தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூன் 01, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்போது பிரபலமாக இருந்தார். அவர் தன் மகனை

பள்ளியில் சேர்க்கும் தினத்தை, ஒரு விழாவாகக் கொண்டாடினார். ஊரை அடைத்துப் பந்தல் போட்டு, ஆயிரம் பேருக்கு விருந்து பரிமாறி, பாகவதரின் பாட்டுக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

மகாலிங்கத்திடம் இருந்த அன்பின் காரணமாக, பாகவதர் பணம் எதுவும் கேட்காமல், இலவசமாகத்தான் கச்சேரி செய்தார். ஆனால், பாகவதர் அன்று பாட்டுக் கச்சேரி செய்ததற்கு, தன் அன்பின் அடையாளமாக, ஒரு கவரில், 1,000 ரூபாய் வைத்து, பாகவதரிடம் கொடுத்தார் மகாலிங்கம்.

புறப்படும்போது பாகவதர், அந்தக் கவரில் இருந்த பணத்துடன், மேலும் ஒரு ரூபாய் வைத்து, மகாலிங்கத்தின் புதல்வன் கையில் கொடுத்து விட்டுச் சென்றார்.

— 'எம்.கே.தியாகராஜ பாகவதர்' அனுராகம் வெளியீடு.

வை.மு.கோதை நாயகி, தமிழில், 115 நாவல்கள் எழுதிய பெண் எழுத்தாளர். அவர் மறைவுக்குப் பின், அவரைப் பற்றி நினைவு கூர்ந்து, பேட்டி அளித்தார், அவரது கணவர் பார்த்தசாரதி. அதில் கூறியது: நாங்கள் தெலுங்குக் குடும்பம், கோதைக்கு தமிழ் எழுதவே தெரியாது. இதே திருவல்லிக்கேணி தேரடி தெருவில், ஒரு பெண்மணி, என் மனைவியின் கதைகளை கேட்டு சந்தோஷப்பட்டு, 'உனக்கு தமிழ் எழுத கற்றுக் கொடுக்கிறேன்...' என்று, ஆரம்பித்து வைத்தார். பின், நானும் கோதைக்கு, தமிழ் சொல்லிக் கொடுத்து, 'இம்ப்ரூவ்' செய்தேன்.

கடந்த, 1922ல் நானும், கோதையும் அடிக்கடி நாடகங்கள் பார்க்க செல்வதுண்டு. இப்போதுள்ள ஸ்டார் டாக்கீஸ் அருகில், அப்போது ஒரு நாடகக் கொட்டகை இருந்தது. சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியாது. பெண்களுக்கு தனி இடம்; கோதைக்கு யாருடனும் சுலபமாகப் பேசி, சிநேகிதம் பிடித்துக் கொள்ளும் சுபாவம்.

கதிர்வேலு முதலியார் என்ற கனவான், தன் மனைவி, மைத்துனியுடனும் நாடகங்களுக்கு வருவார்.

கதிர்வேலு முதலியார், 'நோபிள் பிரஸ்' என்ற அச்சகம் வைத்திருந்தார். அவர் மனைவிக்கு கோதையை மிகவும் பிடித்து விட்டது. இவளுடைய கதாசுவாரசி யத்தைத் தூண்டி, ஒரு புத்தகம் எழுதிக் கொடுக்க கூறினார். 'இந்திர மோகனா' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தாள், கோதை. இது, 1923ல் புத்தகமாக வெளிவந்தது. அதைப் படித்துவிட்டு, அப்போது பிரபலமாக விளங்கிய, நாவலாசிரியர் வடுவூர் துரைசாமி அய்யங்கார், நேராகவே வந்து பாராட்டினார்.

தாம் நடத்தி வந்த, 'ஜகன் மோகினி' என்கிற மாதப் பத்திரிகையை, நாங்கள் வாங்கி தொடர்ந்து நடத்தி, அதன் தொடர்ச்சியாக, நாவல்களை வெளியிடலாமே என்று யோசனையும் கூறினார். அதன்படியே, பத்திரிகையையும் ஆரம்பித்து, 48 பக்கங்களுக்கு மேலாகவே, மாதா மாதம் தொடர்ந்து வெளிடத் துவங்கினோம். 'வைதேகி' என்ற நாவல்தான், முதல் வெளியீடு. பின், 'பத்ம சுந்தரம்' என்ற நாவல்; பத்திரிகையின் விலை இரண்டணா.

'வைதேகி' கதையைப் பற்றிய விமர்சனம், அப்போது சுதேச மித்திரனில் வெளிவந்தது. கல்கத்தா பிரமுகர் வாசுதேவ அய்யர் என்பவரும், அவர் மனைவி தைலம்மாளும், சொந்த ஊராகிய ஸ்ரீரங்கத்திற்கு வந்தபோது, ஒரு கடையில் ஏதோ சாமான் வாங்கினார்களாம். விமர்சனம் வெளிவந்திருந்த பேப்பரில், சாமானை சுற்றிக் கொடுத்திருந்தனர். அந்தப் பேப்பரில் இருந்த விமர்சனத்தைப் படித்து, 'ஒரு பெண்பிள்ளை இவ்வளவு உயர்வாக நாவல் எழுதியிருக்கிறாரா...' என்று வியந்து, நாவலை வாங்கிப் படித்திருக்கின்றனர். 'ஜகன் மோகினி' பத்திரிகையில், மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. ஆயிரம் பேரிடம் சந்தா வசூலித்துக் கொடுத்தனர்.

கண்ணதாசன் தி.மு.க.,விலிருந்து பிரிந்து, ஈ.வெ.கி.சம்பத்துடன், தமிழ் தேசியக் கட்சி துவங்கியபோது, தன், 'தென்றல்' பத்திரிகையில், 'வனவாசம்' என்ற தலைப்பில், தன்னுடைய சுயசரிதையை எழுதி வந்தார். அவர் கூறக் கூற, பாரதி வசந்தன் என்ற துணையாசிரியர் அதை எழுதினார்.

விழுப்புரம் அருகில், ஒரு பொதுக்கூட்டம்; அதில் மேடை ஏறிய கண்ணதாசன், கருணாநிதியை, ஒரு மணிநேரம், படுபயங்கரமாக விமர்சித்து விட்டு, களைப்போடு வந்து காரில் ஏறினார். கார் புறப்பட்டது; காருக்குள் இருந்த பாரதி வசந்தனிடம், 'ஏன் தம்பி, இன்று புதன் கிழமை தானே... இன்று தானே, நாம், வனவாசம் எழுத வேண்டும்...' என்றார்.

'ஆமாம்...'

'இந்த வாரம் எதிலிருந்து துவங்க வேண்டும்?'

'கருணாநிதியுடனான உங்கள் முதல் சந்திப்பு பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தீர்கள்...'

இதன் பின் கவிஞர், 20 நிமிடம் எதுவுமே பேசாமல் மவுனமாக வந்தார். எப்போதும், ஏதேனும், ஒரு புதிய படைப்பைத் துவங்கும்போது, அவரிடம் இப்படி ஒரு மவுனம்

ஏற்படுவது வழக்கம். 20 நிமிடங்களுக்குப் பின், கண்ணதாசனே ஆரம்பித்தார்...

'எவ்வளவு அருமையான நாட்கள் அவை! சேலம் மாடர்ன் தியேட்டரில், அவரை முதன் முதலா சந்திக்கப் போகிறேன் என்று அறிந்தவுடனே, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அவரது தமிழின் மீது, எனக்கு அவ்வளவு மோகம். காரணம், அவரை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே, அவர் வசனம் எழுதிய, அபிமன்யு படத்தைப் பார்த்தேன். நான் சினிமா ஸ்டுடியோவில் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த பின் தான், அபிமன்யுவிற்கு வசனம் எழுதியவர் கருணாநிதி என்றும், படத்தின் டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி, அந்த வசனங்களை தன் பெயரில் போட்டுக் கொண்டார் என்றும் அறிந்தேன். அபிமன்யு படத்தைப் பார்த்து, அதன் வசனங்களில் மனதைப் பறிகொடுத்து விட்டேன்...'

— இப்படிக் கூறி, கவிஞர் இடையில் நிறுத்தி, சிறிது யோசித்தவர், பின், 'அப்படத்தில் அவர் எழுதிய, 'கண்ணன் செய்த சூழ்ச்சி, அண்ணனுக்குத் தெரியவில்லை மற்றும் உடைத்த வாளாயினும் ஒரு வாள் கொடுங்கள்' - இப்படி எவ்வளவு வேகமான, விறுவிறுப்பான வசனங்கள் தெரியுமா?

'கருணாநிதி மாடர்ன் தியேட்டருக்கு வரப் போகிறார் என்று கூறினர். நான் அவரை சந்திக்க, துடிதுடிப்போடு இருந்தேன். ஆர்வம் ஒரு பக்கம்; அச்சம் ஒரு பக்கம். நேரில் பார்த்த போது, அவர் தான், என் கூச்சத்தைப் போக்கி, மிகுந்த வாஞ்சையுடன் பழகினார். அன்று துவங்கிய நட்பு, அதற்குப் பின், பல ஆண்டுகள் வரை தொடர்ந்தது. அவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே நான் இருப்பேன். அவர் மீது, எனக்கு அப்படி ஒரு போதை. அவர் தான், எனக்கு கிருஷ்ணன்

பஞ்சுவிடம் சிபாரிசு செய்து, பராசக்தி படத்தில், ஒரு காட்சியில் நடிக்கவும் வாய்ப்பு வாங்கித் தந்தார்...' என்று கூறி, பெருமூச்சு விட்டார் கண்ணதாசன். பின், தன் பாணியில், கருணாநிதியை தாக்கி எழுத ஆரம்பித்து விட்டார்.

— பாரதி வசந்தன் எழுதிய கட்டுரையிலிருந்து.

திராவிடர் கழக கட்டட நிதிக்காக, காஞ்சிபுரத்தில், அண்ணாதுரை தலைமையில், ஒரு இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தண்டபாணி தேசிகர், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரின், இசை நிகழ்ச்சி. அதற்கு அடுத்த நாள், சாட்டியக்குடி மீனாட்சி சுந்தரத்தம்மாளின் இசை நிகழ்ச்சி. பந்தலின் சற்று தொலைவில், தன் நண்பர்கள் சிலருடன் அமர்ந்திருந்தார் அண்ணாதுரை.

அந்தப் பெண்மணி, 'முருகன் என்றதுமே, அந்த ஒரு சொல்லில் மோகம் பிறக்குதே...' என்று, பாடத் துவங்கினார்.

'ஏம்மா... மோகமா பிறக்குது?' என்றார், முணுமுணுத்த குரலில், அண்ணாதுரை.

'அருகில் வாரானோ...' என்று, அடுத்த அடியைப் பாடுகிறார் பாடகி.

'ஏன் வரப் போகிறான்...' என்றார் மெல்லிய குரலில், அண்ணாதுரை. பின் வருத்தத்துடன், 'காமன்சென்ஸ்' வேண்டும்; இந்தப் பெண்மணி இம்மாதிரிப் பாடல்களைப் பாடினால், சபையோர் என்ன எண்ணுவர்...' என்றார். காரணம், அப்போது அந்த அம்மையாருக்கு, ஐம்பது வயதுக்கும் மேலிருக்கும். அண்ணாதுரை தொடர்ந்து...

'அதேபோல், நாடக நடிகர் ஒருவர், சம்பூர்ண ராமாயண நாடகத்தில், ராவணன் வேடத்தில் நடிப்பார். அவர் தியாகராஜ கீர்த்தனை பாடுவதில் வல்லவர். காஞ்சிபுரம் பகுதியில் பிரசித்தமானவர்.

ராமாயண நாடகத்தில் அவர், ராவணன் வேடத்தில் வந்து நிற்கும்போது, அவரை தியாகராஜ கீர்த்தனை பாடுமாறு, மக்கள் குரல் கொடுப்பர். அவர் உடனே, 'ராமா நன்னு புரவரா...' என்னும் கீர்த்தனையில் பாடுவாராம். அந்தக் கீர்த்தனையின் பொருள், 'ராமா, என்னைக் காப்பாற்று' என்பதாகும்.

'ராவணன் வேடத்தில் நடிப்பவர், 'ராமா, என்னைக் காப்பாற்று' என்று பாடுவது, எப்படிப் பொருந்தும்? 'காமன்சென்ஸ்' வேண்டும்...' என்று அருகிலிருந்தவர்களிடம் குறைபட்டுக் கொண்டார் அண்ணாதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us