PUBLISHED ON : செப் 08, 2013

என்.எஸ்.கே., சிறையில் இருந்த சமயத்தில், சென்னையில், என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவை சேர்ந்த, டைரக்டர் ப.நீலகண்டன் எழுதிய, 'நாம் இருவர்' என்ற சமூக நாடகத்தை, தங்களோட நாடகக் குழுவை வைத்து நடத்தி வந்தார் நடிகர் சகஸ்ரநாமம்.
பாரதியாரின், 'அச்சமில்லை, அச்சமில்லை, விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளு பாடுவோமே...' ஆகிய பாடல்கள், அந்த நாடகத்தின் கதையோடு பின்னப்பட்டு, பாடப்பட்டன. வெள்ளைக்காரர் ஆட்சியில் சுதந்திரப் போராட்டமும், மக்களிடையே தேசப்பற்றும் ஓங்கியிருந்த காலம் அது.
'நாம் இருவர்' நாடகத்தைப் பார்த்தவுடன், ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு பிடித்து விட்டது. உடனடியாக, அதை படமெடுக்க தீர்மானித்து, கதை உரிமையை வாங்கி விட்டார். ஆனால், ஏவி.எம்.,க்கு ஒரு சிறு தயக்கம். அதாவது, அந்தக் கதையை விட, அக்கதைக்கே ஒரு தனி ஜீவனைக் கொடுத்துக் கொண்டிருந்தது பாரதியாரின் பாடல்கள் தான், என்பது அவர் அபிப்ராயம்.
பாரதி பாடல்களுக்கான உரிமை, யாரோ ஒருவரிடம் இருப்பதாக கூறினர். அவர் களிடமிருந்து, அந்த உரிமையை பெறாமல், படத்தில் பாடல்களைச் சேர்த்தால் பிரச்னை, வழக்கு வரும். ஏற்கனவே, நாடகங்களில் பாரதி பாடல்களை பயன்படுத்தவே, அந்த உரிமையாளர்கள் ஆட்சேபித்து, நீதிமன்றம் போனவர்கள்.
ஒரு மார்வாடிக்காரர் அந்த உரிமையை வைத்திருந்தார். அவர் கிராமபோன் ரிக்கார்டு கம்பெனி வைத்திருந்தார். பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்து, விற்பனை செய்யலாம் என்பதற்காக, 600 ரூபாய்க்கு, அவர் பாரதியார் பாடல்களின், 'காப்பி ரைட்'டை வாங்கி வைத் திருந்தார். பின், கிராமபோன் கம்பெனியை கூட மூடி விட்டனர். ஆனால், 'காப்பிரைட்' உரிமை அவர் களிடமே இருந்தது.
மெய்யப்பன், கிராமபோன் ரிக்கார்டு கம்பெனியின் காரியஸ்தரைப் பிடித்தார். 'கொஞ்சம், உங்கள் முதலாளியிடம் சொல்லுங்கள். அவர் தான், இப்போது ரிக்கார்டிங் செய்வதில்லையே... பாரதியாரின் பாடல்களின் உரிமையை வைத்திருந்து என்ன பயன்... ஏதோ ஒரு விலை கொடுத்து நான் வாங்கிக் கொள்கிறேன்...' என்றார்.
அவரும், ஏவி.எம்., தன் முதலாளியை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தார்.
மடியில் பத்தாயிரம் ரூபாயைக் கட்டிக் கொண்டு, ஏவி.எம்., சென்றார். பாரதியாரின் பாடல்களை அறுநூறு ரூபாய்க்கு தானே அவர்கள் வாங்கியிருக் கின்றனர். இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்குள் முடித்து விடலாம் என்ற நினைப்பில், மார்வாடியிடம் வியாபாரத் தந்திரங்களை எல்லாம் உபயோகித்துப் பார்த்தார் ஏவி. மெய்யப்ப செட்டியார். ஆனால், அந்த சேட் எல்லா தந்திரங்களுக்கும் மேம்பட்டவராக இருந்தார்.
அவர் ஒரேயடியாக, 'பத்தாயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் சொல்லுங்கள், உங்களுக்கு அந்த, 'காப்பி ரைட்' தருகிறேன்...' என்றார்.
ஏவி.எம்.,மிற்கு மிகுந்த சந்தோஷமாகி விட்டது. மறுநாள் என்றால், சேட்டு மனம் மாறிவிடப் போகிறார் என்ற திகிலில், உடனே, 'இப்பொழுதே எழுதுங்கள் அக்ரிமென்ட்டை...' என்று கூறி, பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து, 'காப்பிரைட்'டை எழுதி வாங்கி வந்து விட்டார்.
நாம் இருவர் படத்தின் வெற்றிக்கு, பாரதியாரின் பாடல்கள் முக்கிய காரணமாயின.
***
உப்புச் சத்தியாக் கிரகத்துக்காக, திருச்சியில் இருந்து வேதாரண்யம் செல்லும் போது, தன் மகள் லட்சுமிக்கு, தினமும் ஒரு கடிதம் எழுதி வந்தார் ராஜாஜி. சேலம், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் ராஜாஜியின் மகள் லட்சுமி, மகன் நரசிம்மன் இருந்தனர். லட்சுமிக்கு 18 வயது, நரசிம்மனுக்கு 20 வயது. அந்தக் கடிதங்களை, 'போர் முனைக் கடிதங்கள்' என்று கூறலாம். தஞ்சை மாவட்டம், ராஜப்பன் சத்திரம் என்ற இடத்தில் இருந்து, ஏப்., 23., 1930ல், ராஜாஜி எழுதினார்:
என் காலில், கட்டை விரலுக்கு அடிப்பாகத்தில், செருப்பு கடித்து கொப்பளமாகி, சீழ்பிடித்து விட்ட படியால், அதை, உடனே ஆபரேஷன் செய்து, கட்டுக்கட்டிக் கொண்டு, அன்றே நடந்து விட்டேன். சரியாய் போயிற்று. ஆனாலும், செருப்பு இல்லாமல் தான் நடந்து வருகிறேன் என்று, எழுதியுள்ளார்.
தேக சுகத்தையும் தியாகம் செய்த உண்மையான தியாகி அவர்.
***
காலம் சென்ற மாணிக்க நாயக்கர், மேட்டூர் அணையைக் கட்டும் போது, ஒரு சமயம் என்னிடம் வந்து, 'இயந்திரம் ஒன்று செய்வதற்கு, மர வேலை செய்யும் தச்சன் ஒருவன் வேண்டும்...' என்று கேட்டார். அவர் பெரிய இஞ்ஜினியர். ஆகையால், கைதேர்ந்த அனுபவம் கொண்ட, ஒரு தச்சரை அனுப்பத் தீர்மானித்தேன். ஆனால், அவரோ, 'திறமைசாலியாக இருக்கக் கூடாது. ஒன்றும் தெரியாதவனாக இருந்தால் தான், எனக்கு, அவன் யோசனை சொல்ல மாட்டான். நான் அவன் யோசனையைக் கேட்பதாக இருந்தால், என் யோசனை எல்லாம் வீணாகி விடும். ஆகவே, நான் சொல்வதை செய்யக் கூடியவனாக, பெயரளவில் தச்சனாக இருந்தால் போதும்... ' என்றார்.
ஆகவே தான், நான் என் கட்சிக்கு, முட்டாள்கள் தான் வேண்டும் என்கிறேன். எனக்கு யோசனை கூறுகிறவர்களானால், என் காரியம் கெட்டு விடும். இதனால், என்னை சர்வாதிகாரி என்று கூறினால் கூட, நான் அதற்காக லட்சியம் செய்பவன் அல்ல; வெட்கப்படுகிறவனும் அல்ல.
— 'ஈ.வெ.ராமசாமி சிந்தனைகள்' நூலிலிருந்து...
ராமாயணத்தில், முக்கியத்து வம் பெறுபவை இரண்டு மான்கள்; ராமனிடமிருந்து, சீதா பிராட்டி பிரியக் காரணமாக இருந்தது ஒரு மான். அது பொன் மான்; பிரிந்தவர், சேர காரணமாக இருந்தது மற்றொரு மான் - அது அனுமான்.
— வாரியார் சொன்னது.
நடுத்தெரு நாராயணன்
