PUBLISHED ON : ஏப் 13, 2014

திராவிடர் கழக மாநாடு, 1945ல் திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டில், அரிஜனங்கள் கோவிலுக்குள் போகலாமா, வேண்டாமா என்பது பற்றி, ஒரு பட்டி மன்றம் நடந்தது.
பட்டுக்கோட்டை அழகிரி சாமியும், அண்ணாதுரையும், ஆளுக்கொரு குழுவின் தலை வராக இருந்து, அன்று பேசிய பேச்சுக்கள், மேடைப் பேச்சின் இலக்கணமாக அமைந்து விட்டன. அரிஜனங்கள் கோவிலுக்குள் போக அனுமதிக்க வேண்டும் என்பதை, வலியுறுத்துவது தான் மாநாட்டின் நோக்கம். அதை வெறும், இரண்டு வரிகளில் வெளியிட்டு இருக்கலாம். ஆனால், ஒரு பட்டிமன்றம் போல அமைத்து, வேண்டுமென்றே எதிர்வாதங்களையும் முன் வைத்து, மாநாட்டின் குறிக்கோளை, மக்கள் மத்தியில் எளிதாகப் பதியச் செய்த முறையை, அன்று பாராட்டாதவர்களே இல்லை.
அந்த மாநாட்டில் தான், இரண்டு மிக முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
திராவிடர் கழகத் தோழர்கள், கறுப்புச்சட்டை அணிய வேண்டும் என்பதும், பிராமணர் ஓட்டல்களில் சாப்பிடக்கூடாது என்பதுமே, அந்தத் தீர்மானங்கள். கறுப்புச் சட்டைத் தீர்மானம், ஒரு மனதாக நிறைவேறியது.
ஆனால், இன்னொரு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியவர்களில் முக்கியமானவர் அண்ணாதுரை. அவர், 'எந்த ரயில்வே ஸ்டேசனுக்குப் போனாலும், அங்கே பிராமணர் நடத்தும், உணவு விடுதிகள் தான் இருக்கின்றன. ரயிலில் நெடுந்தூரம் பயணம் போகிறவர்கள், இந்தத் தீர்மானத்தை செயல்படுத்துவதற்காக, பட்டினி கிடக்க முடியாது. அப்படித் தொண்டர்களையும், கழக உறுப்பினர்களையும் வற்புறுத்தக் கூடாது...' என்று வலியுறுத்தினார். விளைவு, அந்தத் தீர்மானம் நிறைவேறவில்லை.
— ராணி மைந்தன் எழுதிய, 'ராஜாராம்' நூலிலிருந்து.
புதுவையில் பாரதியார் முதலிய சுதேசிகள் மீது, போலீஸ் கட்டுப்பாடுகள், அதிகரித்து. மணியார்டர், கடிதங்கள் எல்லாம் தடுக்கப்பட்டன. புதுவையிலிருந்து, நாங்கள் எழுதும் கடிதங்கள், விழுப்புரத்தில் எரிக் கப்பட்டன. எரிக்கப்பட்ட விஷயம் கூட, எங்களுக்குத் தெரியாது. தபாலாபீசில் இருந்து, சில புண்ணிய புருஷர்கள் மூலம், ஒரு வாரத்துக்குப் பின் தான், விஷயம் அறிந்தோம்.
அந்தக் கஷ்ட காலத்தில், பாரதியார் வீட்டில், எப்படித் தான் குடும்பம் நடத்தினாரோ, எனக்கு தெரியாது.
'பாரதியார், இப்போது ஏன் பாட்டு எழுதுவதில்லை?' என்று, அடிக்கடி என் தந்தையைக் கேட்பேன். 'ஏதேனும் வேறு வேலை இருப்பதால், செய்யவில்லை போலும்...' என்பார் அவர்.
அப்புறம், ஒருநாள் நானும், என் தந்தையும் பாரதி வீட்டுக்கு சென்ற போது, மாடியில், அவர் பாடும் குரல் கேட்டது. மூன்று, நான்கு மாத இடைவெளிக்கு பின், முதல் முதலாக, தான் பாடிய பாடல் என்று கூறி, 'எங்ஙனம் சென்றிருந்தீர்?' என்ற, சரஸ்வதி ஸ்தோத்திரத்தை பாடிக் காட்டினார் பாரதி. அங்கே வந்த வா.வே.சு., ஐயர், பாட்டை பாராட்டினார்.
பின், பாரதியார், 'நமக்கு கடிதங்கள் கூட வருவதில்லை. ஊருக்காவது போகிறேன்... என்கிறாள் செல்லம்மா...' என்று, வருத்தத்தோடு சொல்லவே, 'இன்று சரஸ்வதி ஸ்தோத்திரம் செய்திருக்கிறீர். நாளைக்கு சுதேசமித்திரனிடமிருந்து காகிதம் வரும் பாரும்; பயமில்லை...' என்று, ஸ்ரீனிவாச ஐயங்கார் சொன்னார்.
அதன்படி, மறுநாளே, பாரதியாருக்கு சுதேசமித்திரனிடமிருந்து கட்டுரை அனுப்பும் படி, கடிதமும், மூன்று மாதங்களாக தடை பட்டிருந்த பணமும் வந்து சேர்ந்தன.
- யதுகிரி அம்மாள் எழுதியுள்ள, 'பாரதி நினைவுகள்' நூலிலிருந்து.
நடுத்தெரு நாராயணன்
