sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : டிச 08, 2013

Google News

PUBLISHED ON : டிச 08, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் பிழைப்புக்காக, என்னென்னமோ தொழில்கள் செய்திருக்கிறேன். இதில், மறக்க முடியாதது... மதுரையில், ஜட்கா வண்டிக்காரனுக்கு உதவியாக இருந்தது. அந்த வண்டிக்காரனின் மனைவிக்கு, பெரு வியாதி. வீட்டை கவனிப்பது, சமைப்பது எல்லாம், அவனுடைய மகள் தான். அவளுக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கும். காதிலே, ஈயத்தாலான பாம்படம் அணிந்திருப்பாள்.

அவள் தான் எனக்கு சோறிடுவாள்; மரியாதையாக நடத்துவாள். என்னை, 'மாப்பிள்ளை' என்று அழைத்து, ஜட்கா வண்டிக்காரன் கேலி செய்யும் போது, அவள், ஓடி ஒளிவாள்; செல்லமாக சிணுங்குவாள்.

'நானும், இந்தக் கிழவன் சீக்கிரம் செத்துப் போனால், நாம் தான், இந்த வண்டியையும், குதிரையையும் வைத்துக் கொண்டு, இவளை திருமணம் செய்து, இந்தக் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து, ஒரு ஜட்கா வண்டிக்காரனாக மாற, தீர்மானித்திருந்தேன்.

வீட்டை விட்டு ஓடிப் போன என்னை, ஒருநாள், சினிமா கொட்டகையில் கண்டுபிடித்த, என் மாமா மகன், பிடித்த பிடியில், என்னை இழுத்து வந்து விட்டார். அதன் பின், அந்த வாழ்க்கையும் மாறிப் போயிற்று.

-- ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில்.

கடந்த, 1957-ல், நடந்த பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, தன்னம்பிக்கையோடு, தேர்தல் களத்தில் இறங்கியது. காமராஜர், தான் செயல்படுத்திய நல்ல திட்டங்களின் பயன்களை விளக்கி, மக்களின் ஆதரவைத் திரட்டினர். அந்தத் தேர்தலில் தான், தி.மு.க., முதன் முறையாக, தேர்தலில் குதித்தது. அதுவும், 50 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. ஆந்திரா, தமிழகத்திலிருந்து பிரிந்த பின், தமிழகத்தில், கம்யூனிஸ்ட்டுகள் வளர்ச்சியும், தடைபட்டு விட்டது. இதனால், காங்கிரசுக்கு இணையான, வலுவான எதிர்க்கட்சி அன்று, தமிழகத்தில் இல்லை.

இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரஸ் அதிருப்தியாளர்களும் அணி திரண்டனர். ராஜாஜி, பசும்பொன் முத்தராமலிங்க தேவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், எல்.எஸ்.கரையாளர், காமராஜரின் நண்பராக இருந்து, பின், அரசியல் எதிரியாகி விட்ட, டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, நீதிக் கட்சிப் பின்னணி கொண்ட, வி.கே.ராமசாமி முதலியார் போன்றோர் இணைந்து, 'காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி' என்ற, ஒரு புதிய அணியை உருவாக்கினர். 80 சட்டசபைத் தொகுதிகளில், காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினர். அந்தத் தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கும், பிரசாரமும், பண பலமும், காங்கிரசை திகைக்க வைத்தது.

காமராஜர், தன் சொந்தத் தொகுதியான சாத்துாரில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, ஜெயராம ரெட்டியார் என்ற, முன்னாள் காங்கிரஸ்காரர் போட்டியிட்டார். இறுதியில், காமராஜர், 4,717 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

'போட்டி கடுமையாக இருந்ததே... எப்படி ஜெயித்தீர்கள்?' என்று கேட்டதற்கு, காமராஜர்,

'நான் ஜெயித்ததற்கு, பசும்பொன் தேவர் தான் காரணம். அவர், கடுமையான பிரசாரம் செய்தார். அதைப் பார்த்து, எனக்கு எதிராக இருந்த, எங்கள் ஊர்க்காரர்கள், மெட்ராஸ், பம்பாய் என்று பல ஊர்களிலிருந்து, விருதுநகர் வந்துட்டாங்க. அவனவன் வேலை பார்த்தான்; அவனவன் செலவழிச்சான். எனக்கு எதிரியா இருந்தவன் எல்லாம், எனக்கு வேலை பார்த்தான். அதனால்தான் நான் ஜெயிச்சேன்...' என்றார்.

- மு.பிச்சை எழுதிய சைவ, சித்தாந்த கழக வெளியீடான, 'முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன்' நுாலிலிருந்து...

கல்கி, தமிழன், நாடோடி, எஸ்.வி.வி., தேவன், ராஜாஜி, டி.கே.சி., சோமு, பி.ஸ்ரீ ஆகியோரின், ஜனரஞ்சக எழுத்துகளின் முன், மணிக்கொடி எழுத்தாளர்களின், கலைப்படைப்புகள் நிற்க முடியவில்லை.

நான்கே ஆண்டுகளில், 'மணிக்கொடி'யும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், க.நா. சுப்ரமணியத்தின், 'சூறாவளி'யும், கடையை கட்டி விட்டன. 1939ல், இரண்டாம் உலக யுத்தம் துவங்கிய வேளையில், மணிக்கொடி எழுத்தாளர்களில், ஒரு சிலர் (பி.எஸ்.ராமையா, கி.ரா.,) ஜெமினி, ஜூபிடர் ஸ்டுடியோக்களிலும், ஒருவர் (சிட்டி) அகில இந்திய ரேடியோவிலும், மற்றொருவர், இந்து அறநிலையத் துறையிலும், (ந.பிச்ச மூர்த்தி) இன்னுமொருவர், வாகினி ஸ்டுடியோவிலும், (ந.சிதம்பர சுப்பிரமணியன்) வேலைக்கு சேர்ந்தனர். மவுனி, ரைஸ் மில் தொழில் நடத்தத் துவங்கினார். புதுமைப்பித்தனுக்கு, தினமணியில், உதவி ஆசிரியர் உத்தியோகம்.

கு.ப.ரா., - க.நா.சு., - சி.சு. செல்லப்பா ஆகியோருக்கு, வேலையில்லாத் திண்டாட்டம். இவ்வாறாக, அவிழ்த்து விட்ட, நெல்லிக்காய் மூட்டை போல், பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாமல், மணிக்கொடி கோஷ்டி சிதறுண்டு போயிற்று.

- தாமரை, ஜூன் 1962 இதழில், டி.கே.சி., கட்டுரையிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us