PUBLISHED ON : ஆக 24, 2014

சுதேசமித்திரன் 23.2.1887 இதழிலிருந்து:
தமிழில் வெளிவந்த முதல் நாளிதழ் சுதேசமித்திரன்; இது, 1882ல் துவங்கப்பட்டது. இப்போது போல் அன்றைய நாளில் பத்திரிகைகளை கடைகளில் விற்க மாட்டார்கள். சந்தா அனுப்பினால் வீட்டுக்கு அனுப்பப்படும் அல்லது ரயில் நிலையங்களில் பத்திரிகைகளை கூவி விற்பர். சந்தாதாரர்களை, கையொப்பக்காரர்கள் என்று பத்திரிகைகள் குறிப்பிடும்.
கடந்த, 1887ல் சுதேச மித்திரன் (மித்திரன் என்றால் நண்பன் எனப்பொருள்) இதழில், 'கையொப்பக்காரருக்கு அறிக்கை' என்ற தலைப்பில் ஒரு செய்தி: நம் கையொப்பக் காரர்கள், தம்மேல் தயை வைத்து, தங்களுக்கு வேண்டியவைகளை வாங்கி அனுப்பும்படி நமக்கு மணி ஆர்டர் அனுப்பி விடுகின்றனர். இப்படியெல்லாம் அவர்களுக்கு வேண்டியவைகளை வாங்கியனுப்புவது அசாத்தியமான வேலை.
பற்பொடி வேணுமென்றும், பஞ்சாங்கம் வேணுமென்றும், தலைக்கு எண்ணெய் வேணு மென்றும் கையொப்பக்காரர்கள் எழுதினால், நாம் எப்படி அந்த வேலைகளை செய்து முடிக்க இயலும்?
பத்திரிகை விஷயமாக என்ன அனுப்பினாலும், அவைகளை செய்து முடிப்பது நம் வேலையேயன்றி, ஊர் வேலைகளை எங்களால் செய்ய முடியாது.
அதனால், நமக்கு வீண் தொந்தரவு கொடுக்காமலிருக்கும்படி, நம் கையொப்பக்காரர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
பிரபல எழுத்தாளர் வ.ரா., (வ.ராமசாமி) எழுதுகிறார்: கடந்த, 1904ல் சென்னைக்கு வந்த பாரதியார், சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். சம்பளம் குறைவு; வேலை அதிகம்.
'பாரதி... நீ அருமையா தமிழ் எழுதுறே, உனக்கு அட்சர லட்சம் கொடுக்கலாம். நீ காளிதாசன் தான்; ஆனால், நான் போஜராஜன் இல்லையே! உனக்கு ஏற்ற சன்மானம் செய்ய என்னிடம் பணமில்லையே...' என்று சுதேசமித்திரன் ஆசிரியரும், உரிமையாளருமான ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியாரிடம் சொல்வாராம்.
'நயமாய் என்னை ஏய்த்து வேலை வாங்குவதில் அய்யர் (சுப்பிரமணிய ஐயர்) பெரிய கொம்பன் என்றாலும், பத்திரிகைத் தொழிலில் எனக்கு பழக்கமும், தேர்ச்சியும் வரும்படி செய்தது அவர்தான். அவரை நான் ஒரு வகையில் குருவாக மதிக்கிறேன்...' என்பார் பாரதியார்.
இந்த நிகழ்ச்சியை, பாரதியார் என்னிடம் சொன்னது போலவே சொல்லி விடுகிறேன்...
'சாயங்காலம் சுதேசமித்திரன் ஆபீசிலிருந்து, வீட்டுக்கு போகலாமென்று யோசித்து உட்கார்ந்திருப்பேன். பணமுடையால் அய்யரிடம் பணம் கேட்கலாமா, வேண்டாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிற சமயத்தில், 'அய்யர் உங்களுக்கு கொடுக்கச் சொன்னார்...' என்று, ஒருவன் திடீரென்று, காபி கொண்டு வந்து கொடுப்பான். அவருடைய அன்பை நினைத்து ஆனந்தப்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில், அய்யர் வருவார்; அவரிடம் பணம் கேட்க வேண்டும் என்ற நினைப்பே போய்விடும். ஆனால், அவரோ, 'பாரதி... சர் ஹென்றி காட்டன் இந்தியாவைப் பற்றி சீமையிலே உருக்கமாக பேசியிருக்கிறாரே... அதைப் பார்த்தாயோ?' என்பார்.
'ஆமாம் பார்த்தேன்; நன்றாகப் பேசியிருக்கிறார்...' என்பேன்.
'அதை நாளைக்கே நம் பத்திரிகையில் வெளியிட வேண்டாமா...' என்பார்.
'கட்டாயம் வெளியிட வேண்டும்...' என்பேன்.
'அந்தப் பிரசங்கத்தின் ரசம் கெடாமல், தமிழில் மொழி பெயர்க்க உன்னைத் தவிர யாரால் முடியும்...' என்பார்; நான் பேசாமல் நிற்பேன்.
'அதை நீ ஆபீசிலிருந்து மொழிபெயர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை; வீட்டுக்கு எடுத்துப் போய், நகல் எடுத்து, நாளை காலையில் அலுவலகம் வரும் போது கொண்டு வந்தால் போதும். வீட்டிலே, விளையாட்டு போலே மொழி பெயர்த்து விடலாம்; அரை மணி நேரங் கூட ஆகாது உனக்கு...' என்பார் அய்யர்.
'அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போவேன்; எனக்கு ஆபீசிலே மட்டும்தான் வேலையா... தாலுகா கச்சேரி குமாஸ்தாவைப் போல வீட்டிலேயும் வேலை!
'அய்யர் அன்பைக் கொண்டு ஏய்த்தது உண்மை என்றாலும், இந்த மொழிபெயர்ப்பு வேலை எனக்கு எவ்வளவு ஒத்தாசை செய்தது தெரியுமா? இங்கிலீஷின் கருத்து சிதைந்து போகாமல், தமிழர்களுக்கு, அதை சுவாரசியமாகச் சொல்லும் பொருட்டு, நேரான தமிழ்ச் சொற்களை நான் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. அப்போது எனக்கு தமிழ் மொழியின் கம்பீரமும், ரசமும் இன்னும் தெளிவாய்த் தெரிந்தது...' என்றார்
பாரதியார்.
நடுத்தெரு நாராயணன்
