PUBLISHED ON : மார் 09, 2014

வாரமலர் குற்றால டூர் நிகழ்ச்சிகள், எது எது எப்படி நடக்கணும்,எப்போது நடக்கணும் என்று, திட்டமிட்டு நடத்தி வந்தோம். ஆனால். 98-ம் வருடம். ஒரு சின்ன மாறுதலாகி விட்டது.
'நீங்க உங்க திட்டத்தை தூக்கி குற்றால அருவியில போடுங்க. பேசாம நாங்க நடத்துறத பார்வையாளரா பார்த்துகிட்டு, 'கம்'ன்னு வாங்க...' என்று குரலெழுப்பி, நம்மை அடக்கி வைத்த வாசகர்கள், அந்த வருடம் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அதற்கு முக்கிய காரணம், வாசகி புவனேசுவரி. தமிழ் ஆசிரியையான அவர், பட்டி மன்ற நடுவரும் கூட! பேச்சு கச்சேரிக்கு கேட்க வேண்டுமா...
பஸ் புறப்பட்ட உடனேயே எழுந்த அவர், 'பஸ்சுக்குள்ளாற தூங்குற பார்ட்டிக எல்லாம், கடைசி சீட்டுக்கு போங்க...' என்று, பஸ்சுக்குள் தூங்கும் வழக்கம் உள்ளவர்களை கிளப்பி விட்டார். கடைசி சீட்டுல உட்கார்ந்தாலும், பஸ் சீட் தூக்கி தூக்கி போடுறதுல சுத்தமா தூங்க முடியாது என்பது தெரியாமல், சிலர் அப்பாவித்தனமாய் எழுந்து, கடைசி சீட்டில் உட்கார்ந்தனர். டி. கல்லுப்பட்டி வருவதற்குள், 'கடைசி சீட்டு வேண்டாம்; நானும் பேசிக்கிட்டு வர்றேன். என் சீட்டை விடுங்க...' என்று கேட்டு, பழையபடி முன்சீட்டிற்கு வந்தனர்.
இப்படி தூக்கிப் போடும் பஸ்சில் போனது எல்லாம், 98-ம் வருட கதை. இப்போது எல்லாம், வால்வோ ஏசி பஸ்சில்தான் பயணம். எந்த சீட்டில் உட்கார்ந்தாலும், ரதம் போல பயணிக்கலாம். ஆனாலும், தூங்க முடியாது. ஏன் என்பதை, பின்பு சொல்கிறேன். இப்போது, 98ம் ஆண்டுக்கு வருவோம்.
'அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் என்று, உறவுகளை பிரிய முடியாமல், கையை பிடித்துக்கொண்டே, பஸ்சில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து இருப்போர் எல்லாம், மாறி மாறி உட்காருங்க; அப்பதான் புதிய உறவுகள் கிடைக்கும். உடன் வந்தவர் என்ன நினைப்பாரோ என்ற தயக்கம் இல்லாம, சந்தோஷமா பேசலாம்...' என்று, அடுத்த அடியை எடுத்து வைத்தார் நடுவர் புவனேசுவரி.
இதுதாண்டா சமயம் என்று, இந்த வாய்ப்புக்காக காத்திருந்திருந்தது போல, ஆளாளுக்கு கூடவந்தவர்கள் கையை உதறி, இருக்கைகள் மாறி, புதியவர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர்.
நடுத்தர வயதைத் தாண்டிய, புவனகிரி வாசகர், நவநீதகிருஷ்ணன், தன் மனைவி ஜெயலட்சுமியிடம், 'இப்படி சொல்லிட்டாங்களே ராசாத்தி; நான், உன்னை ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சதுல்லையே தங்கம். இப்ப எப்படி உன்னை பிரிஞ்சு, நான் வேற இடத்துல உட்காருவேன்...' என்று, பொய்யான சோகத்துடன், முக பாவத்தை மாற்றி சொல்லவும், 'ரொம்ப நடிக்காதய்யா... கர்ப்பமான ஏழாவது மாசம் தான் எல்லாரும் வளைகாப்பு நடத்தி, அம்மா வீட்டிற்கு அனுப்புவாங்க. நீ மூணாவது மாசமே என்னை அனுப்பிவச்ச ஆளுதானே! போ...போ...போய் தனியா உட்காரு...' என்று சொல்லவும், 'இதுக்கு நான் கடைசி சீட்ல உட்கார்ந்து வந்துருக்கலாம்...' என்று, சொல்லி, எழுந்து சென்றார்.
இப்படியான நகைச்சுவையான உரையாடல்களுக்கு நடுவே புவனேசுவரி, 'எனக்கு பிடிச்ச பாட்டு மற்றும் ஜோக்...' என்ற நிகழ்ச்சியை நடத்தி, எல்லாரையும் சந்தோஷ மூடுக்கு கொண்டு வந்தார். பஸ்சின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, பாடவும்,பேசவும் வைத்து விட்டார்.
மைக்கிற்கு சிக்காமல் வந்தவர் அந்துமணிதான். அவரிடம் ஒவ்வொரு முறை மைக் வரும்போதும், 'லலிதா பாட்டு நல்லா இருந்தது; இன்னொரு முறை பாடச் சொல்லுங்க...' என்றும், 'சுதாவோட உச்சரிப்பு பிரமாதம்; வேறோரு பாட்ட பாடச் சொல்லுங்க. கிறிஸ்டெல்லா வோட அந்த ஜிங்கிள்ஸ் நல்லா இருந்துச்சு; முழுசா பாடச்சொல்லுங்க...' என்று, அடுத்த வர்களை உற்சாகப்படுத்தி, களம் இறக்கி விட்டுக் கொண்டே இருந்தாரே தவிர, அவர் மைக்கை வாங்குவதை, சாதுரியமாக தவிர்த்தார்.
கடைசியில் வேறு வழியில்லா மல், மைக் பிடிக்க வேண்டி வந்த போது, 'நம்ம வெங்கடேசன் நல்லா பாடுவாரு; அவரு பாடுன பிறகு, நான் பாடுறேன்...' என்றார். அந்துமணி சொன்ன, 'நம்ம வெங்கடேசன்' யார் என்பது அதுவரை யாருக்கும் தெரியவில்லை. பஸ்சுக்குள் ஒருவரை ஒருவர், 'திருதிரு'வென பார்த்துக்கொண்டு இருக்கும் போது, 'நம்ம வெங்கடேசனை தெரியாதா? நம்மள, 'ஜம்மு'ன்னு வச்சு, பஸ்சை ஓட்டிட்டு போறாரே அவரு தான்...' என்றதும், எல்லாருக்கும் படு சந்தோஷம். அவ்வளவு நேரம் தன்னை டிரைவராகப் மட்டுமே பாவித்தவரை, 'நம்ம வெங்கடேசன்' என்ற பாச வார்த்தை, ரொம்பவே ஈர்த்து விட்டது.
ஓட்டுனர் வெங்கடேசன் கையில் மைக்கை கொடுத்ததும், 'வெலவெல'த்து போனார். 'நம்மளயும் டூருல ஒரு ஆளா கவுரவிச்சு பாடச் சொல்றாங்களே...' என்று நினைத்தவர், 'நான் எங்கேயும் பாடுனதில்ல; ஆனா, என் சந்தோஷத்தை வெளிப்படுத்த இப்ப பாடுறேன்...' என்றபடி, பஸ்சை ஓரங்கட்டிவிட்டு, 'ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான். அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்; என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்...' என்ற பாடலை அவர் அனுபவித்து பாடிய போது, மனது சிறகடித்தது.
அவர் பாடி முடித்து, பஸ்சை எடுத்த போது, அடுத்து பாடுவதாக சொன்ன அந்துமணியை வாசகர்கள் தேடிய போது, அவர் பஸ்சுக்குள் இல்லை.
குற்றாலமும்,கரடி அருவியும்!
குற்றாலத்தில் உள்ள புலியருவிக்கும், புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, கரடி அருவிக்கும், கரடிகளுக்கும் தொடர்பு உண்டு. குற்றாலத்தில் கரடி அருவி இருப்பது குறித்த தகவல், பலருக்கும் தெரியாது; தெரிந்தாலும், பயன் இல்லை.
காரணம், மெயினருவியில் இருந்து, ஐந்தருவிக்கு போகும் வழியில், மூலிகை தோட்டத்தை தாண்டி, மலைக்கு போகும் வனப்பாதை வழியாக சென்றால், இந்த கரடி அருவி வரும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி பகுதியில், கரடிகள் நடமாட்டம் உள்ளதால், இங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, அருவிக்கு போகும் வழி, இரும்பு முள்கம்பி வேலிகளால், தடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சாகச பிரியர்களும், சரக்கடிப் பாளர்களும் கரடியோடு குளிப்போம் என, முடிவு செய்து, வனத்துறையின் கண்ணில் மண்ணை தூவி, வேலியை தாண்டி, கரடு முரடான பாறை பாதையில் பயணித்து போய் குளிப்பர். கரடி அபாயம் ஒரு பக்கம் என்றால், வனத்துறையினரிடம் பிடிபட்டால், அபராதத்துடன், அவமானமும் கிடைக்கும்.
ஆகவே, வனவிலங்குகள் நலனிற்காக உள்ள கரடி அருவிக்கு, யாராவது குளிக்க கூப்பிட்டால், அருவிக்கு தானே அழைக்கின்றனர் என்று, தெரியாத்தனமாக போய் சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல், நீங்களும் உஷாராகி, உங்களைச் சேர்ந்தவர்களையும் உஷார்படுத்தவே, இந்த கரடி அருவி பற்றிய தகவல்.
— அருவி கொட்டும்.
-எல்.முருகராஜ்
