் முடியட்டும். வெ#ட் பார்ட்டி வச்சு, கொண்டாடிடுவோம்,'' வந்தவர்கள் மூவரும் கிளம்பிப் போக, யோசனையாய் அமர்ந்தான் பஞ்ச் பரமேஷ்.
''என்ன பாஸ்... பலத்த யோசனை. பஞ்ச் டயலாக்சை எப்படி புடிக்கிறதுன்னா?''
''ஆமாண்டா பீச்சாங்.''
''பஞ்ச் டயலாக்ஸ் எவ்வகை ஆடியன்சுக்கு ரொம்ப அப்பீல் ஆகும் பாஸ்?''
''லோ கிளாஸ் ஆடியன்சுக்குதான்.''
''சோ... நாம பிரஷ்ஷா பஞ்ச் டயலாக்ஸ் பிடிக்க, லொக்காலிட்டி மக்கள் கூடும் இடங்களுக்கு போக வேண்டி வரும்.''
''லொக்காலிட்டி மக்கள் கூடும் இடங்கள் எவை எவைடா பீச்சாங்?''
''உங்களுக்கே தெரியும். இருந்தாலும், என் வாயால சொல்றேன். பைத்தியகார மருத்துவமனை, டாஸ்மாக் பார், பொதுக்கழிப்பிடம், கார்ப்பரேஷன் குழாயடி, ட்ரெய்ன்ல அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட், அரசு மருத்துவமனை, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, திருட்டு 'டிவிடி' விற்கும் இடம், இவைதான் மக்கள் சந்திக்கும் இடங்கள். இந்த இடங்கள்ல கண்ணையும், காதையும் திறந்து வைத்து நின்றால், பஞ்ச் டயலாக்ஸ், நயாகரா நீர்வீழ்ச்சியாய் கொட்டும். வேணும்கிறதை அள்ளிக்க வேண்டியதுதான்.''
'நம்பளை விட புத்திசாலித்தனமா யோசிக்கிறானே... இவனை நேரம் பார்த்து வெட்டிவிடணும்...' என யோசித்தபடி, ''சபாஷ்ரா பீச்சாங்கை. நான் யோசிச்சதையே நீயும் சொல்லிட்ட.''
மனநல மருத்துவமனைக்கு பஞ்ச் பரமேஷும், பீச்சாங்கையும் சென்றனர். இரு ஆண் பைத்தியங்கள், தீவிரமாக சண்டை போட்டுக்கொண்டு நின்றிருந்தன.
''ஓவரா ஆடாதேடா... என் முனியாண்டி சாமி, உன்னை மாறுகால் மாறுகை வாங்கிடும்.''
''டேய் டேய்... ஊர்ல இருக்கற எல்லா சாமிகளும், எனக்கு ஆசாமிகள் தான்டா.''
''பீச்சாங்கை... இந்த பஞ்ச்சை குறிடா குறி.''
ஒரு டாஸ்மாக் பாருக்குள் நுழைந்தனர். தரையில், நரகம் கோலம் போட்டிருந்தது. இரு குடிகாரர்கள், குடித்துக் கொண்டே காரம் சாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
''அரசாங்கம் அமோகமா நடக்க, தினம் தினம் நிதி உதவி செய்றோம். ஆனா, சமுதாயம் நம்மளை குடிகாரன்னு கேவலமா பேசுதே.''
''ஒபாமா, ஒசாமா, ஒய்யாரமா, பேசினவங்களை, ஓடி, ஆடி பந்தாடுவேன் அபாரமா.''
பீச்சாங்கையை சொரண்டினான் பரமேஷ்... ''இதையும் குறி.''
பொதுக்கழிப்பிடத்தில், வயிற்றை பிசைந்துகொண்டு பரமேஷûம், பீச்சாங்கையும் நின்றனர். உள்ளே உட்கார்ந்திருப்பவனை, வெளியே காத்திருப்பவன் சீக்கிரம் வர அழைத்தான்.
''பிரசவ மருத்துமனையானாலும், திருப்பதி தர்ம தரிசனம் கியூன்னாலும் நம்ம டர்ன் வரவரைக்கும், பொறுமையா காத்திருக்கும் பொண்ணும், ஆணும்தான் உருப்படியானவங்க. கூவாம அடங்குடா.''
கார்ப்பரேஷன் தண்ணீர் லாரியின் முன், பிளாஸ்டிக் குடங்களுடன், இரு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
''எட்டிப்போடி. தட்னா தாராந்திருவ.''
''தண்ணியும், காத்தும் அனைவருக்கும் சொந்தம். என் பங்கை, தரமறுத்தா தூக்குவேன் தீப்பந்தம்.''
நெல்லை அதிவிரைவு வண்டியில், கசங்கி, நசுங்கியபடி பரமேஷும், பீச்சாங்கையும் பயணித்தனர். இரு பயணிகள் சண்டையிட்டுக் கொண்டனர்.
''என்னை யாருன்னு நினைச்ச... ஆளு தெரியாம மோதாதே, ஆழம் தெரியாம காலை விடாதே.''
''என்னை படைச்ச கடவுளே, முகத்தை காட்டாம வந்தா மோதுவேன். கடல் கூட, என் முழங்கால் ஆழம்தான்.''
மாநகராட்சி மேனிலைப்பள்ளியில், இரு விடலைகள் முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.
''அவ என் ஆளுடா. நீ, இடைல புகுந்து, நூல் விடாதே!''
''ஊர்ல இருக்ற எல்லா பொண்ணுகளுக்கும், நீ கொடுப்ப ஜிலேபி. ஆனா, நீ, எனக்கு ஒரு ஜுஜுபி.''
கீழ்த்தட்டு மக்கள் கூடும் இடங்களுக்கு பரமேஷûம், பீச்சாங்கையும் சென்று, பஞ்ச் டயலாக்குகளை ஒன்றுவிடாமல் சேகரித்தனர்.
ஏறக்குறைய, ஐம்பது பஞ்ச் டயலாக்குகளை, படத்தின் வசனத்துடன் கோர்த்துக் கொடுத்தான் பஞ்ச் பரமேஷ். 600 தியேட்டர்களில் படம் வெளியானது. அத்ரிபுத்ரி வெற்றி.
தமிழ்காந்த் உள்ளும் புறமும் பூரித்திருந்தான். பஞ்ச் பரமேஷை கட்டியணைத்துக் கொண்டான். ''நான், தமிழகத்தின் முதலமைச்சராகும் நாள், வெகுதூரத்தில் இல்லை. இனி, என்னுடைய எல்லா படங்களுக்கும் நீங்க தான் பஞ்ச் டயலாக் எழுதணும், உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க. எது கேட்டாலும், தயங்காம தர்றேன்.''
''நீங்க, முதலமைச்சர் ஆகும்போது, எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து விடுங்கள்,'' என்றான் பரமேஷ். பீச்சாங்கை இடைமறித்தான், ''நான், பத்தாம் கிளாஸ் பெயில். என்னை கல்வி அமைச்சரா ஆக்கிருங்க.''
யூரோ குஞ்சிதபாதம் மூக்கை நீட்டினார், ''நான், நிதி அமைச்சர்.''
''என் மச்சான், ஒரு போலி டாக்டர். எனக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கொடுத்திருங்க,'' என்றான் டைரக்டர் காட்பாடி கவிராஜன்.
இளிச்சவாய் தமிழக மக்களின், சினிமா கிறுக்கு குறையாத வரைக்கும், இவர்களின் கனவும் நனவாவது சாத்தியமே!
***
ஆர்னிகா நாசர்

