தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 12, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வீரன் அலெக்சாண்டர்' நூலில்: உலகின் பெரும்பகுதியை வெற்றி கொண்டு, அப்படியே இந்தியாவுக்குள் நுழைந்தார் அலெக்சாண்டர். பஞ்சாப்பிற் குள் வந்தபோது, அவரும், அவர் படையினரும் கடந்து வந்த தூரம், 12 ஆயிரம் மைல்கள். இதற்கு ஆன காலம், எட்டு ஆண்டுகள்! மலைகளோடு உலகம் முடிந்துவிட்டதாக அலெக்சாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் சொல்லியிருந்தார். பஞ்சாப்பிற்கு வந்து பார்த்ததில், அதற்கு மேலும் உலகம் வியாபித்திருப்பது தெரிந்தது. அந்த உலகத்தையும் அலெக்சாண்டர் வெற்றி கொள்ள நினைத்தார்.

ஆனால், ஜீலம் நதிக்கரையில் அவரது தளபதிகளும், சிப்பாய்களும் மேற்கொண்டு பயணம் நடத்த மறுத்து, அமர்ந்து விட்டனர். காரணம், பஞ்சாபின் சீதோஷண நிலைதான். மூன்று மாதங்கள் தொடர்ந்து பெருமழை கொட்டியது. ஆயுதங்கள் துருப்பிடித்தன; ராணுவ முகாமிற்குள் விஷப் பாம்புகள் வட்டமிட்டன. வீரர்கள் மனம் சோர்ந்து போனதில் வியப்பில்லை.

ஆனால், அலெக்சாண்டர் மன உறுதியோடு, 'நானே தனியாக என் பயணத்தை தொடர்கிறேன்; வேண்டுமானால், நீங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்று, உங்கள் தலைவனை, எதிரிகளிடத்தில் தனியாக விட்டு வந்த செய்தியைக் கூறுங்கள்...' என்றார்.

தளபதிகளும், சிப்பாய்களும் மவுனமாயினர். ஆனால், அடுத்த சில நாட்களில் அலெக்சாண்டர் மனம் மாறினார். வீரர்களை கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தினால், அவர்கள் உறுதியுடன் போரிட மாட்டார்கள்; வெற்றி கிடைப்பதும் கடினம் எனப் புரிந்து கொண்டவர், 'வீரர்களே... ஜோசியர்களிடம் கேட்டேன்... இப்போது கிரக நிலைகள் நமக்கு சாதகமாக இல்லை என்று கூறி விட்டனர். அதனால் நாம் நாடு திரும்புவோம்...' என்று பொய் சமாதானம் கூறி, எல்லாரையும் அழைத்துக் கொண்டு திரும்பிவிட்டார்.

ஜோசியம் பொய்யாக இருக்கலாம்; ஆனால், பல சமயங்களில், சிலருக்கு அது பயனுள்ளதாக இருக்கிறது.

'தஞ்சை - ஓர் அற்புத புதையல்' என்ற நூலிலிருந்து: இந்தியாவிலேயே மிகத் தொன்மை வாய்ந்த நூலகம், தமிழகத்தில் தஞ்சாவூரில் இருக்கும் சரஸ்வதி மகால் நூலகம் தான். தஞ்சாவூரிலேயே பிறந்து வளர்ந்தவர்களில் பலர், இந்நூலகத்திற்குள் நுழைந்திருக்க மாட்டார்கள். கி.பி., 1884ல் ஜெர்மானிய அறிஞர், ஏ.சி.பர்னல் என்பவர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள நூல்களைப் பற்றி லண்டன் பத்திரிகைகளில் விலாவாரியாக எழுதினார். அதன்பின், வெளிநாட்டவரும் வந்து பார்த்து, இதை பிரபலப்படுத்தி விட்டனர். தற்போது, மத்திய அரசின் தொல்பொருள் துறை நிர்வகிக்கிறது.

நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைகள் அத்தனையும் உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான நூல்கள் இங்குள்ளன. கையெழுத்துப் பிரதிகளாகவும், ஏட்டுச் சுவடிகளாகவும் இங்குள்ள நூல்களின் எண்ணிக்கை, 40 ஆயிரம். சமஸ்கிருத நூல்கள், 30 ஆயிரம். மராட்டிய மொழியில், 5,000 (இந்நூலகத்தை அமைத்த சரபோஜி மன்னர் மராட்டியக்காரர்.) தெலுங்கில், 2,000. லத்தீன், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மனி மற்றும் கிரேக்க மொழிகளில், 500.

கி.பி., 9ம் நூற்றாண்டு முதல் உள்ள ஏட்டுச் சுவடிகள் இங்குள்ளன.

இதுவரை, 200 சுவடிகளை, நூல்களாக பதிப்பித்து, வெளியிட்டுள்ளனர். இலக்கிய நூல்கள், வைத்திய சாஸ்திர, இசைக்கலை நூல்கள் மட்டுமல்லாது, அலங்காரக் கலை மற்றும் கோலாட்டக் கலை பற்றியெல்லாம் கூட இங்கே சுவடிகள் உள்ளன.

ஜார்ஜ் சிமின் என்பவர், ஒரு பிரஞ்சு எழுத்தாளர். எந்த நாவலையும் படுவேகமாக எழுதி முடித்து விடும் அசுர எழுத்தாளர். இவர் தன், 158வது மர்ம நாவலை எழுதிக் கொண்டிருந்த போது, திகில் பட மன்னன் ஹிட்ச்காக் அவருடன் பேச விரும்பி, அமெரிக்காவிலிருந்து போன் செய்தார். போனை எடுத்த சிமின் மனைவி, 'அவர் மும்முரமாய் எழுதிக் கொண்டிருக்கிறாரே..' என்றார்.

'பரவாயில்லை. அவர் புத்தகத்தை எழுதி முடிக்கட்டும்; நான் லைனிலேயே இருக்கிறேன்...' என்றாராம், ஹிட்ச்காக்!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us