PUBLISHED ON : ஏப் 20, 2014

திரைப்பட கதாசிரியர் வசனகர்த்தா வே.லட்சுமணன், எம்.ஜி.ஆர்., மற்றும் கருணாநிதியுடன் தொடக்ககால சினிமா வாழ்விலிருந்து, அவர்களுடன் நெருங்கி பழகியவர். அவர், 'திரைப்பட நினைவுகள்' நூலில் எழுதுகிறார்:
தி.மு.க.,விலிருந்து, எம்.ஜி.ஆர்., 'திடுதிப்'பென்று நீக்கப்பட்டு விட்டார். தமிழகமே பரபரப்பாகி விட்டது. பூதாகரமான இப்பிரச்னையில் தலையிட்டு, என்னால் தீர்வு காண முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும், அசட்டுத் துணிச்சலுடன், கருணாநிதி வீட்டுக்குப் போனேன். அங்கே கொந்தளிப்பான சூழ்நிலை.
அமைச்சர்கள் பலர் வந்திருந்தனர்; மாடியில், அவர்களோடு கலந்து பேசிக் கொண்டிருந்தார் கருணாநிதி. அவரது உதவியாளர் என்னிடம், 'நீங்கள் அவரை நாளைக்கு சந்திக்கலாமே...' என்றார். ஒரு சிறு காகிதத்தில், 'மிகவும் முக்கியம்; மா.லட்சுமணன்' என எழுதி, 'இதை முதல்வரிடம் கொடுங்கள்; அவர் அழைத்தால் சந்திக்கிறேன்...' என்றேன். காகிதத்தைப் பார்த்தவுடன், என்னை உடனே அழைத்தார். எம்.ஜி.ஆர்., விஷயமாகத்தான் வந்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டார். 'அண்ணாதுரை அரும்பாடுபட்டு வளர்த்த கழகம் அழிவதா...' என்று கேட்டேன்.
'இதை எம்.ஜி.ஆரிடம் கேட்கலாமே! அவர், உங்களுக்கு வேண்டியவராயிற்றே...' என்றார் கருணாநிதி. 'கேட்கத்தான் போகிறேன் உங்களை முதலில் சந்திக்கத்தான் இங்கே வந்தேன்...' என்றேன்.
'எம்.ஜி.ஆர்., கூறும் குற்றச்சாட்டுகள், ஒரு தலைப்பட்சமானவை; ஆதாரமற்றவை. எந்த நிலையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்...' என்றார் கருணாநிதி.
'எம்.ஜி.ஆரைப் பார்த்து பேசி விட்டு, மீண்டும் உங்களிடம் வருகிறேன்...' என்று கூறி புறப்பட்டு விட்டேன். எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, கருணாநிதியை, சந்தித்த விவரத்தைச் சொன்னேன். 'சத்யா ஸ்டுடியோவில், நேற்று, இன்று, நாளை படப்பிடிப்பு இருக்கிறது. ௧௦:௦௦ மணி அளவில் அங்கே வாருங்கள்...' என்றார்; ஸ்டுடியாவுக்குப் போனேன்.
மேக்கப் ரூமிற்குள் சென்றேன்; மேக்கப்மேனை வெளியே அனுப்பிவிட்டு, கதவைத் தாழிட்ட
எம்.ஜி.ஆர்., பின் என்னிடம், 'என் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையில், ஆளும் கட்சிக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், இல்லை என்கின்றனர்.
'மதுரை மாநாட்டில் நான் ஒதுக்கப்பட்டேன்; புறக்கணிக்கப்பட்டேன். ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்திருந்தேன். அவர் மேஜரில்லை; மைனர் ஒப்பந்தம் செல்லாது என பிரித்த செயல் யாருடையது...' என்றெல்லாம் கேட்டு, ௫௦ நிமிடம், தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்தார்.
'திரையுலகில் நீங்கள் சக்கரவர்த்தி. உங்களுக்கு அமைச்சர் பதவி தேவைதானா... அரசியல் பதவி உங்கள் உடல் நலத்தைக் கெடுத்து விடும். கருணாநிதியும் நீங்களும் சந்தித்துப் பேசினால், பிரச்னை தீர்ந்து விடும்...' என்றேன்.
'சந்திக்கும் கட்டத்தை நாங்கள் தாண்டி விட்டோம். நீ வேண்டுமானால், கருணாநிதியை சந்தித்துப் பேசு...' என்றார்.
அதன் பின், எம்.ஜி.ஆர்., தனிக்கட்சி துவங்கி ஆட்சியைப் பிடித்தார். அவரை சந்திக்க போனேன்.
அங்கிருந்த எஸ்.டி. சோமசுந்தரம், நாஞ்சில் மனோகரனிடம், 'இவர் கருணாநிதிக்கு ரொம்ப வேண்டியவர்...' என்று கூறி அறிமுகப் படுத்தினார். பின், ஒருமுறை கருணாநிதியை சந்திக்க போனேன். 'உங்கள் எம்.ஜி.ஆர்., எப்படியிருக்கிறார்?' என்று கேட்டார். என் நிலையை நொந்து கொண்டேன்.
பதினெட்டாம் நூற்றாண்டில், இந்தியாவெங்கும் அடிமை முறை இருந்தது. தமிழகத்தில் வாழ வகையற்ற மக்கள், தம்மை கோவிலுக்கு, அடிமையாக விற்றுவிடும் வழக்கம் ஒருபுறம் இருக்க, வரி கொடுக்க முடியாத விவசாயிகளின் மனைவியரை பிடித்து, ஏலம் போட்டு வந்தனர் மாகாண கவர்னர்கள்.
அடிமைகளை இங்கிருந்து வாங்கி, வங்காளத்திற்குக் கொண்டு சென்று, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். சூரத், சென்னை, மசூலிபட்டிணம் ஆகிய மூன்று இடங்களிலிருந்து, ஆங்கில மற்றும் டச்சு வணிகர்கள், அடிமைகளை ஏற்றுமதி செய்து வந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனி, கொள்ளைக்காரர்களைப் பிடித்து தண்டித்து, அவர்களை அடிமையாக விற்கலாம் என்று, ௧௭௭௨ல் சட்டம் இயற்றியது.
— ப.சிவனடி எழுதிய,'இந்திய சரித்திரக் களஞ்சியம்' நூலிலிருந்து.
நடுத்தெரு நாராயணன்
