
நாம், ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டில், நிகரற்றவர்களாகத் திகழ்ந்தோம். இந்திய ஹாக்கி அணியை, மைதானத்தில் பார்த்தவுடனேயே மற்ற நாட்டு அணியினரின் ரத்த அழுத்தம் உச்சத்தை தொடும். இந்திய அணிவீரர், மேஜர் தயான் சந்தை, 'ஹாக்கி மகராஜ்' என்பர். எதிர் அணிக்குள் அவர் பந்தை எடுத்துச் செல்லும் அழகே தனி. அவர் விளையாட்டை ரசித்தவர்கள் கதை கதையாய் சொல்வர். 'தயான்சந்த், ஹாக்கி மட்டையின் முனையில் பசை தடவி வைத்துள்ளார். அதனால் தான், பந்து அவர் ஹாக்கி மட்டையில் நழுவாமல் இருக்கிறது...' என்பர் சிலர். 'தயான்சந்த்திற்கு மந்திரம் தெரியும். அதனால் தான், அவர் ஹாக்கி மட்டையை மந்திரக் கோலாக மாற்றி விட்டார். மந்திரவாதியை எப்படி எதிர்க்க முடியும்...' என்றும் சொல்வர்.
ஹாலந்து நாட்டில், அவர் ஹாக்கி விளையாடும் லாவகத்தை பார்த்தவர்கள், அவர் மட்டைக்குள் ஏதோ விசை உள்ளது என்று கருதி, அவர் மட்டையை உடைத்துப் பார்த்து ஏமாற்றமடைந்தனர்.
ஒரு நாட்டில் விளையாடும் போது, ஒரு வயதான கிழவி, முனை வளைந்த தன் கைத்தடியை கொடுத்து, 'எங்கே, இதை வைத்து விளையாடு பார்ப்போம்...' என்றாளாம். அந்தக் கைத்தடியை வைத்து விளையாடி, பல கோல்கள் அடித்தார் தயான்சந்த் .
ஜெர்மனியிலுள்ள, பெர்லின் நகரில் 1936ல், ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில், நம் இந்திய ஹாக்கி அணியும் கலந்து கொண்டது. தயான்சந்தின் விளையாட்டை, ஜெர்மன் நாளிதழ்கள் புகழ்ந்து எழுதின. 'இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஹாக்கி மந்திரவாதி' என்று, தலையங்கம் தீட்டின. தினமும், தயான்சந்த் பற்றிய செய்திகளை வாசித்த சர்வாதிகாரி ஹிட்லருக்கு ஒரே ஆச்சரியம். 'உலகிலேயே, உயர்ந்த இனத்தவரான நம் ஜெர்மானிய வீரர்களை விட, இந்தியன் எப்படி சிறப்பாக விளையாட முடியும்...' என்று சந்தேகப்பட்ட ஹிட்லர், ஜெர்மனியும், இந்தியாவும் மோதும் இறுதிப் போட்டியை காண நேரில் வந்து விட்டார்.
இறுதிப் போட்டி ஆரம்பமாகியது. தயான்சந்தின் வேகத்திற்கு முன்னால் ஜெர்மானிய வீரர்கள் திணறினர். தயான்சந்த் பந்தை எடுத்தாலே, அது கோலாக மாறியது. மளமளவென்று தயான்சந்த் ஆறு கோல்கள் அடித்தார். மற்ற நம் வீரர்கள், இரண்டு கோல்கள் அடித்தனர். ஜெர்மனி திக்கித் திணறி, ஒரே ஒரு கோல் போட்டு, தோல்வியைத் தழுவியது.
ஹிட்லர் அப்படியே திகைத்துப் போய் விட்டார். அவர் கண்கள் தயான்சந்தை வெறித்து நோக்கின. அவரின், குறுகிய புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. மறுநாள், தயான்சந்தை விருந்துக்கு அழைத்தார் ஹிட்லர். விருந்து முடிந்ததும், ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டார். 'மிஸ்டர். தயான்சந்த், உங்கள் நாட்டில் என்ன இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறீர்கள். நான், உமக்கு ஜெர்மானியக் குடியுரிமை தருகிறேன்; எல்லா வசதிகளும் செய்து தருகிறேன்; ஏன், எங்கள் ராணுவத்தில் மிகப் பெரிய அதிகாரியாக்கி விடுகிறேன்; நிறைய சம்பளம்; நீர் ஒன்றே ஒன்று செய்தால் போதும். எங்கள் ஜெர்மனி அணிக்காக, ஹாக்கி விளையாட வேண்டும்...' என்றார். தயான்சந்த் பணிவுடன், 'உங்கள் அழைப்பிற்கு நன்றி. ஒரு விளையாட்டு வீரன், அவன் பிறந்த நாட்டிற்காகத் தான் விளையாட வேண்டும். அது தான் நியதி. பணம், பதவிக்காக தாய்நாட்டை மறப்பது பாவம்...' என்று சொல்லி, விடைபெற்றார்.
'இப்படியும், ஒரு விளையாட்டு வீரனா!' என்று, ஹிட்லர் ஆச்சரியப்பட்டு போனார்.
***
ஜவஹர்லால் நேரு 1936ல், தமிழகத்தில் 16 நாட்கள், சுற்றுப்பயணம் செய்தார். உடுமலைப் பேட்டையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில், பழனிக்கு வந்து சேர்ந்தார். காலை 8:00 மணிக்கு, ஒரு பெரிய கூட்டம் கூடியது. கூட்டத்தில், நேருவுக்கு வரவேற்பு பத்திரம் அளிக்கப்பட்டது. அந்தப் பத்திரத்துடன், அழகிய வேலைப்பாடு அமைந்த வெள்ளிப் பேழை ஒன்றில், அவருக்கு பழனி பஞ்சாமிர்தம் அளிக்கப்பட்டது.
நேரு வரவேற்புப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு, ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். பேச்சு முடிந்ததும், பேழையில் வைத்திருந்த பஞ்சாமிர்தத்தைக் குறித்து விசாரித்தார். 'அது என்ன, எதற்காக, எப்படிச் செய்வது?' என்றெல்லாம், கேள்விகள் கேட்டார்.
பஞ்சாமிர்தத்தின் சுவை பற்றிய செய்தியை காட்டிலும், இது பழனி தண்டாயுதபாணி கோவில் பிரசாதம் என்ற செய்தியை, விருப்பத்துடன் கேட்டுக் கொண் டார்.
கோவில்களிலும், பிரசாதங்களிலும் நேருவுக்கு நம்பிக்கை கிடையாது. எனினும், பிரசாதத்தை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளும்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டி மேனேஜரிடம் சொன்னார்.
அரசியல் பிரச்னைகளிலும், சர்வதேசப் பிரச்னைகளிலும் அவருக்கு இருந்த நாட்டம், ஆன்மீகத்தில் இல்லை. எனினும், பழனி பஞ்சாமிர்தத்தை தன் தாயாருக்கு, பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கும்படி காங்கிரஸ் கமிட்டி மேனேஜரிடம் கூறியது, அவரது தாயன்பைப் புலப்படுத்துவதுடன், சமயப்பற்று போன்ற விஷயங்களில், பிறர் நம்பிக்கை மீது, அவருக்குள்ள மதிப்பையும் உணர்த்தியது.
'சுவாமி பிரசாதம் என்றால், தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைவார்...' என்றார் நேரு. அன்றே, பஞ்சாமிர்தம் பேழை, அவர் தாயார் சொரூபராணிக்கு, அனுப்பி வைக்கப்பட்டது.
***
நடுத்தெரு நாராயணன்