PUBLISHED ON : டிச 08, 2013

பரிணாம வளர்ச்சி!
புழுதி பறந்த மண்சாலைகள் எல்லாம்
தார்ச்சாலைகளாகி கொதிக்கின்றன...
தாலாட்டிச் சென்ற
மாட்டு வண்டிகள் மறைந்து,
வகை வகையான
எந்திர வாகனங்கள் விரைகின்றன!
சத்தான கம்பு, ராகி,
சோள உணவுகள் மணந்த இடத்தில்
'பிட்சாக்களும், பர்கர்களும்'
பிரமாண்டம் காட்டுகின்றன!
புடவையும், தாவணியும்
சுடிதாரும், மிடியுமாய் உருமாறிட
வேட்டிகள் படபடத்த இடத்தில்
ஜீன்ஸ்கள் கவ்விப் பிடிக்கின்றன!
ஒலியை மட்டும் கேட்ட
வானொலியின் இடத்தில்
ஒளியையும் பார்க்கும்
தொலைக்காட்சிகள் வீற்றிருக்க,
தொலைபேசிகளின்
கட்டுப்பாடுகள் ஏதுமின்றி
கைக்குள் அடக்கமாய் அலைபேசி!
மூன்று தினங்கள் எடுத்துக் கொண்ட
தகவல் பரிமாற்றம்
மூன்று நிமிடங்களில் நடக்கிறது
இணையதளம் வந்த பின்!
அரிவாள் வீசி, வஞ்சம்
தீர்த்த காலம் போய்
ஆர்.டி.எக்ஸ் குண்டுகளால்
ஆட்களை கொல்லுகின்றனர்!
பலவும் இதுபோல்
பரிணாம வளர்ச்சியால்
மாற்றம் கண்டது போலத்தான்
வீட்டுப் புறத்திண்ணையும்
முதியோர் இல்லமாகி இருக்குமோ!
- எஸ்.சங்கர்
திருப்பரங்குன்றம்.
