தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூன் 09, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 09, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வர் சுந்தரம் என்ற நாடகத்தில், நாகேஷ் சர்வர். மேஜை துடைக்கும் கிளீனராக, ஒரு பையன் வரவேண்டியிருந்தது. 'எச்சில் இலை எடுக்கும் வேஷத்தைக் கொடுக்கிறீர்களே...' என்று, அந்த வேடம் போடும் பையன், வருத்தப்படுவானோ என்ற எண்ணத்தில், அவ்வேடத்தை நாடகத்தில் நானே போட்டேன். வசனமே இல்லாத வேடம். அந்தக் கிளீனர், மேஜையைத் துடைக்கும் முறையைப் பார்த்து, நாகேஷ் கிண்டல் செய்வது தான் காட்சி.

இந்த கிளீனர் வேடத்தை, சர்வர் சுந்தரம் படத்திலும் நானே செய்ய வேண்டுமென்று டைரக்டர் பஞ்சு விரும்பினார். அதே போல் நானும் நடித்தேன். ஆனால், படத்தின் இறுதித் தொகுப்பு நேரம் வரும் போது, இக்காட்சியை டைரக்டர் பஞ்சு வெட்டி விட்டார். 'நீங்களே அந்தப் பாத்திரத்தை நடிக்க வேண்டும்...' என்று, என்னை வற்புறுத்தி நடிக்க வைத்த டைரக்டரே, கடைசியில் இந்தக் காட்சியை வெட்டி எறிந்து விட்டார். எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கதையின் வேகத்தை மனதில் வைத்து பார்த்து, இக்காட்சி தேவையில்லை என்று வெட்டி விட்டார்.

டைரக்டர் பஞ்சு அடிக்கடி கூறுவார்: படப்பிடிப்பு நடக்கும் போது, இருக்கும் டைரக்டர் வேறு; தொகுப்பு அறையில் கத்தரிக்கோலுடன் உட்காரும் டைரக்டர் வேறு! அங்கு என்னுடைய எண்ணமெல்லாம், விறுவிறுப்பான காட்சிகள் தான்! சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அங்கே இடமில்லை, என்பார்.

அன்றைக்கு அந்தக் காட்சியை எடுத்த போது, வருத்தப்பட்ட நானே, இன்று இயக்குனர் என்ற முறையில், அதே போல பல விஷயங்களை வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

— இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்...

***

ஏட்டுச் சுவடிகளைத் தேடி, ஊர் ஊராக யாத்திரை சென்றவர் உ.வே.சாமிநாதய்யர். அப்போது அவருக்கு திருக்குற்றாலத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை எழுதுகிறார்:

ஒரு நாள் காலையில், நானும், சண்பகக் குற்றாலக் கவிராயரும், வேறு சிலரும் குற்றால மலைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வர சென்றோம். மலையின் வடபகுதியில் உள்ள சோலை வழியே செல்லும் போது, எங்கிருந்தோ இனிய சங்கீத ஒலி வந்தது. நாங்கள், அது வந்த வழியே சென்றபோது, ஒரு மாளிகையை அடைந்தோம். அதன் வாசலில் ஒரு சிறிய திண்ணையில், தனியாக ஒருவர் உட்கார்ந்து உரக்கப் பாடிக் கொண்டிருந்தார். தனக்கு தானே பாடுபவராக இருந்தால், அவ்வளவு உரக்கப் பாட வேண்டிய அவசியம் இல்லை.

நாங்கள் அவரை அணுகியவுடன் அவர் பாட்டை நிறுத்தி,'நீங்கள் யார்?' என்று எங்களைக் கேட்டார். சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து தங்கியிருப்பதையும், நாங்கள் அவருடன் வந்திருப்பதையும் தெரிவித்தோம். அவர், வேம்பத்தூர் பிச்சு அய்யருடைய தம்பி என்றும், அவர் பெயர் சர்க்கரை பாரதி என்பதும் தெரிந்தது.

நாங்கள் பேசும் போதே உள்ளேயிருந்து, 'பலே... ஏன் பாட்டு நின்று விட்டது?' என்று அதிகாரத் தொனியோடு ஒரு கேள்வி வந்தது. ஒரு வேலைக்காரன் உள்ளேயிருந்து ஓடிவந்து, சர்க்கரை பாரதியை விழித்துப் பார்த்தான். அவர் நடுங்கி, மீண்டும், தாளம் போட்டுப் பாடத் தொடங்கினார்.

எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'நீங்கள் இங்கே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு வாருங்கள். அங்கே விரிவாகப் பேசலாம். சன்னிதானம் உங்களைக் கண்டால் சந்தோஷமடையும்...' என்று கூறினோம். அவர் பாடிக் கொண்டே இருந்தமையால், 'ஆகட்டும்...' என்று சொல்ல இயலாமல், தலையை மட்டும் அசைத்தார். நாங்கள் விடை பெற்று வந்தோம்.

அன்று மாலை சர்க்கரை பாரதி, மடத்திற்கு வந்து தேசிகரைப் பார்த்தார். அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு, நாங்கள் அவர் நிலைமையைக் கண்டு இரங்கினோம். அவர் ஒரு ஜமீன்தாரிடம் இருக்கிறார். அந்த ஜமீன்தார், தம் மாளிகையின் உள்ளே ஒரு பெண்ணோடு சீட்டாடிக் கொண்டிருந்தார். சர்க்கரை பாரதி, அவர் காதில் படும்படி வெளியிலிருந்தபடியே பாடினாராம். உள்ளே ஜமீன்தாரோடு பெண்மணியும் இருப்பதால், அவர் உள்ளே போகக் கூடாதாம். பாட்டை நிறுத்தியது தெரிந்து, ஜமீன்தார் அதட்டின குரலைத் தான் நாங்கள் கேட்டோம்.

இவ்விஷயங்களைக் கேட்டு நாங்கள் வருந்தினோம். 'வெறும் சோற்றுக்குத் தான் இப்படித் தாளம் போட வேண்டியிருக்கிறது...' என்றார் அவர். பின் அவர் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகருடன் பேசி இன்புற்றார். பல அரிய பாடல்களையும், கீர்த்தனைகளையும் பாடினார். தேசிகர் பேருவகை அடைந்தார். பதினைந்து ரூபாய் பெறுமான சரிகை வஸ்திரமொன்றை அளித்தார்.

சர்க்கரை பாரதி அவ்வளவு பெரிய சன்மானத்தை எதிர்பார்க்கவே இல்லை. கண் கலங்கியபடியே விடைபெற்று சென்றார்.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us