தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மார் 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கருணாநிதியை, ஒருநாள், மாலை நேரத்தில் சந்தித்தேன். ஆற்காடு வீராசாமியும் உடனிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆர்., பள்ளிக் குழந்தைகளுக்கு, இலவச சத்துணவுத் திட்டத்தை அறிவித்திருந்தார். கருணாநிதி, இதுபற்றி, எங்களிடம் கருத்து கேட்டார். நான் மனதில் பட்டதை தயங்காமல் சொன்னேன்... 'இது, பெற்றோர்களை குழந்தைகளுக்காக, உழைக்கும் கடமையிலிருந்தும், எண்ணத்திலிருந்தும், பொறுப்புணர்வினை மறக்கச் செய்து, சோம்பேறித்தனத்திற்கு தள்ளக்கூடும். இருப்பினும், கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்கள், தங்கள் குழந்தைகள் ஒரு வேளையாவது சாப்பிடும் போது, எம்.ஜி.ஆரை வாழ்த்துவதை தவிர்க்க முடியாது...' என்றேன்.

மேலும், கருணாநிதியிடம், நம்மிடம் இருக்கிற, அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை, சத்துணவு திட்டத்திற்காக தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, காசோலை பெற்று, முதல்வர் எம்.ஜி.ஆரிடம், அந்தக் காசோலையை கொடுக்கலாம். ஒரு வேளை, அதை அவர் வாங்க மறுத்தால், ஒரு முறை புயல் நிவாரண நிதிக்காக, தி.மு.க., திரட்டிய நிதியை தலைமைச் செயலராக இருந்த கார்த்திகேயனிடம் கொடுத்த போது, அவர் அதை நிராகரித்ததை, பெரிய அரசியலாக்கியதை போல், இதையும் மக்கள் முன்னால் வைத்து, பிரச்னை ஆக்கலாம்...' என்று நானும், அங்கிருந்த மற்றவர்களும் கூறினோம்.

'நல்ல கருத்து' என்று கூறிய கருணாநிதி, எங் களுக்கு விடை கொடுத்தார். சற்று நேரத்தில், வேறு சிலர் வந்திருந்தனர். அவர்கள் கருணாநிதியிடம் ஏதோ கூறி, அவர் மனதை மாற்றி விட்டனர். பின், கருணாநிதி, அத்திட்டத்தை பற்றி எங்களிடம் கேட்கவேயில்லை.

மாறாக, கழக சார்புடைய ஏடுகளிலெல்லாம், சத்துணவு திட்டத்தை குறை கூறுவது போல், 'சத்துணவில் பல்லி இருக்கிறது; பத்து மாணவர்கள் மயக்கம், சத்துணவை சாப்பிட்ட நூறு மாணவர்கள் வாந்தி...' என்று நையாண்டி செய்து, எழுத ஆரம்பித்தனர். இது போன்ற செயல், தி.மு.க.,வின் வெற்றிக்கு, பின்னடைவு ஏற்படுமென்று, அன்றே உணர்ந்தேன்.

அப்போது, நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை, தி.மு.க., இழந்தது. 'டிவி' முன் அமர்ந்து, தேர்தல் முடிவுகளை கருணாநிதி பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் அருகில், வாய் திறவாமல் அமர்ந்திருந்தேன். 'என்ன கலாநிதி... இப்படி ஆகிவிட்டது...' என்று, என்னிடம் சொன்ன போது, நான் பேசாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தேன். பின், அவரே, 'நீ சொன்னது சரியா போச்சு. இத்தனைக்கும் காரணம், சாப்பாடுதானா...' என்றார்.

— 'அரசியல் அனுபவங்கள்' நூலில், டாக்டர்.அ.கலாநிதி.

மாஜிஸ்திரேட், 'நாலு மாதம்' என்றார். 'நாலு மாதம்' என்று, லேடி டாக்டர் கூறுவது கேட்டு, மகிழும், ஆரணங்கு போலானேன். கடந்த,

1968-ல், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்தது. என் மீது, குற்றம் புரியும்படி தூண்டி விடுதல் மற்றும் உடந்தையாக இருத்தல், எனும் குற்றங்களுக்காக, வழக்கு நடைபெற்றது. அன்று, சென்னை கோர்ட்டில், 'நாலு மாதம் சிறை தண்டனை' என்று தீர்ப்பளிக்கப்பட்டதும், 'கொள்கைக்காக கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம், இவனுக்கு உண்டு என்று, இயக்கம் நினைக்கும்படி, நல்ல தீர்ப்பு அளித்து விட்டனர்.

பரீட்சையிலேயே தேறி விட்டோம் என்று எண்ணி, விவரிக்க இயலாத மகிழ்ச்சி என்னுள் ஏற்பட்டது. ஆனால், மகிழ்ச்சியை தொடர்ந்து, அனுபவிக்க முடியவில்லை; காரணம், வீட்டை விட்டு இந்தக் கூண்டுக்குள்ளே வந்து விட்டோம் என்ற கவலையில்லை; போட்டுக் கொள்ள, மூக்குப்பொடி இல்லை! என் முதல் சிறை அனுபவம், மூக்குப் பொடிக்காக அவஸ்தை பட வைத்தது...

— 'தம்பிக்கு கடிதங்கள்' நூலில் அண்ணாதுரை.

ந.பிச்சமூர்த்தியை தமிழ் இலக்கிய அன்பர்கள் அனைவரும் அறிந்திருந்தாலும், அவர் ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. அதைப் பற்றி அவரே சொல்கிறார்:

வ.ரா., கதை, வசனம் எழுதி, ராமானுஜர் என்ற, திரைப்படத்தை தயாரித்தார். சீதாலஷ்மி என்ற பெண்மணி அதற்கு நிதியுதவி செய்தார். வ.ரா., டைரக் ஷனில் அந்தப் படம் (பேசும் படம் அல்ல, மவுனப் படம்) உருவாயிற்று. நான் மற்றும் சங்கு சுப்பிரமணியம், வ.வே.சு.கிருஷ்ணமூர்த்தி, ஏ.நாராயணன் ஆகியோர் நடித்தோம். 'கும்பகோணத்து வக்கீல் பிச்சமூர்த்தி நடிக்கும்' என்று விளம்பரம் செய்தனர். எனக்கு ஆளவந்தார் வேடம்; படம் இரண்டு மூன்று வாரங்கள் ஓடியதாக நினைவு.

- 'தீபம்' நவம்பர், 1968 இதழில் ந.பிச்சமூர்த்தி அளித்த பேட்டியிலிருந்து.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us