
ராஜாஜியின், வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நடைப்பயணம், ஏப்., 20,1930 கும்பகோணத்தை அடைந்தது. கும்பேஸ்வரன் கோவில் வாசலில் பூர்ண கும்ப மரியாதையுடன் ஊர்வலத்தினர் வரவேற்கப்பட்டு, தேச பக்தர்கள் பந்துலு ஐயர் (கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்) வீட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜாஜி பேசினார். அப்போது கூட்டத்திலிருந்த சிலர் குழப்பம் விளைவிக்க முயன்றனர். சிலர், கேள்விகள் எழுப்பினர். அச்சடித்த அறிக்கை ஒன்றையும் கூட்டத்தில் வீசினர். அந்த நோட்டீசின் தலைப்பு, 'சத்தியாகிரகமா, சண்டித்தனமா?' என்பது.
சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்றோர் பேசும் கூட்டங்களில் இதுபோன்ற அநாகரிகச் செயல்களை ஒரு கும்பல், திட்டமிட்டே அரங்கேற்றிக் கொண்டிருந்தது. சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் காங்கிரசை எதிர்த்து வந்தனர். சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட கே.அருணாசலம் என்பவர் எழுதியுள்ள பகுதி : தொண்டர் படை கும்பகோணத்தை அடைந்ததும், சுய மரியாதை நண்பர்கள் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். துண்டுப் பிரசுரங்களை இவர்கள் பொதுமக்களிடமும் சத்தியாகிரக தொண்டர்களிடமும் வினியோகித்தனர். 
அவற்றில் காணப்பட்ட சில கேள்விகள்... 'நீங்கள் திருச்சியிலிருந்து புறப்பட்ட பின், வழியில் பல ஊர்களில் உங்களுக்கு பூர்ண கும்பம் கொடுக்கப்பட்டதே, அதை வாங்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ராஜகோபாலச் சாரியார் என்ற பெயருக்கு முன் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை போட்டுக் கொண்டிருக்கிறீர்களே... நீங்கள் எந்த நாட்டுக்கு சக்கரவர்த்தி?' இப்படிப் பல.
இவர்கள், பொதுக்கூட்டத்தை கலைக்கவும், முற்பட்டனர். காந்தியாம், பூந்தியாம், வந்தே மாதரமாம், இந்தே மாதரமாம், நாங்கள் நோட்டீசில் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுய்யா! இல்லாட்டி கூட்டம் நடத்தக் கூடாது... என்றெல்லாம், கள் சாப்பிட்ட போதையில் கலகம் செய்தனர். ராஜாஜி பேசிக் கொண்டிருக்கையில், கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
அதற்கு ராஜாஜி சொன்னார்: உங்கள் நோட்டீசுக்கு பதில் சொல்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் அல்ல. கூட்டம் முடிந்து, தனியாக வந்து உங்கள் கேள்விகளை கேளுங்கள்; பதில் கூறுகிறேன் என்றார். கலகம் செய்ய வந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. ராஜாஜியை திட்டியபடி, மேடை நோக்கி சென்றனர்; மண்ணை எடுத்து வீசினர். கூட்டத்தில் ஏக பரபரப்பு ஏற்பட்டது. 
கலகக்காரர்களை மேடை அருகில் விடாமல், காங்கிரஸ் தொண்டர்கள் சுற்றி வளைத்து நின்று கொண்டனர். விஷமிகளின் முயற்சி பலன் அளிக்கவில்லை. 
அன்று, உண்டியலில் நிறைய பணம் வசூலாகியிருந்தது. அதை அபகரித்து போகவே, இவர்கள் இந்த அட்டகாசம் செய்தனர் என்ற செய்தி தலைவருக்கு எட்டியதும், அவர் உண்டியலை பத்திரமாக காரில் ஏற்றி, பந்துலு அய்யர் வீட்டுக்கு அனுப்பி விட்டார். 
- இப்படி எழுதியுள்ளார் அருணாசலம்.
—'உப்பு சத்தியாகிரகம்' என்ற நூலிலிருந்து...
திப்பு சுல்தான், மலபார் மீது படையெடுத்த போது, குருவாயூரைக் கைப்பற்றினார். அங்குள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர்கள், திப்புவின் படை வீரர்களால் கோவிலுக்கு சேதம் ஏற்படலாம் என்று அஞ்சி, கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி, ஊருக்கு வெளியே ஏதோ ஓரிடத்தில் ஒளித்து வைத்தனர். 
செய்தி அறிந்த திப்பு சுல்தான், அர்ச்சகர்களை அழைத்து, தாமே முன்னின்று, மீண்டும் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வித்தார். அது மட்டுமல்ல; குருவாயூர் வட்டத்தின் வரிவசூல் அனைத்தையும் கிருஷ்ணன் கோவிலுக்கு அளித்தார்.
— ஜி.ஆளவந்தார் எழுதிய, 'மாவீரன் திப்பு சுல்தான்' நூலிலிருந்து...
நடுத்தெரு நாராயணன்

