தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூன் 15, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேராசிரியர் க.ப.அறவாணன் சொல்கிறார்: ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்கள், இந்தியாவுக்கு வந்ததன் நோக்கம் வியாபாரத்துக்காக அல்ல. நாடு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான். அதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

கி.பி.,1498ல் கேரளாவில், கோழிக்கோடு என்ற இடத்தை வந்தடைந்த வாஸ் கோடகாமா, ஒரு வியாபாரி அல்ல; அவன் ஒரு கப்பல் படை கேப்டன். அவனை அனுப்பியது வியாபாரக் கம்பெனி அல்ல; போர்ச்சுகல் மன்னர். கோழிக்கோட்டை காமா வந்தடைந்த போது, அங்குள்ள நம்பூதிரிகள் மற்றும் உள்ளூர் ஜமீன்தார்களாலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட, இதே கால கட்டத்திலும் இதற்குப் பின்னும் டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் ஆசியாவில் பிறிதொரு நாட்டில் வியாபாரம் செய்யவும், மதப்பிரசாரம் செய்யவும் அனுமதி கேட்ட போது, அனுமதி மறுக்கப்பட்டது. காரணம், ஐரோப்பியரின் நோக்கம் வியாபாரம் மற்றும் மதம் மட்டுமின்றி, அரசியலே என்று அந்நாட்டு அரசர் ஊகித்து, அனுமதி அளிக்க மறுத்தார். மறுத்தவர், ஜப்பானிய அரசர்.

டச்சு, மற்றும் ஆங்கிலக் கம்பெனிகள், வெறும் தனியார் வியாபாரக் கம்பெனிகளாக மட்டும் இயங்கவில்லை. தத்தம் அரசுகளின் ஒப்புதல் பெற்ற ஏஜன்சிகளாகவே இயங்கின. கம்பெனிகளுக்கு இடையே நடந்த பூசல்களும், போர்களும் வெறும் இந்திய வியாபாரக் கம்பெனிகளின் தகராறு என்று கருதப்படவில்லை. அவை, அந்தந்த நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களாகவே கருதப்பட்டன. கம்பெனிகளுக்கு இடையே நடந்த பூசல், ஐரோப்பிய மண்ணில் எதிரொலித்தது. ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த போர்கள், இந்திய மண்ணில் அதிகார பூர்வமாக எதிரொலித்தது.

ஐரோப்பாவில் தொழிற்புரட்சி வருவதற்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே, (கி.பி.,15ம் நூற்றாண்டு) ஐரோப்பிய, இந்திய கடல் உறவு துவங்கி, நிலைபெற்று விட்டது. அப்போது, அபினும், சாயப்பொருட்களும் மட்டுமே, இந்தியாவிலிருந்து வாங்கப்பட்டன. இது மிகச் சிறிய அளவிலான வியாபாரம். இந்தச் சிறிய அளவிற்குப் பின், பெரிய அரசியல் மறைந்து கொண்டிருந்தது.

லண்டன் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சிரில் பிலிப்ஸ் என்பவர் சென்னை வந்தபோது, பிரிட்டிஷ் கவுன்சிலில், மேற்கூறிய கருத்தை வலியுறுத்தி, உரை நிகழ்த்தினார்.

— இந்து, 20.1.84 நாளிதழிலிருந்து.

கடந்த, 1951ல், ஐதராபாத்தில் சிவராம்பள்ளி என்ற கிராமத்தில், சர்வோதய சம்மேளனம் ஒன்றில் கலந்து கொள்ள வினோபா, அந்த ஆண்டு மார்ச், 8ம் தேதி, ஆசிரமத்திலிருந்து கால்நடையாகவே புறப்பட்டு, ஏப்ரல் ஏழாம் நாள், 300 மைல் தூரம் பயணம் செய்து வந்து சேர்ந்தார். சிவராம் பள்ளியிலிருந்து திரும்பும் போது, போச்சம்பள்ளி என்ற கிராமத்தில் வினோபா தங்கினார். அன்று வழக்கம்போல், பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தது. ஏழை விவசாயிகள், அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'உழைத்துப் பிழைக்க மனமிருந்தும், சொந்த நிலமில்லாத காரணத்தால், பிழைக்க வழி இல்லை...' என்று கூறினர்.

வினோபா யோசித்தார். அன்று மாலைக் கூட்டத்தில், 'இந்த உழைப்பாளி மக்களின் கஷ்டம் தீர வழி சொல்லக் கூடியவர்கள், யாராவது இந்தக் கூட்டத்தில் உண்டா...' என்று கேட்டார்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த, ராமசந்திர ரெட்டி என்ற நில உரிமையாளர், சட்டென எழுந்தார். 'என்னுடைய நிலத்தில் நூறு ஏக்கரை உடனடியாகத் தருகிறேன்...' என்று, அறிவித்தார். அந்த நூறு ஏக்கர் நிலம், விவசாயிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அன்று தான், வினோபாவின், 'பூமி தான இயக்கம்' உருவானது.

—'பூமிதான இயக்கம்' தோன்றியது எப்படி? நூலிலிருந்து.

நடுத்தெரு நாராயணன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us