தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம், 'ஜட்ஜை' நீதிபதி என்கிறோம். ஆனால், 'கோர்ட்'டை நீதிமன்றம் என்று தமிழில் குறிப்பிட்டு பேசுவதற்கு கூச்சப்பட்டு, 'கோர்ட்' என்றே குறிப்பிடுகிறோம். எத்தனையோ ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ் சொல் தெரிந்திருந்தும், நடைமுறைப் பேச்சு வழக்கில் அதைப் பயன்படுத்த கூச்சப்படுகிறோம். இதுபற்றி ராஜாஜி சொல்கிறார்:

அறிவையும், நினைவையும் செலவழித்து தமிழ் சொற்களைத் தேடி உபயோகிப்பதற்குப் பதில், எளிதில் கிடைக்கக் கூடிய ஆங்கில மொழியில் உள்ள அதாவது, பிற தேசத்தார் கஷ்டப்பட்டு தங்களுக்கென்று உண்டாக்கியிருக்கும் மொழிகளை, எவ்வித கூச்சமுமின்றி இடை இடையே கலந்து பேசி தமிழுக்கு சோறு போடாமல் கொல்கிறோம். சோம்பேறிகளைப் பெற்ற தாயைப் போல், தமிழ் அவதிப்பட்டு வருகிறது. அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்? கொஞ்சம் தடை தோன்றிய இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தைப் போட்டு நிரப்பி பேச்சை ஓட்டிக் கொண்டு போனால், தமிழ் எவ்வாறு வளரும்? அறிஞர்கள் எல்லாம் தமிழைக் கொல்வதற்காக சதியாலோசனை செய்தால் கூட, இதை விட வேறு யுக்தி கண்டுபிடிக்க முடியாது!

பாரதியார் எழுதுகிறார்: திருநெல்வேலியிலே ராஜ நிந்தனை வழக்கில் விசாரணை செய்யப்பட்டு வரும் சுப்பிரமணிய சிவனுக்கு, (சுப்பிரமணிய சிவா) வயது, 26; இவர், ஆறு ஆண்டுகளுக்கு முன், ரொம்ப சின்ன வயசுலேயே, சிவகாசி சப்-டிவிஷன் ஆபீசிலே, உத்தியோகம் பார்த்து வந்தார். ஆனால், உடல் நலன் போதாதென்று, அவரை அந்த வேலையிலிருந்து விலக்கி விட்டனர். இந்த விஷயத்தைத் திருநெல்வேலி போலீஸ் உத்யோகஸ்தர்கள் பலர் சாட்சி கூறும் சமயத்தில், மிக இகழ்ச்சியோடு குறிப்பிட்டனர்.

ஒரு போலீஸ்காரர், 'சிவன் தூத்துக்குடியிலே சிதம்பரம் பிள்ளையோடு ஒரே வீட்டில் வாசம் செய்து கொண்டிருந்தாரென்றும், இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதமென்றும், இதன் பொருட்டு சிவன், ஜாதியினின்று நீக்கப்படுவதற்கு தகுதி உடையவர்...' என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு போலீஸ்காரருக்கு மனுதர்ம சாஸ்திரத்தில், இவ்வளவு தூரம் ஆழமான ஞானம் இருப்பது பற்றி சந்தோஷம். சன்னியாச நிலை பெற்றவர்களுக்கு வர்ணாசிரம பேதம் கிடையாது என்ற விஷயம், 'போலீஸ் மனு நீதி'யில் சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது.

பிராமண ஜன்மம் எடுத்து, போலீஸ் உடை தரித்து, ஓர் மிலேச்ச (அன்னிய தேசத்திலிருந்து வந்த) அதிகாரியின் கீழ் கைகட்டி நின்று, காவல் வேலை செய்வது, சாஸ்திர தர்மம் தானா என்பதை, வேங்கட வரதாசாரியர் என்ற போலீஸ்காரர்

தான் படித்திருக்கும், மனு தர்ம சாஸ்திரத்திலே என்னை சொல்லியிருக்கிறது என்பதை கூற விரும்புகிறோம்.

'இஸ்ரேல் - ஒரு பார்வை' நூலிலிருந்து: சொந்த நாடு என்று ஒன்று இல்லாமல், நாடு, நாடாக சிதறிக் கிடந்தனர் யூத இன மக்கள். ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். யூதர்களுக்கு கொடுமை புரிவதில் தீவிரமாக இருந்தான் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் முறியடிக்கப்பட்டதும், ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டாவை, யூதர்களுக்கு உரிய நாடாக அறிவிக்க நேச நாடுகள் முன்வந்தன. ஆனால், யூதர்கள் அதை ஏற்கவில்லை. தங்கள் பழைய நாடான, இஸ்ரேலே வேண்டும். என்றனர். எனவே, அரபு பகுதியில், மீண்டும் யூதர்களின் இஸ்ரேல் அமைக்கப்பட்டது.

உலகம் எங்கிலும் இருந்த யூதர்கள், இஸ்ரேலில் குடியேறினர். வழக்கொழிந்து போன ஹீப்ரு மொழியை, மீண்டும் பேச்சு மொழியாக்கினர். பள்ளி, கல்லூரி பாடம் எல்லாம் ஹீப்ரு மொழியில்!

இன்று, அதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. பல யூதர்களுக்கு, இஸ்ரேல் சலித்துப் போய் விட்டது. விலைவாசி உயர்வு, கடுமையான வரிவிதிப்பு, வசிப்பதற்கு நல்ல வீடு கிடைக்காமை, அரபு நாடுகளுடன் இடைவிடாது நடக்கும் யுத்தம், இவையெல்லாம் சேர்ந்து, நவீன இஸ்ரேல் மக்களை, சலிப்படையச் செய்து விட்டது.

எனவே, மேற்கு நாடுகளுக்கு தற்காலிக விசா வாங்கிக் கொண்டு, சுற்றுலா பயணிகளைப் போல இஸ்ரேலை விட்டுப் புறப்படுகின்றனர். அப்படிப் போகிறவர்கள் அப்புறம் திரும்பி வருவதே இல்லை. சென்ற ஆண்டில் மட்டும் பல லட்சம் யூதர்கள் இஸ்ரேலிலிருந்து, 'எஸ்கேப்!' யூதர்களை எப்படி இஸ்ரேலிலேயே தக்க வைத்துக் கொள்வது என்பதுதான், இஸ்ரேலின் தற்போதைய பிரச்னை!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us