PUBLISHED ON : ஏப் 21, 2013

மாலை 5:00 மணிக்கு முடிய வேண்டிய வேலை, 5:30 வரை இழுத்து விட்டது. எப்படியோ நேர்ந்து விட்ட சிறு பிழை, சரி செய்வதற்குள் மென்னி முறிந்தது. சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும். அம்மாவுக்கு மூட்டு வலி. 7:00 மணிக்கு டாக்டரிடம் அப்பாய்ன்மென்ட் வாங்கியிருக்கிறது.
மேஜையை பூட்டிக் கொண்டிருக்கும் போது, சொல்லி வைத்தது போல, அவன் வந்தான்.
''இந்தா பிரதர். இந்த பைலை கொஞ்சம் பார்த்துட்டு போ...'' என்று அலட்சியமாக, என் மேஜையின் மேல் போட்டுவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் போனான்.
எனக்கு கோபம் கோபமாக வந்தது. பாய்ந்து, அவன் சட்டையைப் பிடித்து இழுத்து, கீழே தள்ளி முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு, 'நான் உன் அடிமையா... நீயா எனக்கு சம்பளம் தர்றே. உன் வேலையை, என் தலையில் கட்டிவிட்டு, ஓசியில் சம்பளம் வாங்கிக்கிட்டு போறியே... உனக்கு வெட்கமாக இல்லை. இதற்கு நீ தெருத்தெருவாக பிச்சை எடுக்கலாமே. தூ...' என்று துப்ப வேண்டும் போல் இருந்தது.
ஆனால், அப்படி செய்ய விடாமல், 'ஆபீஸ் மேனர்ஸ்' தடுத்தது என்றாலும், பொங்கி வரும் கோபம் உடம்பெங்கும் பரவி, அதன் வேகம் தாங்காமல் நடுக்கம் கொடுத்தது. 'இந்த கருணாகர நாகம் என்று தொலையும்...' என்று கறுவிக்கொண்டே, அவன் போட்டுவிட்டு போன பைலை, வலியுடன் திறந்தேன்.
ஆறு மாதம் ஆகிறது, நான் வேலையில் சேர்ந்து.
அப்பாய்ன்மென்ட் ஆர்டருடன், வேலைக்கு சேர, அச்சம் கலந்த மகிழ்ச்சி பரவசத்துடன் அலுவலகம் வந்தபோது, அலுவலகம் எனக்கு கோவிலாக தெரிந்தது.
வாசலில் மானசீகமாக விழுந்து கும்பிட்டுவிட்டு, உள்ளே நுழைந்தேன்.
ப்யூனிடம் விஷயத்தை சொல்லி காத்திருந்து, மானேஜரை பார்த்தபோது, அவர் கடவுளாக தெரிந்தார்.
ஆர்டரை பார்வையிட்டு, வாழ்த்து சொன்னவர், கோபி என்பவரை அழைத்து, 'புது நியமனம். உங்கள் டிபார்ட்மென்ட் தான் பார்த்துக்கங்க...' என்று சொல்லி அனுப்பினார்.
அந்த கோபி, என்னை விட பத்து வயது கூடுதலாகவும், அனுபவம் நிறைந்தவராகவும், நிதானமானவராகவும் தெரிந்தார்.
வேலைகளை சொல்லிக் கொடுத்தார். முதன் முதலாக பள்ளிக்கூடம் போய் பாடம் படிப்பது போல பரவசமாக இருந்தது. ஆர்வமும், திறமையும் இருந்ததால், என்னால் வேலைகளை சுலபமாக புரிந்து கொண்டு வேகமாக செய்ய முடிந்தது.
'சீக்கிரமே கத்துக்கிட்டு, என் வேலையை சுலபமாக்கிட்டிங்க. வெரிகுட்...' என்று, கோபி சார் உற்சாகப்படுத்திய போது, மனதுக்கு தெம்பாயிற்று. இன்னும் இன்னும் நன்றாக வேலை செய்து, அவரிடமும், மேலதிகாரிகளிடமும் பாராட்டு வாங்க வேண்டுமென்ற, உத்வேகம் எழுந்தது.
அந்த அலுவலகத்தில் மொத்தம், 34 பேர். சிலரை, அறிமுகப்படுத்தி வைத்தார் கோபி சார். நானாகவும், சிலரிடம் பழகிக் கொண்டேன்.
அப்போது தானாகவே வந்து, 'என்ன... புதுசா வேலைக்கு சேர்ந்தால், என்னையெல்லாம் வந்து பார்க்கணும்ன்னு யாரும் சொல்லலையா...' என்று மிரட்டலாக கேட்டதோடு, 'இந்தா, இந்த ஸ்டேட்மென்ட்டை எழுதிக் கொடு...' என்று கூறியவரை பார்த்து வியந்தேன். சிட்டிகை போட்டு, அவரை அழைத்து, 'ஹலோ... நீங்க யாரு... ஒரு அறிமுகமும் இல்லாம... என்னிடம் வேலை சொல்றிங்க?' என்று கேட்டேன்.
ஏதோ நான் செய்யக்கூடாத காரியத்தை செய்துவிட்டது போல, ஒட்டு மொத்த அலுவலகமும் என்னை திரும்பிப் பார்க்கவே, லேசாக எனக்கு வியர்த்தது.
விரைந்து வந்தார் கோபி சார்.
'செல்வம் மேற்கொண்டு எதுவும் பேசாதிங்க. அவர் கொடுத்த வேலையை செய்ங்க. இல்லைன்னா விடுங்க, நான் செய்றேன்...' என்றார்.
'ஏன் சார் அப்படி?'
'ஆமாம் அப்படித்தான்...' என்றார்.
'கோபி சார்... நம்மைப் பத்தி சொல்லி வைங்க...' என்றான் அவன்.
அடுத்து வந்த நாட்களில், நானாக சிலவற்றை கவனித்தேன்.
அந்த ஆள் பெயர் கருணாகரன். என்னைப் போல், ஒரு கிளார்க்குதான். ஆனால், ஒரு க்ளார்க் செய்ய வேண்டிய எந்த வேலையையும், அவன் ஒழுங்காக செய்து நான் பார்க்கவில்லை.
தினமும் தாமதமாகத்தான் அலுவலகம் வருவான். சீட்டில் உட்கார மாட்டான்.
சூப்பர்வைசர் மாதிரி ரவுண்டு அடித்து வெளியேறுவான்.
கேன்டீனில் டீ குடித்தும், சிகரெட் புகைத்துக் கொண்டும் இருப்பான்,
அரட்டையடிப்பான். 5:00 மணியளவில், 'பை' சொல்லிவிட்டு, வேலையை யார் தலையிலாவது கட்டிவிட்டு போய் விடுவான்.
அவனது ஒழுங்கீனத்துக்கு, தாராளமாக வேலையை விட்டு விரட்டலாம். அந்த அதிகாரம் உள்ளவர்களே, கண்டும் காணாமல் போவது எரிச்சலை தந்தது.
'ஏன்?' என்று கேட்டதற்கு கோபி சார் சொன்ன பதில்...
'இந்த கருணாகரன், பரமசிவன் கழுத்து பாம்பு. உள்ளூர் அரசியல் பிரமுகருக்கு வேண்டப்பட்டவன்; அரசியல் தொடர்பு. அந்த தைரியத்தில் ஆடறான்...'
'அரசியல் தொடர்புன்னா... அதை வெளியில் வச்சுக்கணும். இது மத்திய அரசு அலுவலகம். இங்கே வாலாட்டறான்... அதிகாரிகளும் கண்டுக்காம இருக்காங்க. உள்ளூர் அரசியல்வாதிக்கு, அவங்க ஏன் பயப்படணும்?'
'அரசு அலுவலகம் என்றாலும், இது இருக்கிறது உள்ளூரில். வேலை செய்பவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள். அதனால், உள்ளூர் தொல்லைகள் சிலதை சகிச்சுக்கத்தான் வேணும். துறை ரீதியாக, இவன் மீது நடவடிக்கை எடுத்துட முடியும். அப்படி ஒரு நடவடிக்கை எடுத்துவிட்டு, அந்த அதிகாரி ஆபீசை விட்டு வெளியில் போய்விட முடியாது. வாசலில் அடியாட்களை நிறுத்தி வைப்பான், வாகனத்தில் போகும்போது தாக்குவான், வீட்டுக்கு வந்து மிரட்டுவான். எதற்கும் துணிந்து நிற்க, நாம் ஒன்றும் சினிமா ஹீரோ இல்லை; சாமான்யர்கள். குடும்பம், அப்பா, அம்மா, தங்கை, தம்பி, மனைவி, குழந்தைகள்ன்னு வாழறோம், நாம் ரிஸ்க் எடுக்கலாம். ஆனால், குடும்பம் பாதிக்கப்படும். வீட்டுப் பெண்கள் கடைத்தெருவுக்கு போகும்போது, 'உன் அண்ணந்தானே என்மேல, புகார் கொடுத்தான்'னு கையை பிடிப்பான். குடியிருக்கும் வீட்டுக்கு கரன்ட் வராது, குடிநீர் கனெக்ஷன் கட்டாகும். இன்னும் பலது நடக்கும்...'
'ரொம்ப கற்பனை செய்றிங்க சார்...'
'நாட்டு நடப்பு செல்வம்...'
'என்ன தான் தீர்வு சார்...'
'ஒரு நாள், அதற்கான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில், அவங்க கொட்டம் ரொம்ப நாள் நடக்காது. அதிகாரி இடம் மாறினாலோ, அரசியல்வாதிக்கு பதவி போனாலோ, இவர்கள் கதி அதோ கதிதான். பீஸ் போன பல்புதான். தாக்குபிடிக்க முடியாமல், அவங்களே ஒதுங்கிடுவாங்க அல்லது ஓரம் கட்டப்படுவாங்க. அதுவரை கண்டும் காணாமல் போகணும்...'
'பார்த்துகிட்டு புழு மாதிரி சும்மா இருக்க முடியலையே சார்...'
'அப்படின்னா வேற பிராஞ்சுக்கோ, வேற ஊருக்கோ போக வேண்டியது தான் அல்லது வேலையை உதறிட்டு, வேறு வேலை தேடிக்கணும். எங்கே போனாலும் அரசியல் இருக்கும். வெளி அரசியல் குறுக்கீடு இல்லாத இடத்தில் கூட, அலுவலக அரசியல்ன்னு ஒண்ணு இருக்கும். முதலாளிக்கோ, அதிகாரிக்கோ வேண்டப்பட்ட ஒருவன், அலப்பறை பண்ணிக்கிட்டு... வேலையை செய்யாமல் பலன்களை மட்டும் அனுபவித்துக் கொண்டிருப்பான். என்ன சொல்ல முடியும்....' என்றார்.
மனம் சமாதானமாகவில்லை. ஆனாலும், சொல்பவர் அனுபவஸ்தர். உண்மையை தான் சொல்வார். நான் புதுசு அதனால், வேகமாக இருக்கிறேன் என்று உணர்ந்தேன்.
மறுநாள் அலுவலகம் கிளம்பும் போதே, மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.
'இன்று யார் மீதும் கோபம் கொள்ள மாட்டேன், எரிச்சலடைய மாட்டேன், என் வேலைகளை திறம்பட செய்வேன், என் மேல் திணிக்கப்படும் அடுத்தவர் வேலைகளை முடிந்த அளவு செய்து விட்டு விலகி வருவேன்...' என்று தீர்மானித்தேன்.
அன்று கருணாகரனை காணவில்லை. மறு நாளும் வரவில்லை.
விசாரித்ததில், அவனுக்கு உடம்புக்கு சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட்டாகி, மெடிக்கல் லீவில் போயிருப்பதாக தெரிய வந்தது.
ஆனால், யாரிடமும் பரபரப்பு இல்லை.
அப்படி ஒருவன் அந்த ஆபீசில் இருந்ததாகவே, யாரும் காட்டிக் கொள்ளவில்லை. ஆச்சரியமாக இருந்தது.
அந்த ஆபீசில் வேலை செய்வோர் வீட்டில், எந்த விசேஷமானாலும் எல்லாரும் கலந்து கொள்வது வழக்கம். கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசம், என சுப நிகழ்ச்சிகள் வரும்போது, எல்லாரும் பணம் போட்டு பரிசுப் பொருள் வாங்கி கொடுப்பர்.
உள்ளூரில் கல்யாணம் என்றால், ஒரு பேட்ச், ரிசப்ஷன் போய் வந்தால், மற்றவர்கள் காலை முகூர்த்தத்துக்கு செல்வர். கிரகப்பிரவேசம் என்றாலோ, கொஞ்சம் பேர் காலையிலும், முடியாதவர்கள், 'லஞ்ச்' இடைவேளையில் வீட்டை பார்த்து வருவர். விசேஷம் வெளியூரில் என்றால், ஆபீஸ் சார்பாக யாராவது சிலர் மட்டும் போய் வருவர். அதே போல கெட்டது நடந்தாலும் முதல் ஆளாக வந்து நிற்பர்.
ஹெட் கிளார்க் சந்தானத்துக்கு, கிட்னி பாதிப்பு நேர்ந்தபோது, எல்லாரும் அவரை பார்க்கப் போனது மட்டுமில்லாமல், அவர் சிகிச்சை முடிந்து திரும்பி வரும் வரை, தினமும் ஒருவர் போய், தைரியம் கூறி வந்ததை பார்த்தேன். கோபி சார் இதற்கெல்லாம் ஓடி ஓடி செய்வார் என்பதால், எனக்கும் அது பழகி விட்டது.
மாதம் தோறும் நூறு, இருநூறு என செலவானாலும், நாம் என்ற ஒற்றுமை உணர்வையும், நேசத்தையும் அந்த செயல்பாடுகள் காட்டியது. இவ்வளவு ஏன்? போன வாரம், ப்யூன் காலில் அடிபட்டு மருத்துவனையில் இருந்தபோது, ஆபீசே பதறி ஓடியது. அவர்களைப் பார்த்து ஆறுதலடைந்த ப்யூன், 'நீங்கள் வந்ததிலேயே... எனக்கு பூரண குணம் ஆகிவிட்டது போல இருக்கு சார். சீக்கிரமே வந்து உங்களுக்கு வேலை செய்வேன் சார்...' என்று நெகிழ்ந்தார்.
ஆனால், பவர்புல் கருணாகரன், மருத்துவமனையில் கிடக்கிறார், இங்கே ஒரு சலனமும் இல்லை. காரணம் என்னவென்று புரியாமல் இல்லை. இதை அவன் எப்படி எடுத்துக் கொள்கிறான் என்று பார்ப்பதற்காக, அரை டஜன் சாத்துக்குடி வாங்கிக்கொண்டு, கருணாகரனைப் பார்க்கச் சென்றேன். இரண்டாம் வார்டில், காமாலை நோய் வந்து படுத்திருந்தான். என்னை பார்த்ததும், அவன் இமைகள் விரிந்தது.
''நீயாவது வந்தியே,'' என்றான்.
''எல்லாரும் வந்திருப்பர், நீங்களும் மத்தவங்க போல நடந்திருந்தால்...'' என்றபடி சாத்துக்குடி பையை கொடுத்தேன்.
''நான் சின்னவந்தான். ஆனாலும், மனசுல பட்டதை சொல்றேன். நமக்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் நம்ம நடவடிக்கையை பொறுத்துதான் அமையும். நேர்மையாய் உழைத்து, மத்தவங்களை மதிச்சு வாழ்ந்தால், நமக்கு மதிப்பு கிடைக்கும். அப்படி கிடைக்கிற மதிப்பும் நிலைக்கும். அடுத்தவங்களுக்காக உண்மையில் மனம் இறங்கினோம் என்றால், உலகமும் நமக்காக இறங்கும். நம்மை மத்தவங்க அன்பால் வணங்கணும், அதுதான் கடைசி வரை கூட வரும். அதிகாரத்தினாலோ, அரசியல் பலத்தினாலோ, போக்கிரித்தனத்தினாலோ கிடைக்கிற மரியாதை ஜீவனில்லாதது; போலியானது. கைகட்டி நிற்கிறவன் கூட கை விட்டுடுவான்.
''இன்னைக்கு உங்களை பார்க்க ஆபீசில் யாரும் வரலை. காரணம், உங்கள் மேல் உண்டாகியிருக்கிற கசப்பை, அவங்க இந்த வகையில் தெரியப்படுத்தியிருக்காங்க. எனக்கு பிறகும் சிலர் வரக்கூடும்... ஆனால், அதில் உள்ளன்பு இருக்காது. கடமைக்காக வந்து எட்டிப் பார்ப்பர். இனியாவது உங்களை நீங்கள் சரி செய்துக்கணும். தற்காலிக அதிகாரத்தை விட, நிரந்தர மரியாதைதான் நமக்கு வேண்டும். அதற்கு எப்படி நடக்கணுமோ, அப்படி நடந்துக்க பாருங்க. இப்படி பேசினது தப்புன்னு நினைச்சா... என்னை மன்னிச்சுருங்க. உங்கள் மேல் உள்ள அக்கறையால், இதை சொல்றேங்கறதை புரிஞ்சுக்குங்க. கெட் வெல் சூன்,'' என்று கை குலுக்கிவிட்டு வந்தேன்.
என் பேச்சு மாற்றத்தை உண்டாக்கிடும் என்றெல்லாம், நம்பிவிடவில்லை என்றாலும், அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்.
அதிர்ஷ்டவசமாக,'வொர்க் - அவுட்' ஆகியிருக்கிறது.
அடுத்தடுத்து, அவரை கண்டுகொள்ள போனவர்களிடம், அவன் பேசிய விதம் வித்தியாசமாக இருந்ததாக கூறினர்.
'அவனவனுக்கு ஆஸ்பத்திரி படுக்கையில் விழுந்தால் தான், ஞானோதயமே வரும் போல. முரட்டுத்தனமான ஆள் பஞ்சு மாதிரி ஆகி, ரொம்ப பணிவா பேசினதோட சிலரிடம் மன்னிப்பும் கேட்டானாம்...' என்ற தகவல் காதில் விழ மகிழ்ந்தேன்.
குணமாகி வரப்போகும் புது கருணாகரனுக்காக, ஆவலோடு காத்திருக்கத் துவங்கினேன்.
***
சொக்கலிங்கம் ஜீவக்குமார்

